பயனர்:Kuru Kankeyan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிமுகம்

        வரலாற்றுச் சிறப்பு மிக்க பண்ணாகம் கிராமத்தின் வரலாறு பற்றி ஆராய்வதும், அதன் வரலாற்று அம்சங்கள் பற்றித் தெரிந்து கொள்வது சிறப்பாக பண்ணாகம் வாழ் மக்களுக்கும் பொதுவாக இலங்கை வாழ் மக்களுக்கும் மகிழ்ச்சி தரும் செயலாகும்.
         
        ஒரு நோயாளிக்குப் பிடித்திருக்கின்ற நோயின் வரலாற்றை அறிந்தால் தான் அந் நோயைக் குணப்படுத்துவது மருத்துவருக்கு இலகுவாக இருக்கும். அவ்வாறு ஒரு கிராமத்தின் வரலாற்றை அறிந்தால் தான் அக் கிராமத்தின் மேம்பாட்டிற்கு உதவ முடியும். அந்த வகையில் பண்ணாகம் கிராமத்தின் வரலாற்றைச் சிறப்பாக அறிந்தால் தான் பண்ணாகம் கிராமத்தின் வளர்ச்சிக்கு இலகுவாக உதவ முடியும்.
        இலங்கையின் ஆதி வரலாற்றை திட்டவட்டமாக அறிய முடியாதவிடத்துப் பண்ணாகம் கிராமம் பற்றி ஆதி வரலாற்றை திட்டவட்டமாகக் கூறுவது கடினம். ஆயிரம் மைல் துாரத்தை ஓர் அங்குல பரிமாணமாகக் கொண்டு வரையப்பட்ட புகோளப் படத்தில் நாம் வாழும் இலங்கை நாடு சிறிய குண்டூசித் தலைப்பளவினதாகவே குறிப்பிடப்படும். இலங்கையின் பரப்பளவு 65,610 சதுர கிலோ மீற்றர்.
        இலங்கை நாட்டின் வடக்குப் பக்கமாக அமைந்துள்ளது யாழ்ப்பாணம். அதன் மூன்று பக்கங்களும் கடலாற் சூழப்பட்டிருத்தலில் அது குடாநாடு எனப்படும். யாழ்ப்பாணக் குடாநாட்டினை தென்மராட்சி, வலிகாமம் கிழக்கு, வலிகாமம் வடக்கு, வடமராட்சி, வலிகாமம் தெற்கு, வலிகாமம் மேற்கு என ஆறு வலயங்களாக வகுக்கப்பட்டுள்ளது.
              
             பண்ணாகம் கிராமம் வலிகாமம் மேற்கு வலயத்தில் அமைந்துள்ளது. வலிகாமம் மேற்கு வலயம் சங்கானைக் கோயிற் பற்று, சுழிபுரம் கோயிற் பற்று, வட்டுக்கோட்டைக் கோயிற் பற்று, அராலி கோயிற் பற்று என நான்குபகுதிகளாக்கப்பட்டது. சங்கானைக் கோயிற் பற்றுள் பண்ணாகம் கிராமம் அமைந்துள்ளது. சங்கானைக் கோயிற் பற்றினை நிர்வாக வசதி குறித்து சித்தன்கேணி, சங்கானை கிழக்கு, வடலியடைப்பு, பண்ணாகம், பனிப்புலம், தொல்புரம் எனும் ஆறு கிராம அலுவலர் பிரிவுகளாக வகுத்துள்ளனர்.
        பண்ணாகம் வடக்கு எல்லை பனிப்புலம், கிழக்கு எல்லை சித்தன்கேணி, தெற்கு எல்லை தொல்புரம், மேற்கு எல்லை சுழிபுரம் என அமைந்துள்ளது. பண்ணாகம் கிராமத்தின் சுற்றளவு ஏறக்குறைய 3 மைல், 2 சதுர கிலோமீற்றர்.
        இற்றைக்கு நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் சித்தன்கேணி, பண்ணாகம், பனிப்புலம், வடலியடைப்பு எனும் கிராமங்கள் ஒரு கிராம அலுவலரின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்தன. பின்பு குடிசனப் பெருக்கம் காரணமாகவும், வேலையில்லாதோர் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், நிர்வாகச் சுலபத்துக்காகவும் அவை தனித்தனியாக எல்லைப்படுத்தப்பட்டன. இன்று பண்ணாகம் கிராம அலுவலரின் எல்லைகளும், கிராமத்தின் பரப்பளவுமே மேலே குறிப்பிடப்பட்டவையாகும்.
     பண்ணாகம் பெயருக்கான காரணம்
            1. இனிய இசையின் இருப்பிடம்.
            2. நன்கு பண்ணப்பட்ட இடம்.
            3. இனிய இசையே உருவான இடம்.
   


       பண்ணாகம் கிராமத்தின் அமைவிடம்
  https://www.google.lk/maps/@9.7592166,79.9564612,3a,21y,17.98h,85.99t/data=!3m6!1e1!3m4!1sWIc6I6DF0cSv3eiKb8nrgg!2e0!7i13312!8i6656

02. சமயம்

       இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் சைவசமயத்தவர்களே. சைவசமயதீட்சை பெற்ற உண்மையான சைவர்களாய், மது, மாமிசம் தீண்டாதவர்களாய், சைவாசாரம் உடைய புனிதமான சைவர்களாய் இன்றும் இருக்கின்றனர்.

03. சமூகம்

        இங்கு வாழும் மக்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல மிகவும் அன்னியோன்னியமாக வாழும் இவர்கள் பந்திபோசனம், களியாட்டு நிகழ்வுகள் என்பவற்றில் ஒருமித்து வாழ்பவர்கள்.இற்றைக்கு 8 தசாப்தங்களின் முன்னர் ஒரே குடும்பமாய் வாழ்ந்த இவர்கள் தங்களுக்குள்ளேயே திருமணம் முதலான பந்தங்களையும் வைத்துக்கொண்டனர். பின்னாளிற் பற்பல ஊர்களிலும் இருந்துவந்து மருவிய மாப்பிள்ளைகள் மணப்பெண்களின் தொடர்பால் விளைந்த நன்மைகள் சிலவும் உண்டு.

04.பழைமை

       இற்றைக்கு 8 தசாப்தங்களின் முன் இங்கு வாழ்ந்த குடும்பங்கள் 90 வரையிலேயே இருக்கும்.மக்கள் தொகையும் அப்போது 700 பேருக்கு உட்பட்டதாய் இருக்கும்.திருமணம் செய்த பின்பும் பிள்ளைகள் பெரும்பாலும் பெற்றோருடன் சேர்ந்தே வாழ்ந்தனர்.இன்று 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.வெளிநாட்டில் பண்ணாகத்து இளைஞர்கள் முதியோர்கள் பலரும் வாழ்ந்து வருகின்றனர்.


05.உணவு அன்றும் இன்றும்

         மாரியில் நெல் விளைவிப்பர் கோடையில் குரக்கன், சாமை, பயறு, வரகு, எள்ளு போன்ற தானியங்களும் மரவள்ளி, வற்றாளை போன்ற கிழங்கு வகைகளும் வாழை, கத்தரி, வெண்டி, மிளகாய், வெங்காயம், புகையிலை போன்ற பயிர்களும் செய்வர்.எல்லோருடைய வளவுகளிலும் அந்நாளில் கற்பக தருவாகிய பனைமரங்கள் நின்றன.தேநீர், கோப்பி, கொக்கோ என்பன அறியப்படாத பானங்களாகும்.இயற்கையாக பெறப்பட்ட உணவு வகைகளையும் பானங்களையும் உண்டதனால் பலமும் நசுகமும் துணிவும் கொண்ட வீர மக்களாக விளங்கினர்.நுாற்றாண்டுக்கு மேலும் சிலர் வாழ்ந்தனர்.உணவில் தன்னிறைவு கண்டனர்.

06.நாணயம்

         அந்தக்காலத்தில் நாணயத்தின் பெறுமதி மிகக் கூடுதலாக இருந்தது.ஒரு குடும்பத்துக்கு உணவு, உடை, படிப்பு முதலானவற்றுக்கு மாதம் ரூபா 3 போதுமானதாக இருந்தது.வயல் வேலைகளாற் பெறும் பிரயோசனம் வீட்டில் கடகம், பெட்டி இழைத்து பெறும் வருமானம் சேமமாகக் கொண்டு குறைந்த சம்பளம் பெற்றவரும் காணி வாங்கினர்.அக்காலத்து ஒரு ரூபாயின் பெறுமதி இன்று பதினாயிரம் ரூபாவுக்கு மேல் வந்து விட்டது. இன்று 1சதம், ½சதம், 5சதம், 10, 25 சதங்களை காணமுடியாது.

07. திருமணமுறை

        அக்காலம் ஒவ்வொரு குடும்பத்து சகோதரர்களும் தங்கள் ஆண்மக்களையோ பெண்மக்களையோ முறைமச்சான் முறைமச்சாளாய் உள்ளவருக்கே ஒருவருக்கொருவர் உதவியாயிருக்கும் விதத்தில் திருமணம் முடித்துத் தத்தமது வீடுகளிலேயே தங்கி வாழச் செய்தனர்.பெற்றோர் தமது சொத்துக்களைப் பிள்ளைப் பங்காகக் கொடுத்து ஆண்மக்களையும் பெண்மக்களையும் சமத்துவமான குடும்பமாகச் சேர்த்து வைத்தனர்.சீதனம் என்ற பெயரில் இந்நாளில் பெற்றோர் உத்தியோகம் பார்க்கும் வரன்மாரை அதிகவிலை கொடுத்து வாங்குகின்றனர்

08. பண்ணாகப் பாரம்பரியம்

         அந்தக்காலத்தில் இற்றைக்கு 80 வருடங்களுக்கு முன் இங்குள்ளாரின் வீட்டில் எவராவது மரணமடைந்தால் அழுகை ஒலிகேட்டால் அக்கம் பக்கத்திலுள்ளோர் விரைந்து செல்வர்வீ,ட்டுப்பொருட்களை ஒதுக்கி ஒழுங்காக்குவர் தமது வீடு போல் சகல வேலைகளையும் செய்வர், அத்துடன் கிரியை வேலைகளையும் செய்வர், அத்துடன் ஒவ்வொரு குடும்பமும் மரணம் நிகழ்ந்த குடும்பத்துக்கு தங்கள் சக்திக்கேற்ற பண உதவியும் செய்வர்.தற்பொழுது அந்நிலை மாறி  மரணம் நிகழ்ந்த குடும்பத்தாரே எல்லாவற்றையும் வாடகைக்கு பிடிக்கும் தேவை ஏற்பட்டுவிட்டது. இன்னும் சில ஆண்டுகளில் கிராமங்களில் பெரிய வளவுகளில் அவரவர் தங்கள் இனத்தவரின் உடலை தகனம் செய்யும் நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
         முன்னாளில் போக்குவரத்துக்கு மாட்தடு வண்டி குதிரைவண்டி என்பனவே பயன்படுத்தப்பட்டன.அதனால் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு செல்பவர்கள் கால்நடையாகவே போக்குவரத்து செய்தனர். அப்படித் துார இடங்களுக்கு செலபவர்கள் சுமைகளை இறக்கி வைத்துச் சிறிது நேரம் ஆறிச்செல்வதற்காக வீதியோர வீடுகளுள்ள இடங்களில் மடங்கள் அமைக்கப்பட்டன.
         எவரையும் எதிர்பாராது தாம் தேடிப் பைடத்த உணவுப் பொருட்களைப் பெருமிதத்துடன் உண்டு திருப்தி பெற்றவர்களாய் வாழ்ந்தனர் நம்முன்னோர்.
        வருடப்பிறப்பு நாளில் போர்த்தேங்காய் அடிக்கும் கலை தீவிரமாய் இருக்கும். மாசிச் சிவராத்திரி காலகட்டத்தில் நாடகமேடை அமைத்து நாடகமாடுவார்கள்.சிவராத்திரி பகல் வேைளயிலும் அடுத்த நாள் பகலிலும் அன்ன ஊஞ்சல் ஆட்டம் நடைபெறும்.

09.கல்வி

      ஆரம்பத்தில் படிப்பதற்கு பாடசாலைகள் எதுவும் இல்லாத காலப்பகுதியில் 1876 ம் ஆண்டு சுழிபுரத்திலே உத்தியோக மொழியாக ஆங்கிலம் படிப்பிக்க கனகரத்தின முதலியார் அவர்கள் விக்ரோறியாக் கல்லுாரியைத் தாபித்து நடத்தினார்.அப்போது ஊர்கள் தோறும் சைவப்பாடசாலைகள் கட்ட வேண்டுமென்ற எழுச்சி தோன்றியிருந்தது.
  
      1. =யா/பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலை உதயம்=
                    பண்ணாகத்திலும் சைவப்பாடசாலை கட்டவேண்டுமென்ற எண்ணம் திரு.தில்லையம்பலம் முருகேசு கந்தையா(மலாய் நாட்டில் வேைல செய்தவர்) அவர்களின் உள்ளத்தில் தோன்றியது.வெளிநாடுகளில் குறிப்பாக மலாய் நாட்டில் உத்தியோகம் பார்த்த பண்ணாகம் வாசிகளுக்கு அழைப்பு அனுப்பி ஒரு கூட்டம் நடாத்தினார், அதில் தமது நோக்கத்தை எடுத்து கூறினார், எல்லோரும் அவரைப்பாராட்டி உதவி செய்ய ஏகமனதாக வாக்களித்தனர்.இக்ம கூட்டத்தில் மலாயா வித்தியா சங்கம் உருவாக்கப்பட்டது.
               1925ம் ஆண்டிண் முற்பகுதியில் அவர் ஊருக்கு வந்து தமது நண்பர்களையும் பெரியோர்களையும் அழைத்து பாடசாலை கட்டவேண்டுமென்ற எண்ணத்தை தெரிவித்தார்.உடனடியாக பாடசாலை கட்டும் பணிகள் மலாயா வித்தியா சங்கத்தினர் மற்றும் கிராம வாசிகளின் உதவியுடன் தொடங்கியது.இதற்கு மெய்கண்டான் பாடசாலை என் பெயர் சூட்டப்பட்டது.1927ம் ஆண்டுகளில் அரசினர் பாடசாலையாக்குவதற்காக வைக்கப்பட் பரீட்சையில் இந்த வட்டாரத்திலேயே சிறந்த பாடசாலையாக புகழ் பெற்றது.
பாடசாலை முகப்பு தோற்றம்


படிமம்:PMMV.jpg.png
பாடசாலை இலட்சணை
     பாடசாைலக் கீதம்
 வாழ்க மெய்கண்டான் மகாவித்தியாலயம் 
 வாழிய வாழியவே 
 வாழ்வினில் வளங்களை வழங்கிடும் எங்கள் 
 அன்னை வாழியவே
 பண்ணாகம் தனிலே கந்தையாப் பெரியோன் 
 ஏற்றிய ஒளிவிளக்கே 
 பாரினில் நாமே பாங்குடன் வாழ 
 இலங்கும் கலாலயமே 
 நேரிய செவ்வழி சென்றே நாமும் 
 நல்வழி வாழ்ந்திடவே 
 பாரிய நின்புகழ் பார்தனில் ஓங்கிட 
 வாழிய வாழியவே! 
 கல்வியும் கலைகளும் 
 கனிவுடன் போற்றியே 
 வளரும் கலாலயமே 
 பல்கலைக்கழகமாய் பரிணமித்தே நீ 
 என்றென்றும் வாழியவே! 
 வாழ்க மெய்கண்டான் மகாவித்தியாலய
 மாதா வாழியவே! 
 தாளினைப் பணிந்தோம் தரணியில் நின்புகழ் 
 என்றென்றும் வாழியவே! 
 வாழிய வாழியவே! 
 வாழிய வாழியவே!
                     பண்ணாகத்தின் கலைக்கண்ணான யா/பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையைப்பற்றி பார்த்தோம்.அடுத்து இக் கிராமத்தின் அருட்கண்ணாக- ஞானக்கண்ணாக விளங்கும் விசவத்தனை முருகழூர்த்தி கோயிலைப்பற்றி பார்ப்போம்.

10.விசவத்தனை முருகழூர்த்தி கோயிலின் வரலாறு

விசவத்தனை முருகன் கோயில் முகப்பு தோற்றம்
             இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன் வாழ்ந்த கதிர்காமர் என்னும் பெரியார் தமக்கு உரித்தான காணியிலே சிறிய கொட்டில் கட்டி வைரவசூலம் பிரதிட்டை செய்து விளக்கு நாள்தோறும் வைத்து வழிபட்டு வந்தார்.சில வருடங்களின் பின்னர் அந்தக் கொட்டிலைப் பெருப்பித்து வழிபடுவோர் வசதியாக இருந்து வழிபடச் செய்தார். ஆண்டு தோறும் வைகாசி மாதத்து முதற் செவ்வாயில் விசேட விளக்கு வைத்து, அடுத்த செவ்வாய்க்கிழமையில் வழிபடுவோர் எல்லோரும் பொங்கி, முக்கனிமடைபரப்பி, துாபதீபங்கள் காட்டி மிக்க பக்தியுடன் வழிபாடு செய்து வந்தனர். அந்தக் காலத்தில் பிராமணக் குருமார் பூசைக்கு நியமிக்கப்பட்டனர்.


             கதிர்காமரின் மகன் விசுவநாதரின் காலத்தில் அந்தக் கொட்டில் மடாலயமாகப் பெருப்பித்து கட்டப்பட்டது. அந்த மடாலயத்தில் மக்கள் சிலர் கூடியிருந்து கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம் என்பன படித்துக் கலந்துரையாடி அறிவைப் பெருக்கினர்.
             விசுவநாதரின்  மகன்களில் ஒருவரான சின்னட்டியர், அவரின் காலத்திலே வைரவசுவாமி மடாலயத்துக்கு அயலாகக் கந்தசுவாமியாருக்கும் மடாலயம் அமைக்கப்பட்டது. சுவாமிகளுக்குப் பூசைக்குத் தேவையான பூக்களை உண்டாக்கும் நந்தவனம் அமைக்க திரு.கனகசபை பொன்னையா என்பவர் தமக்கு உரித்தான கொடுத்து உதவினார். இரண்டு மடாலயங்களிலும் சீராகப் பூசைகள் நடைபெற்று வந்தன.
           சின்னட்டியாரின் மகன்களில் ஒருவரான திரு.செல்லப்பா அவர்களின் காலத்தில் முருகப்பெருமானுக்கு ஆகம முறைப்படி அமைந்த ஆலயம் அமைந்தது. 1910 ஆம் ஆண்டிலே கர்ப்பக்கிருகம் திருமஞ்சனக்கிணறு, மகாமண்டபம் என்பன அமைக்கப்பட்டன எழுந்தருளி ழூர்த்திகளும் உருவாக்கப்பெற்றன. திரு.செல்லப்பா அவர்கள் மரக்கறி வியாபார பெரிய வர்த்தகராவார், தமது தொழிலால் வந்த வருவாயையும் மலாயாவுக்குச் சென்ற இக் கிராமத்தவர் கோயிலுக்கென அனுப்பிய பணத்தையும் இங்கு வாழ்ந்து வழிபடுவோரின் சிரமதான உதவிகளையும் பெற்று 1912 ஆம் ஆண்டில் முதலாவது கும்பாபிசேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மண்டலாபிசேகம், மகாசங்காபிசேகம் என்பன நடந்தன.


          பரிபாலன சபை உதயம்
                இந்த நிலையிலே கோவில் நிர்வாகம் பொதுவாக வேண்டுமென்ற எண்ணம் வழிபடும் மக்கள் மத்தியில் வலுப்பெற்றது. அந்த எண்ணத்துக்கு இசைவு தெரிவிக்கும் வகையில் திரு.மாணிக்கம் வழிபடுவோர் அனைவருக்கும் அறிவித்து 1958ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் பொதுக் கூட்டம் கூட்டினார். அவருடைய மனப்பூர்வமான சம்மதத்துடன் விசவத்தனை முருகழூர்த்தி கோயிலின் பரிபாலன சபை அமைக்கப்பட்டது.
           இக் கிராமத்திலே வீதிக்கு வீதி வைரவர் கோவில்கள், காளி கோவில்கள் இருந்தாலும் இந்தக் கிராமத்து மக்கள் முருகப் பெருமானையே தங்கள் குல தெய்வமாகப் போற்றி வழிபட்டு வருகின்றனர்.





 1966ஆம் ஆண்டில் புதிய சித்திரத்தேர் உருவானது. தேர்மேடை, தேர்த்தரிப்பிடம் என்பனவும் செய்யப்பட்டன. 1982 ஆம் ஆண்டில் நான்காவது கும்பாபிசேகமும் 1998 இல் ஐந்தாவது கும்பாபிசேகமும் நடைபெற்றன.







11.இங்கு விளங்கிய சங்கங்கள்

          பண்ணாகம் கிராமத்திலே காணப்படும் சங்கங்களைப் பற்றி பார்ப்போம்
   01. பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலை பரிபாலன சபை
               பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம் உருவாகுவதற்கு உறுதுணையாயிருந்தது மலாயா வித்தியா சங்கம் அதனை உருவாக்கிய செயலாளர் திரு.தில்லையம்பலம் முருகேசு கந்தையா மலாயா நாட்டிற்கு சென்று உத்தியோகம் வகித்த இந்தக் கிராமத்துப் பெரியோர்கள் 1925 ஆம் ஆண்டிற் கூடிய கூட்டத்தில்இப்பெயரை இட்டனர்.
               சைவசமயமும் தமிழ்க்கல்வியும் வளர்ப்பதற்கு வாய்ப்பான முறையிலே இச்சபை தலைமையாசிரியர்களையும் உதவியாசிரியர்களையும் நியமித்துப் பாடசாலையை நல்ல வண்ணம் நடத்தியது. 1962 ஆம் ஆண்டில் அரசாங்கம் பாடசாலைகளைச் சுவீகரித்த பின்பு இச் சங்கம் தொழிற்பட இயலவில்லை.
   02. பண்ணாகம் ஸ்ரீ முருகன் சனசமூக சேவா வாலிபர் சங்கம்
               இது பண்ணாகம் தெற்கு மாணவர் தேர்ச்சிச் சங்கம் என்ற பெயரில் நடைபெற்றது. 1929 ஆம் ஆண்டில் தாபிக்கப் பெற்றது.

தேசத்தொண்டன் என்னும் பெயருடைய பத்திரிகை கையெழுத்துப் பிரதியாக மாதமொருமுறை வெளியாகும் ஆண்டு தோறும் விழாக்களும் நடத்தப்பட்டன.

               இந்தச் சங்கத்துக்கென கோவில் முன் நிலத்தில் முருகன் நிலையம் என்ற மண்டபம் அமைக்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டில் திறப்புவிழா நடைபெற்றது. அரசாங்க நன்கொடை பெறுவதற்காகப் பின் வந்த நிர்வாகிகள் இதன் பெயரைப் பண்ணாகம் சிறீ முருகன் சனசமூக சேவா வாலிபர் சங்கமென மாற்றினர்.
             இந்தச் சங்கத்துக்கென கோவிலின் மேற்கு வீதியில் அழகான மண்டபம் அமைத்து வாலிபர்கள் நல்லவண்ணம் சங்கத்தை நடாத்தி வருகின்றனர். முன்பு தேசத்தொண்டன் என்னும் பெயரில் மாதந்தோறும் கையெழுத்துப் பிரதியாக வந்த பத்திரிகை சிறிது காலத்தில் அறிவுச் சுடர் என்னும் பெயரில் வெளிவந்தது. தற்போது அது முற்றாக நிறுத்தப்பட்டு விட்டது. இன்று இக் கட்டிடத்திலே உதயன், தினக்குரல், வீரகேசரி, வரம்புரி மற்றும் பல பத்திரிகைகள் இக் கிராமத்து மக்களிடம் மாதந்தோறும் பணம் பெறப்பட்டு மக்கள் வாசிப்பதற்காக வைக்கப்படுகின்றன.
     03. பண்ணாகம் தெற்கு ஐக்கிய நாணய சங்கம்.
             கமத்தொழில் செய்யும் மக்கள் அவ்வப்போது தாங்கள் பெறும் சிறுவருமானத்தை உடனுக்குடன் சேமிக்கவும், அவசியமான பெரிய தேவைகள் ஏற்படும் போது தொகையாகக் கடனெடுத்துத் தங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் ஆதாரமாக இருப்பதற்கென 1930 ஆம் ஆண்டில் பண்ணாகம் தெற்கு ஐக்கிய நாணய சங்கத்தைத் தாபித்தனர்.
            இச் சங்கமானது தனிநபர்கடன், ஈட்டுக்கடன், மரணசகாயநிதியும் கொடுத்து வருகிறது. 1980 ஆம் ஆண்டில் மணிவிழாவும், 2010 ஆம் ஆண்டில் 80 ஆவது ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது.
     04. பண்ணாகம் இளம் விவசாயிகள் கழகம்
             விஞ்ஞான முறையில் நுாதனமான முறையில் விவசாயம் செய்ய மக்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இக் கழகம் இக் கிராமத்தின் பிரதான தெருவிலுள்ள வீடொன்றில் நுாற்றுக்கணக்கான நல்ல இனக் கோழிகளை வளர்த்து மாதிரிக் கோழிப்பண்ணை நடத்தியது. நாட்டில் வன்முறை பரவியதால் கோழிகளை விற்று கிருமிநாசினி தெளி கருவிகள் வாங்கிக் குறைந்த வாடகைக்கு விட்டு மக்களுக்கு உதவி செய்தனர்.
              தொகையாக இருந்த முதற்பணத்தைக் கடன் பெறும் விவசாயிகளுக்கு கொடுத்து முதலை வளர்த்தனர். விவசாய உத்தியோகத்தர்களை அழைத்து அவர்களைக் கொண்டு விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தனர். ஆண்டுதோறும் கணக்கறிக்கை சமர்ப்பித்து பொதுக் கூட்டங்கள் நடாத்தப்பட்டன. ஆனால் இன்று இச் சங்கம் இயங்குவதில்லை.
     05. பண்ணாகம் இந்து சமய விருத்திச் சங்கம்
              விசவத்தனை முருகப்பெருமானுடைய சந்நிதியைத் தங்கள் சங்க நிவையமாகக் கொண்ட இந்து சமய விருத்திச் சங்கத்தினர் பாடசாலையிற் படிக்கும் மாணவர் மத்தியிற் சமயம் மற்றும் தமிழ்ப் பாடப் போட்டிகள், எழுத்துப் போட்டி, செய்கைமுறைப் போட்டி, திருமுறை ஓதும் போட்டி என்பன நடாத்தி பரிசில்களும் வழங்கப்பட்டன. ஆனால் இன்று இச் சங்கம் இயங்குவதில்லை.
     06. பண்ணாகம் மக்கள் சிக்கனக் கடனுதவும் கூட்டுறவுச் சங்கம்
               06.09.1982 இல் தொடங்கிய இச் சங்கம் 10.01.1983 இல் J/1696 ஆம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டது. சங்க உறுப்பினர் தொகையிற் கூடியோர் மகளிர். சங்கப் பணிகளை பதவியிலிருப்போர் எவ்வித ஊதியமும் பெறாது செய்து வருகின்றனர்.
              பண்ணாகம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்திலே மாதந்தோறும் இச் சங்கம் பணம் சேகரித்தும் கடன் கொடுத்தும் கருமமாற்றுகின்றது. 18 வருடங்களுள் இச் சங்கமானது பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது.
     07. பண்ணாகம் அண்ணா கலை மன்றம்
முகப்புதோற்றம்




             1969 ஆம் ஆண்டில் அச் சங்கம் தாபிக்கப்பட்டது. இச் சங்கமானது பாலர் பாடசாலை நடாத்தி வருகின்றது. கிடுகுகள் பின்னுதல் அப்பளம் தயாரித்தல் ஊடாக சங்கத்துக்கு வருவாய் ஈட்டினர். தயார் நிலையிலுள்ள தகரப்பந்தல்களை வாடகைக்கு விட்டும் வருவாய் ஈட்டினர். அனேக இளைஞர்களை சங்க உறுப்பினராக்கி உத்வேகத்துடன் சங்க வளர்ச்சிக்காக பாடுபட்டனர்.
              ஆரம்பத்தில்   பண்ணாகம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்திலே தங்கள் சிறுவர் பாடசாலையை நடாத்தவும் கூட்டங்கள் கூட்டவும் பயன்படுத்தினர். இன்று பண்ணாகம் அண்ணா கலை மன்றத்துக்கென ஒரு கட்டிடம் கட்டி அதில் சிறுவர் பாடசாலை நடாத்தி வருகின்றனர்.
     08.  பண்ணாகம் கிராம அபிவிருத்திச் சங்கம்
                1940 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இச் சங்கம்  விசவத்தனை முருகப்பெருமானுடைய சந்நிதியைத் கூட்டம் கூடுமிடமாகக் கொண்டிருந்தது. 1976 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.ஆ.தியாகராசா அவர்களின் சிபாரிசின்படி பெற்ற ரூபா 25000 கொண்டு ஆயுள்வேத வைத்தியர் செ.வைத்தியலிங்கம் தருமமாகக் கொடுத்த நிலத்தில் கட்டிடம் அடைக்கப்பட்டது.
               பண்ணாகம் கிராமம் தொடர்பான வீதித்திருத்தம் எல்லை வேலிப் பிணக்குகள் தீர்த்தலை முதல் நோக்கமாகக் கொண்டது இச் சங்கம்.
    09. மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம்
              1973 இல் தாபிக்கப்பட்டது மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம். தொடக்கத்தில் அரசினர் உதவிய பணத்தைக் கொண்டு மக்களுக்கு வருமானம் தரக்கூடிய மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்பு தையல் வேலை பன்ன வேலைகளில் பயிற்சியளிக்கப்பட்டது. அப்பயிற்சி பெற அயற் கிராமங்களில் இருந்தும் பிள்ளைகள் வந்தனர்.
             இச் சங்கமானது ஏதாவது நிறுவன உதவிகளை மக்களுக்காக பெற்றுக் கொடுக்கின்றது. அத்துடன் இச் சங்க நிலத்தில் பிரதிட்டை செய்யப்பெற்ற ஆலடி வைரவப் பெருமான் கோயில் இச் சங்கத்தினரின் உதவியால் வைரக்கல்லால் கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இன்றும் வைரவப் பெருமான் கோயில் பராமரிப்பை இச் சங்கமே செய்கின்றது.
    10. பண்ணாகம் அம்பாள் கலை மன்றம்



            தலை கொடுத்தேனும் கலை காப்போம் என்பது இச் சங்க இளைஞர்களது தாரக மந்திரம்.நாடகம் இன்னிசைப்பாடல் கற்பனை ஆக்கங்களில் வல்லவர்களைச் இச் சங்கம் வளர்த்து விட்டது.
             அலங்கார மாலைகள் நாடகமேடை சமையலுக்கு தேவைப்படும் பாத்திரங்கள் கதிரைகள் என்பன வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டினர். தற்போது விசவத்தனை முருகப்பெருமானுடைய சந்நிதியின் கிழக்குப் பகுதியில் கல்யாண மண்டபம் ஒன்று இச் சங்கத்தால் கட்டப்பட்டு அதன் ழூலம் பெறும் வருமானத்தைக் கொண்டும் செயற்பட்டு வருகின்றது.


                இவ்வாறான சங்கங்களின் சேவையுடன் பண்ணாகம் கிராமத்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

உசாத்துணை[தொகு]

  • பண்ணாக மான்மியம்- பண்டிதர் அ. ஆறுமுகம் [2001]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kuru_Kankeyan/மணல்தொட்டி&oldid=2439116" இலிருந்து மீள்விக்கப்பட்டது