பயனர்:Kulachal yoosuf/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடூர் கோபாலகிருஷ்ணன்

மூல நூலாசிரியர் : அக்பர் கக்கட்டில்

மொழிபெயர்ப்பு ஆசிரியர் : குளச்சல் மு. யூசுப்

மொழிபெயர்ப்பு நூலின் பக்கங்கள் : 125

வெளியீடு : காலச்சுவடு

மலையாளத்தில் அக்பர் கக்கட்டில் எழுதிய ‘வரு அடூரிலேக்கு போகாம்’ என்னும் நூலின் தமிழாக்கம் இது. சில மாற்றுத் திரைப்படங்கள் குறித்த தன்னுடைய பார்வையையும், தான் இந்நூலை மொழிபெயர்த்த தற்கான காரணங்களையும் நூலின் முன்னுரையில் குளச்சல் மு.யூசுப் குறிப்பிட்டுள்ளார். “தமிழில் நான் பார்த்த சில மாற்றுத் திரைப்படங்கள் என்னுள் நிறைய சிந்தனைகளை உருவாக்கின. இதைப் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு, சுய தேவைகள் சார்ந்து உருவாக்கப்படும் சில கருத்தியல் போக்குகள் இடம் தரவில்லை. இதன் மாற்று வடிவமாகவும் குறும்படங்கள் பற்றிய விவாதங்களின் திசைவெளியைத் தீர்மானிக்க உதவும் பொருட்டும் அடூர் கோபால கிருஷ்ணனைப் பற்றி அக்பர் கக்கட்டில் எழுதிய இந் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்” (முன்னுரை, ப.12) என்கிறார் யூசுப்.

இந்நூலில் இந்தியத் திரையுலகின் முக்கிய இயக்கு நர்களில் ஒருவரான அடூர் கோபால கிருஷ்ணனின் இளமைக்கால வாழ்க்கை, அவரது குடும்ப உறுப்பினர்கள், அவர் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை, அவரது திரைப்பட அனுபவங்கள், அவருடைய சக கலைஞர்கள் மற்றும் இலக்கியவாதிகள் குறித்த இயக்குநரின் கருத்துகள் ஆகியவற்றைத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். அடூரின் ஒன்பது மலையாளத் திரைப்படங்களைக் குறித்த நூலாசிரியரின் விமர்சனமும் அடூருடனான நேர்காணலும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

திரைப்படங்களாவன: சுயம்வரம் (1972), கொடியேற்றம் (1977), எலிப்பத்தாயம் (1981), முகாமுகம் (1984), அனந்தரம் (1987), மதிலுகள் (1989), விதேயன் (1993), கதாபுருஷன் (1995), நிழல்குத்து (2002). பிற்சேர்க்கையில், சுகுமார் அழிக்கோடு, மம்மூட்டி, எம்.ஏ.பேபி, எஸ்.பாசுரசந்திரன், ஜெ.தேவிகா ஆகியோரது கேள்வி களுக்குரிய அடூரின் பதில்களும், அடூரின் மகள் அஸ்வதியின் நேர்காணலும் இணைக்கப்பட்டுள்ளன.

1941இல் பிறந்த அடூர் கோபாலகிருஷ்ணன் தனது எட்டாவது வயதிலேயே நடிகராக அரங்கேறியவர். கதை, கவிதை எழுதுதல், நடிகர், நாடகாசிரியர், இயக்குநர் என்னும் பல நிலைகளில் படிக்கும் காலத்திலிருந்தே செயல்பட்டு வந்தவர். இவர் 23 குறும்படங்களையும், மலையாளத்தில் 6 திரைக்கதை நூல்களையும், ஆங்கிலத்தில் 3 திரைக்கதை நூல்களையும், மலையாளத்தில் ‘சினிமயுடெ லோகம்’, ‘சினிமா அனுபவம்’, ‘சினிமா, சாகித்யம், ஜீவிதம்’ ஆகிய திரைப்படம் சார்ந்த மூன்று நூல்களையும் எழுதியுள்ளார். 1982இல் பண்பாட்டுக் கலை பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டியூட் விருது இவருடைய ‘எலிப்பத்தாயம்’ என்ற திரைப்படத்திற்குக் கிடைத்தது. 1983இல் பத்மஸ்ரீ விருது, 1984இல் சிறந்த திரைப்பட நூலுக்கான தேசிய விருது, 2003இல் பிரெஞ்சு அரசாங்கம், கலைப்பண்பாட்டுத் துறையின் ‘கமான்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அன்ட் லெட்டர்ஸ்’ என்னும் விருது, 2004இல் தாதாசாகேப் பால்கே விருது, 2005இல் பத்ம விபூஷன் விருது, 2006இல் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் ஆகியவை கிடைத்துள்ளன.

அடூரின் ஒன்பது திரைப்படங்களில் இரண்டைத் (மதிலுகள், விதேயன்) தவிர பிற ஏழு திரைப்படங்களின் கதைக்கருக்களும் அடூருடையவையே. சமூகச் சட்டங்களுக்கெதிராக வாழ முற்பட்டவர்களைச் சமூகம் எவ்வாறு குற்றவாளிகளாகப் பார்க்கிறது என்பதையும் எந்த ஒரு மனிதனும் சமூகத்தை விட்டு விலகி நின்று விட முடியாது என்பதையும் மையமாக வைத்து உருவானதே ‘சுயம்வரம்’ ஆகும். உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதே ‘கொடியேற்றம்’ என்னும் திரைப்படம் ஆகும். பொறுப்பில்லாமல் நடந்த ஒரு மனிதன் குடும்ப வாழ்க்கைக்குள் நுழையும் போது அவனுக்குக் கிடைக்கும் வாழ்க்கை அனுபவங்களும், அவனிடம் ஏற்படும் மாற்றங்களுமே இதில் கூறப்பட்டுளன.

அடூரின் படங்களில் முதல் வண்ணப்படம் ‘எலிப்பத்தாயம்’ ஆகும். ஒரு தாயின் பிள்ளை களான 3 சகோதரிகளையும், ஒரு சகோதரனையும் கொண்ட குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்டதே இப்படம். வாழ்க்கையில் தோல்வி ஏற்படும் போது மதுக்கோப்பைக்குள் சுயப் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளும் மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியதே ‘முகாமுகம்’ ஆகும். மனப்பிறழ்வு கொண்ட மனிதன், தான் எப்படி இந்நிலைக்கு ஆளானேன் என்பதைப் பிறரிடம் கூறுவதற்கு முயற்சி செய்வதே ‘அனந்தரம்’ ஆகும்.

வைக்கம் முகம்மது பஷீரின் ‘மதிலுகள்’ என்ற நாவலே அடூரின் ‘மதிலுகள்’ என்ற திரைப்படம் ஆகும். சிறைச்சாலையின் சுதந்திரமின்மைக் கூட, ஆழமான அன்புடையவர்களுக்குச் சுகமான அனுபவங்களாக மாறும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். சக்கரியாவின் ‘பாஸ்கர பட்டேலரும் எனது வாழ்க்கையும்’ என்ற கதையே அடூரின் ‘விதேயன்’ என்ற திரைப்படம் ஆகும். அதிகாரத்தின் கட்டமைப்பினைப் பற்றியும், அடிமைத்தனத்தைப் பற்றியும் கூறுவதே ‘விதேயன்’ ஆகும்.

அடூரின் 46 ஆண்டுகால சொந்த அனுபவங்கள், பிறரது அனுபவங்கள், அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றில் தன்னைப் பாதித்த நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கிய திரைப்படமே ‘கதாபுருஷன்’ ஆகும். கொலை செய்வதற்கு விதிக்கப்பட்ட அதாவது ஒரு தூக்குமரத் தொழிலாளியின் கதையைக் கூறுவதே ‘நிழல்குத்து’ ஆகும்.

நவீன காலத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஊடகமாகக் கருதப்படும் திரைப்படத்தை உருவாக்கும் ஒரு கலைஞன் மனித மனங்களை வாசித்து அறிந்து கொள்ளும் திறன் பெற்றவராகவும், தன்னையும், சமூகத்தையும் பற்றிய நல்ல புரிதல் உள்ளவராகவும், யதார்த்ததை வெளிப்படுத்தும் திறன் உடையவராகவும் இருத்தல் வேண்டும். இவரது திரைப்படங்கள் அனைத்துமே தனிமனிதன் மற்றும் சமூகத்தின் யதார்த்தங்களை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. ஒரு சிறந்த திரைப்பட இயக்குநர், கலைஞர் என்ற தகுதிக்கு அப்பால் இவர் ஒரு அன்பு நிரம்பிய மனிதர் என்பதை அக்பர் கக்கட்டில் வரிகளிலிருந்தும், முற்போக்குச் சிந்தனையாளராக மட்டுமல்லாமல், குடும்பத்தில் சிறந்த தந்தையாகவும் இருக்கிறார் என்பதை அவரது மகள் அஸ்வதியின் நேர்காணலிலிருந்தும் அறிய முடிகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kulachal_yoosuf/மணல்தொட்டி&oldid=2228931" இலிருந்து மீள்விக்கப்பட்டது