பயனர்:KInoja/திருமறைக் கலாமன்றத்தின் அரங்க முகாமைத்துவத்தின் தொடர்ச்சியான இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமறைக் கலாமன்றத்தின் உருவாக்கமும், வளர்ச்சியும்[தொகு]

1965 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டுடன் 51 ஆண்டுகளை நிறைவுசெய்து நிற்கும் திருமறைக் கலாமன்றம் இன்று யாழ்ப்பாண மண்ணின் பண்பாட்டு நிறுவனமாக காணப்படுகிறது. அதன் அடிப்படை இயங்குதளமாக இருக்கின்ற நடவடிக்கையாக நாடகம், கலை, இலக்கியம், கலைக்கான கல்வி நடவடிக்கைகள், சமூகச் செயற்பாடுகள், சமாதான முன்னெடுப்புக்கள் போன்றவற்றைக் கூறலாம்.

கடந்த 51 ஆண்டுகளில் இம்மன்றம் செயற்படுத்திய அரங்க முயற்சிகள் பல்வேறுபட்டவையாக காணப்படுகின்றன. ஈழத்து நாடக வரலாற்றில் நின்று நிலைக்கக் கூடிய பல செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

"1965 ஆம் ஆண்டு உரும்பிராயில் மரியசேவியர் அடிகள் பணி செய்த காலத்தில் "திருமறைக்கலாமன்றம்" எனும் பெயருடன் இவ் அரங்க இயக்கம் செயற்படத் தொடங்கியது. உரும்பிராய், சுன்னாகம், மல்லாகம் என ஒன்றிணைந்த கலைஞர்களைக் கொண்டு மரியசேவியர் அடிகள் திருப்பாடல்களின் நாடகங்களை மட்டுமன்றி பல்வேறு விவிலிய நாடகங்கள், இலங்கை வானொலிக்கான நாடகங்கள், கூத்துக்கள் எனப் பலவற்றையும் தயாரித்தார்." பொருளாதாரமோ, நிதி வளமோ எதுவுமல்லாத அக்காலச் சூழலில் கலைஞர்களின் முழுமையான அர்ப்பணிப்புடனும் உடலுழைப்புடனும் திருமறைக்கலாமன்றம் வளர்ச்சி பெற்றது.

மரியசேவியர் அடிகள் குருநகர் பங்கிற்கு நியமிக்கப்பட்ட பின்னர் ஆட்பலம் அதிகரித்த அரங்கப் படைப்புக்களும் விரிவு பெற்றன. யாழ்கோட்டையைப் பின்னணியாகக் கொண்ட பிரமாண்டமான திருப்பாடுகளின் காட்சி முதல் நாட்டிய நாடகங்கள், இலக்கிய நாடகங்கள், விவிலிய நாடகங்கள் ஈறாக பலவற்றையும் மேடையேற்றத் தொடங்கினர்.

Central Performing Arts எனும் புதிய ஆங்கிலப் பெயரை இணைத்துக் கொண்டு கத்தோலிக்க சமய எல்லைகளுக்கு அப்பால் தமிழ், கலாச்சாரம், பண்பாடு என்ற பொதுமைக்குள் மன்றம் இயங்கத் தொடங்கியது. நாடகம், நாட்டுக்கூத்து, இசை நாடகம், சமூக நாடகம் எனப் பல செயற்பாடுகளை மட்டுமன்றி கவின்கலைகள் பயிலகம், சிறுவர் கலைக்கூடம் என்று கலை உருவாக்கப் பயிற்சிகளை ஆரம்பித்ததுடன் "கலைமுகம்", "ஆற்றுகை", "சஞ்சிகை" எனப் பல பல்வேறு நூல் வெளியீடுகள், தமிழ் விழாக்கள், கண்காட்சிகள், சைவசித்தாந்த ஆய்வுகள், ஒளிநாடா வெளியீடுகள் என பலவற்றினைப் பெற்றுக் கொள்ளும் கலாச்சார மையமாக நிரந்தரமாக அமைக்கப்பட்ட கட்டடத் தொகுதிகள் இயங்கத் தொடங்கியது.

இலங்கையின் பல பாகங்களிலும் கிளைகள் அமைத்து பிற நாடுகளில் இயக்கக் குழுக்களை அமைத்து இயங்கி வருகின்றது. மதம், மொழி எல்லைகளற்ற விதத்தில் இந்நாடக மன்றம் சமாதான செயல் நோக்கிற்காகவும் பிரயோகப்படுத்தியவாறு இயங்கி வருகிறது. பல்வேறு சவால்கள், பொருளாதாரப் பின்னடைவுகள், ஈழத்துச் சூழ்நிலைகள் இவற்றினாலும் இம்மன்றம் பாதிக்கப்பட்டுள்ளது. நிறுவன மயப்படுத்தப்பட்டு இயங்குதலின் இயலாமைகள், கலைஞர்களின் வெளியேற்றங்கள், புலம்பெயர்வுகள், வளமிக்கோரின் போதாமைகள், நிதிச் சுமைகள் போன்ற அக அழுத்தங்களையும் எதிர்கொண்டு இச்சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது.

திருமறைக் கலாமன்றத்தின் நோக்கம்[தொகு]

திருமறைக் கலாமன்றத்தின் தூரநோக்கமாக இனம், மதம், மொழி கடந்த மனிதநேயமும் மதிப்பும் படைத்த கலைக்குடும்பத்தினை உருவாக்குவதாகும். இம்மன்றத்தின் இலக்கானது அனைத்து சமூகத்தினரிடமும் சமாதானத்தினையும் நீதியையும் மேம்படுத்தல், சிறுவர் உரிமையையும் கடமைகளையும் பாதுகாத்தல், இயற்கை அனர்த்தங்களிலும் யுத்தத்தாலும் உளப்பாதிப்புக்குள்ளானவர்களையும் காயப்பட்டவர்களையும் ஆற்றுப்படுத்த உதவுதல், இலங்கைப் பிரதேசத்தில் இணைந்த கலாச்சாரப் பாரிய மாற்றத்திற்கான சந்தர்ப்பத்தினை உருவாக்குதல், சமூகப் பாலியல் வேறுபாட்டினைக் களைந்து பெண்களின் முன்னேற்றத்தை முன்னெடுக்கும் முகவர்களாக கலைஞர்களை உருவாக்க ஊக்கம் கொடுத்தல் போன்றவற்றினை இலக்காகக் கொண்டு இம்மன்றமானது செயலாற்றி வருகின்றது.

இம்மன்றத்தின் இலக்குக் குழுவினரான சிறுவர்களையும் இளைஞர்களையும் அவர்கள் தமது நடவடிக்கைகளை முக்கியத்துவமாக மையப்படுத்தும் அதேவேளை பாலியல் சமத்துவத்தினையும் பேணுகிறார்கள். இருப்பினும் பெண்களே அவர்களின் குறிப்பிடத்தக்க பயனாளிகளாக இருக்கிறார்கள். இவ்வாறானதொரு இலக்குக் குழுவினரைக் கொண்டு தமது முக்கியச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்கள். யாழ்ப்பாணத்தின் ஏனைய நிலையங்களாக கலாமுற்றம், கலைக்கோட்டம், கவின்கலைக் கல்லூரி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

திருமறைக் கலாமன்றத்தின் நாடகச் செயற்பாடுகள்[தொகு]

இம்மன்றம் பல்வேறுபட்ட மோடி நாடகங்களை அதிகளவு அளிக்கை செய்து வருகின்றது.

  1. திருப்பாடுகளின் நாடகம்
  2. நாட்டுக் கூத்து
  3. இசை நாடகம்
  4. இலக்கிய நாடகம்
  5. வரலாற்று நாடகம்
  6. சமூக நாடகம்

தனியாள் அரங்கு இவற்றுடன் நாடக சம்பந்தமான நாடக அரங்கியல் வளர்ச்சிக்கு உதவக் கூடிய செயற்பாடுகளாக பல்வேறுபட்ட செயற்பாடுகளை ஆற்றுகின்றது.

  • நாடக பயிலகம்
  • சிறுவர் கலைக்கூடம்
  • நாடக களப் பயிற்சிகள்
  • நாடகக் கருத்தரங்குகள்
  • நாட்டுக் கூத்துப் போட்டிகள்
  • அரங்கியல் கண்காட்சி
  • நாடக நூல் வெளியீடு
  • நாடக சஞ்சிகை வெளியீடு
  • வெளிநாட்டு நாடகப் பயணங்கள்

திருப்பாடுகளின் நாடகங்கள்[தொகு]

Passion Play என அழைக்கப்படுகின்ற திருப்பாடுகளின் நாடக மரபானது ஈழத்தில் ஆற்றுகை செய்யப்பட்டு வருவதனை யாவரும் அறிவர். ஆரம்பத்தில் "பொம்மைகளைக் கொண்டு 50 ஆண்டுகளுக்குப் பின்னரே மனிதர்கள் நடிக்கும் நாடக மரபாக அறிமுகம் செய்யப்பட்டது. கிறிஸ்தவப் பாரம்பரியத்தில் சடங்காகவும், கலை ஆற்றுகையாகவும் காணப்படும் திருப்பாடுகளின் காட்சி "பாஸ்கு நாடகம்" எனும் பெயருடன் நீண்ட காலமாக பக்தியுடன் நிகழ்த்தப்பட்டது." 1963 ஆம் ஆண்டு அருட்கலாநிதி நீ.மரியசேவியர் அடிகள் மன்னாரில் தமிழிலே திருப்பாடுகளின் நாடகம் ஒன்றினை எழுதி மேடை ஏற்றினார். அன்றிலிருந்து இன்று வரை கடந்த 51 வருடங்களாக இப்பணி அவரால் தொடரப்படுகிறது. இப்பணியை மேற்கொள்வதற்காகவே திருமறைக் கலாமன்றத்தினை 1965 இல் உருவாக்கி அதற்கூடாக நாடகப் பாரம்பரியம் இன்றுவரை கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது.

1967 ஆம் ஆண்டு முதல் திருமறைக் கலாமன்றம் மேடையேற்றிய தவக்காலப் பக்திப் படைப்புக்கள்

ஆண்டு படைப்பின் பெயர்

1967 கல்வாரியில் கடவுள்
1969 அன்பில் மலர்ந்த அமர காவியம்
1971 அன்பில் மலர்ந்த அமர காவியம்
1971 களங்கம்
1973 பலிக்களம்
1973 களங்கம்
1990 களங்கம்
1991 சிலுவை உலா
1992 கல்வாரி பரணி
1993 பலிக்களம்
1994 கல்வாரிக் கலம்பகம்
1995 அன்பில் மலர்ந்த அமர காவியம்
1996 கல்வாரிச் சுவடுகள்
1997 பலிக்களம்
1998 சிலுவைச் சுவடுகள்
1999 குருதி தழுவிய குவளையம்
2000 பலிக்களம்
2001 காவிய நாயகன்
2002 கல்வாரி யாகம்
2003 பலிக்களம்
2004 காவிய நாயகன்
2005 குருதி தழுவிய குவளையம்
2006 பலிக்களம்
2007 மலையில் விழுந்த துளிகள்
2008 காவிய நாயகன்
2009 கல்வாரி யாகம்
2010 வெள்ளியில் ஞாயிறு
2011 கடவுள் வடித்த கண்ணீர்
2012 வேள்ளிவத் திருமகன்
2013 காவிய நாயகன்
2014 வேள்ளிவத் திருமகன்
2015 அன்பில் மலர்ந்த அமர காவியம்
2016 வேள்ளிவத் திருமகன்

நாட்டுக் கூத்துக்கள்[தொகு]

ஈழத்தமிழர்களின் மரபு வழி நாடகமாகிய கூத்தினை வளர்த்தெடுப்பதிலும் பேணுவதிலும் கணிசமான பங்கினை செய்து வருகின்றது. குறிப்பாக தென்மோடிக் கூத்து மரபில் அதிக கவனம் செலுத்தும் திருமறைக் கலாமன்றம் அதற்காக பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றது.

  • பழைய கூத்துக்களின் மரபு கெடாது மேடையேற்றி வருகிறது.
  • கூத்து வடிவத்தை செம்மைப்படுத்தி புதிய கூத்துக்களை எழுதி மேடையேற்றுகின்றது.
  • கூத்தின் வடிவங்களைப் பயன்படுத்தி நவீன பரீட்சார்த்தமான கூத்துக்களை தயாரிக்கிறது.
  • கூத்து நூல்களை அச்சிட்டு வெளியிடுகின்றது.
  • கூத்து விழாக்களையும், கருத்தமர்வுகளையும் நடாத்தி வருவதுடன் அண்ணாவிமார்களை கௌரவிக்கின்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. கூத்தின் பாடல் மெட்டுக்களை ஒளிப்பேழைகளிலும், நூலிலும் ஆவணமாக்கம் செய்கின்றது.

இசை நாடகங்கள்[தொகு]

ஈழத்தில் 19 ஆம் நூற்றாண்டு அறிமுகமாகியிருந்தாலும் ஈழத்தவர்களின் மரபு நாடகம் போன்று மாறியிருக்கும் இசை நாடக வடிவத்தை வளர்த்தெடுப்பதிலும் திருமறைக் கலாமன்றம் கணிசமான பங்களிப்பை செய்து வருகின்றது.

  • பல இசை நாடகங்களை செழுமைப்படுத்தி மேடையேற்றி வருகின்றது.

உதாரணம் :- ஞானசௌந்தரி, சத்திய வேள்வி (மயான காண்டம்)

  • பெருங்காப்பியங்களை இசை நாடகங்களாக எழுதி தயாரித்துள்ளது.

உதாரணம் :- சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி

  • விவிலியக் கதைகளையும் புதிய இசை நாடகங்களாகத் தயாரித்துள்ளது.

உதாரணம் :- ஏரோதன், சத்திய சோதனை

  • இசை நாடக விழாக்களையும் நடத்தியும் பயிற்சிப் பட்டறைகள், கலைஞர் கௌரவிப்புக்கள், கருத்தமர்வுகள் போன்றவற்றை நடாத்தியும் இசைநாடக வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுத்து வருகிறது.
  • இசை நாடக மரபில் உள்ள 248 பாடல்களில் ஒளிப்பேழையாகவும், நூலாகவும் பதிவு செய்து வெளியிட்டுள்ளது.

இலக்கிய நாடகங்கள்[தொகு]

அறுபதுகளிலிருந்தே திருமறைக் கலாமன்றம் பல இலக்கிய நாடகங்களை அவ்வப்போது மேடையேற்றி வருகிறது. தமிழ் விழா, இலக்கிய விழா, முத்தமிழ் விழா எனப் பல்வேறு விழாக்களினை நடாத்தி வருகிறது. அவ்விழாக்களில் இலக்கிய இசை நாடகங்களையும் மேடையேற்றி வருகின்றது.
உதாரணம் :- ஒளவையார், கும்பகர்ணன்

நவீன நாடகங்கள்[தொகு]

சமூக விழிப்புணர்வு சார்ந்தும் சமகால வாழ்வைப் பிரதிபலிப்பதும் போரின் வடுக்களை வெளிப்படுத்துவதுமான பல்வேறு நவீன நாடகங்களையும் திருமறைக் கலாமன்றம் மேடையேற்றி வந்துள்ளது. புல்வேறு அரங்க நுட்பங்களையும் குறியீடுகளையும் இணைத்த வடிவங்களாக அவை மேடையேற்றப்பட்டன.
உதாரணம் :- சத்தியத்தின் தரிசனம் ஜீவப்பிரதயத்தனம்

தெருவழி நாடகங்கள்[தொகு]

1990 க்குப் பின் திருமறைக் கலாமன்றம் பல்வேறு தெருவழி நாடகங்களை மேடையேற்றி வந்துள்ளது. குறிப்பாக யுத்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோர் மத்தியிலும், சுனாமி போன்ற இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோர் மத்தியிலும் விழிப்புணர்வு சார் நாடகங்களையும், ஆற்றுப்படுத்தல் நாடகங்களையும் அவ்வப்போது தெருவழி நாடகங்களாக மேடையேற்றி வந்துள்ளது. ஜோன்சன் ராஜ்குமாரின் "ஆத்ம யாகம்", தை.கண்ணனின் "சமாதான ஓடை" போன்ற அளிக்கை செய்யப்பட்டன.

சிறுவர் நாடகம்[தொகு]

திருமறைக் கலாமன்றத்தில் சிறுவர் நாடகங்கள் அதற்கேயுரிய பல அரங்க விதிமுறைகளின்படி அரங்கேறின. ஆரம்பத்தில் "ஒற்றுமையின் சின்னம்", "புத்திமான் பலவான்" போன்ற குழந்தை மா.சண்முகலிங்கத்தின் பிரதிகளை பிரான்சிஸ் ஜெனம் நெறியாள்கை செய்தார். சிறுவர் அரங்கினை வளர்க்கும் நோக்கோடு 1992 ஆம் ஆண்டிலிருந்து சிறுவர் கலைக்கூடம் என்னும் பயிற்சிப் பிரிவினை உருவாக்கி அதற்கு பல்வேறு அரங்கியல் பயிற்சி வழங்கி வருவதுடன் அவர்களைக் கொண்டு பல்வேறு சிறுவர் நாடகங்களையும் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வந்துள்ளது.

நடன நாடகங்கள்[தொகு]

1970 களிலிருந்தே திருமறைக் கலாமன்றம் நடன நாடகங்கள் பலவற்றையும் அவ்வப்போது மேடையேற்றி வந்துள்ளது. பரதம், கதகளி, கூத்து வடிவங்களை ஒன்றிணைத்த வடிவங்களாகவும் அவை மேடையேற்றப்பட்டுள்ளன.
உதாரணம் :- அருளும், இருளும், மானில் மயங்கிய மாதும், மன்னனும்

அரங்கப் பயிற்சிகள்[தொகு]

'1980 களின் இறுதியில் திருமறைக் கலாமன்றம் தன்னைப் பொதுமைப்படுத்திக் கொண்டே பல்வேறு செயற்பாடுகளையும் மேற்கொண்டு வந்தது.'

  • இலங்கையிலிருந்து நாடகக் கலைஞர்களை இந்தியாவிற்கு கொண்டு சென்று திருச்சி தேவர் மண்டபத்தில் 'களங்கம்' நாடகத்தை மேடையேற்றியது. (1992)
  • யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டு உலகத் தமிழாராட்சி மாநாட்டில் 'கதையும் காவியமும்' எனும் தரமான இலக்கிய நாடகத்தினை மேடையேற்றி ஈழத்தவர்களால் மட்டுமன்றி பேராளர்களினதும் பாராட்டைப் பெற்றது.
  • நாடகமும் அரங்கியலும் என திட்டமிட்ட கண்காட்சி முறையை அறிமுகம் செய்து இரண்டு பிரமாண்டமான அரங்கியல் கண்காட்சிகளை நடத்தியது. (1995 2003)
  • அழிந்து போகக் கூடிய நிலையிலிருந்த 153 தென்மோடி நாட்டுக்கூத்துப் பாடல் மெட்டுக்களையும் 248 இசை நாடக மெட்டுக்களையும் ஒழிப்பேழையில் பதிவாகி இருப்பதுடன் அவற்றுக்கான ஆவணங்களையும் பதிப்புக்களையும் வெளியிட்டது.
  • யுத்தத்தின் சூழலிலும் நாட்டுக் கூத்துக்களை அழிந்து போகாத வண்ணம் ஊக்கம் கொடுத்து வந்ததுடன் மரபு பிறழாது பிரக்ஞை புர்வமான கூத்துப் புத்தாக்கங்களை மேற்கொண்டு கூத்துக்களின் எழுச்சிக்கு உதவியது.

திருமறைக் கலாமன்றம் இதுவரை ஆற்றிய பாரிய செயற்பாடுகள்[தொகு]

  • வருடாந்த சிறுவர், இளைஞர் சமாதான கலை கதம்ப நிகழ்வு.
  • மாவட்ட மன்றங்களிலும் இடம்பெறும் தேசிய மட்டத்திலான சமாதானப் பாசறை.
  • திருகோணமலை சிறுவர் சமாதானப் பாசறை.
  • சிறீலங்காவின் அனைத்து மன்றங்களினதும் முக்கிய திருநாட்களினைக் கொண்டாடியமை.
  • திருமறைக் கலாமன்ற பல்லினக் கலைஞர்களும் இணைந்து வழங்கும் கலைச்சங்கம நிகழ்வு.
  • அனைத்து மன்றங்களும் இணைந்து நடாத்தும் சுற்றுலா தலயாத்திரை.
  • சிறுவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் மற்றும் அவர்கள் திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
  • யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், முதியோர்கள், குழந்தைகள் போன்ற இப்பிரிவினருக்கும் எதிர்காலம் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல்.

திருமறைக் கலாமன்றத்தின் தொடர்ச்சியான செயற்பாட்டுக்கான காரணங்களும் அரங்க நிறுவன முகாமைத்துவமும்[தொகு]

எந்த ஒரு நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் வெற்றிக்கு சிறந்த முகாமைத்துவமே காரணமாக அமையும். அந்த வகையில் திருமறைக் கலாமன்றத்தின் தொடர்ச்சியான செயற்பாட்டிற்கும் வெற்றிக்கும் முகாமைத்துவ செயற்பாடே காரணமாக அமைந்துள்ளது. கிடைக்கின்ற வளங்களை பயன்படுத்திக் கொண்டு வினைத்திறனான சேவையின் மூலமாக முகாமையாளர் வெற்றியை நிறுவனத்தில் ஏற்படுத்துகின்றார்.
திருமறைக் கலாமன்றத்தின் வெற்றியானது சிறந்த தலைமைத்துவத்தை கொண்டிருப்பதும் காரணமாக உள்ளது. முகாமைத்துவ மட்டத்தில் நிறுவனத் தலைவர் அல்லது முகாமையாளர் மேற்கொள்கின்ற சகல நடவடிக்கைகளையும் வைத்து அந்நிறுவன வெற்றிக்கு காரணமாக உள்ளது. அந்த வகையில்,
இலங்கையில் எத்தனையோ மன்றங்கள் எத்தனையோ நிறுவனங்கள் இருக்கின்றது. அவற்றின் தலைவர்களோ அன்றேல் இயக்குநர்களோ தெரிவு செய்யப்படுகின்றவர்களாக அன்றேல் நியமிக்கப்படுபவர்களாக இருப்பர். ஆனால் திருமறைக் கலாமன்றமானது இவை அனைத்திலும் நின்று வேறுபட்டது. தானாகவே உருவான தலைமை இது. சவாலுக்கு உட்படாத ஆயட்கால தலைமைத்துவம் ஆகும். ஆங்கே ஆற்றல் இருக்கிறது அறிவு இருக்கிறது அகில இலங்கையிலும் தலைமைத்துவத்திற்கு செல்வாக்கு இருக்கிறது. மன்ற அங்கத்துவர்களுக்கு அவர் இயக்குநராக மட்டுமல்ல ஒரு சில வேளைகளில் குருவாகவும் தோற்றமளித்தார்.
'நீ மரிய சேவியர் அடிகளார் அவர்கள் இயக்குநருக்கான பணிவும் குருவுக்கான பக்தியும் ஒன்று சேர்த்து மன்றத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமாக அமைகின்றது போலும். தெற்கே சர்வோதயம் போன்று வடக்கே ஒரு தேசிய நிறுவனம் உண்டென்றால் அது திருமறைக் கலாமன்றமே தான். கால வரையறை அற்றதும் சவாலுக்கு உட்படாததும், பணிவாலும், பக்தியாலும் தளைத்து நிற்கும் இந்த தனித்துவமான தலைமைத்துவத்தின் பண்புகளே இந்த 50 வருட கால சீரான வளர்ச்சிக்கு முதற்காரணமாக இருக்கின்றது.' சட்டங்களை விட சம்பிரதாயம் திருமறைக் கலாமன்றத்தினை ஆளுகின்றது. அங்கத்தவர்கள் கலைஞர்களாக மட்டுமல்ல சீடர்களாகவும் தங்களை கருதுகிறார்கள்.
ஓர் அரங்க முகாமைத்துவமானது சிறப்பான வகையில் செயற்பட பல்வேறுபட்ட செயன்முறைகள் காரணமாக அமைகின்றன. உதாரணமாக, திட்டமிடல், ஒழுங்கமைத்தல், நெறிப்படுத்தல், கட்டுப்படுத்தல் என்பனவாகும். திருமறைக் கலாமன்றமானது வினைத்திறனான கட்டமைக்கப்பட்ட நாடகங்களை நெறிப்படுத்தி மேடையிடுகின்றது. இச் செயற்பாட்டிற்கும் சிறப்பான அரங்க நிறுவன முகாமைத்துவம் தேவைப்படுகின்றது. இயக்குநர், உதவி இயக்குநர், பிரதி இயக்குநர்கள் எனவும் ஆலோசனை சபைகள் என பல மட்டங்களையும் கொண்டுள்ளது. ஓர் நாடகத்தை உருவாக்குவதற்கு பல்வேறு செயற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. உதாரணமாக திருமறைக் கலாமன்றத்தின் உடைய தவக்கால ஆற்றுகைகளாக காணப்படும் 'திருப்பாடுகளின் காட்சி' நாடகமானது பல்வேறுபட்ட பார்வையாளர்களை மையப்படுத்தியதாக உருவாக்கப்படுகின்றது.
ஓர் நிறுவனத்தின் அரங்க நிறுவன முகாமைத்துவ நிறுவனமானது ஏன் தேவைப்படுகின்றது எனப்பார்க்கையில், நாடக மன்றத்தின் எதிர்கால நோக்கம் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் திருமறைக் கலாமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால எதிர்வு கூறல்கள் என அனைத்தும் மாதாந்தம் கூடுகின்ற மன்ற சபை கூட்டத்தொடரிலே தீர்மானிக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் எவ்வாறான செயற்பாடுகளை செய்ய வேண்டும் என இச்சபை அங்கத்தவர்களால் கலந்தாலோசிக்கப்பட்டு இயக்குனரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் எடுக்கப்படுகின்றது. இயக்குனர் நீ மரிய சேவியர் அவர்களால் மாதாந்தம் கூட்டமானது ஒழுங்காக கூட்டப்படுகின்றது. இதன் மூலம் நிறுவனம் சார் குறைகள் நிறைகள் என்பன தீர்மானிக்கப்படுவதற்கான வாய்ப்பாக உள்ளது. இதன் மூலம் அரங்க நிறுவன முகாமைத்துவமானது சிறப்பாக காணப்படுகின்றது.
திருமறைக் கலாமன்றத்தின் தலைமைத்துவம் மற்றும் மன்றம் சார் கட்டமைப்புக்களையும் மிகவும் சிறப்பாக முகாமை செய்வது தான் பல வருடங்களாக நிலை பெற்று வருகின்றது. நிறுவனங்களை பொறுத்தவரையில் குறிப்பாக நியமிக்கப்பட்ட தலைமைத்துவமே முக்கியம் பெறுகின்றது. எந்தவொரு நிறுவனத்திலும் ஊழியர்களது செயற்திறன் திருப்தியற்றதாக அமையும் போது அல்லது நிறுவனம் தோல்வியைத் தழுவும் போது அதற்கு திறனற்ற தலைமைத்துவமே காரணமென சாட்டுதல் செய்யப்படுகிறது.
இந்த வகையில் திருமறைக் கலாமன்றமானது தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு அதன் தலைமைத்துவமானது பாரியளவிலான சேவையை ஆற்றி வருகின்றது. ஓர் கலைச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக நிகழ்த்தி வருவதென்பது கடினமான விடயமாகும். இருந்தாலும் இத் திருமறைக் கலாமன்றத்தின் வளர்ச்சியில் தலைமைத்துவத்திற்கு பாரியளவிலான பங்கு உண்டு.
தலைமைத்துவமானது மற்ற நபர்களை அதாவது கீழ் ஊழியரை பின்பற்றுவோரை உட்படுத்துகின்றது. குழு அங்கத்தவர்கள் தலைவரின் வழிப்படுத்துதலை ஏற்கச் சம்மதமாக இருப்பதன் மூலம் தலைமைத்துவமானது வினைத்திறனுடன் செயலாற்ற முடியும். ஆந்த வகையில் திருமறைக் கலாமன்ற தனித்துவமானது இன்றைக்கு 50 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் மாறாத நிலையில் வினைத்திறனுடன் செயற்பட இத் திருமறைக் கலாமன்றத்தின் உடைய கட்டமைப்பும் அரங்க நிறுவன முகாமைத்துவமும் காரணமாக உள்ளது.
பன்முகப்பார்வையில் திருமறைக் கலாமன்றமானது கலைக்கூடமாகவும் அரச சார்பற்ற நிறுவனமாகவும் கலைக்குடும்பமாகவும் மத சார்பற்ற நிறுவனமாகவும் ஆதீனம் போன்றும் ஒரு இயக்கமாகவும் செயற்படுவதற்கு என்ன காரணம் கட்டமைக்கப்பட்ட நிர்வாகம் தான் காரணம். ஓவ்வொரு பணிகளுக்கும் பொறுப்பாகவும் ஒவ்வொரு நிர்வாக அலகுகளையும் ஒரே தலைமைத்துவத்தையும் கொண்டு காணப்படுகின்றது. இவற்றை நிர்வாகம் செய்து சிறந்த கலைத்துவமான படைப்புக்களை திருமறைக் கலாமன்றமானது சிறப்பான வகையில் செயற்பட்டு வருகின்றது.

உசாத்துணை[தொகு]

1. அல்விறட்,பி,எஸ். திருமறைக் கலாமன்றம் எனது பார்வையில். கொழும்பு: லங்கா பப்ளிசிங் கவுஸ். 2015.

2. சஞ்சிகைகள்:
கலைச்சுவடுகள், திருமறைக்கலாமன்ற வெளியீடு. 2015
கலைமுகம், திருமறைக்கலாமன்ற வெளியீடு. 2007

3. தேவராஜா,கா. நிறுவன முகாமைத்துவம். யாழ்ப்பாணம்: உயர்பட்டப்படிப்புகள் பீட வெளியீடு. 2004.

4. பேட்டி:
தைரியநாதன், எம்
இசைநாடக கலைஞர்,
திருமறைக் கலாமன்றம், தனிப்பட்ட செவ்வி, அரியாலை 22.11.2016

5. பேட்டி:
வரதராயன், எஸ்
இசை கலைஞர்,
வசந்தகான சபா, தனிப்பட்ட செவ்வி, அரியாலை 10.11.2016

6. https://en.wikipedia.org/wiki/List_of_improvisational_theatre_companies

7. பேட்டி:
ராஜ்குமார், ஜோன்சன்.
நாடக ஆசிரியர், திருமறைக் கலாமன்ற உதவி இயக்குனர்,
தனிப்பட்ட செவ்வி, யாழ்ப்பாணம். 07.11.2016

8. பேட்டி:
வைதேகி, செல்வரெமில்
நாடகப் பயிலகப் பொறுப்பாளர்,
திருமறைக் கலாமன்றம், தனிப்பட்ட செவ்வி, குருநகர். 12.11.2016