பயனர்:Dr T. Hemalatha/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூடநாணல்


தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அழகிய கிராமம் கூடநாணல்.திருக்காட்டுப்பள்ளி தேர்வுநிலைப் பேரூராட்சியின் 15 வது வார்டாக இக்கிராமம் வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இக்கிராமம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து பூதலூர் செல்லும் சாலையில் கடுங்கால் வாய்க்காலுக்கும் பிள்ளைவாய்க்காலுக்கும் இடைப்பட்ட இடத்தில் அமைந்துள்ளது.மக்கள் வசிப்பிட அடிப்படையில் வடக்குக்கூடநாணல் என்றும் தெற்குக்கூடநாணல் என்றும் அழைக்கப்படுகிறது.

இதிகாசச் செய்தி

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது அவர்கள் ஒருவரை ஒருவர் கண்டு கொண்ட இடம் கண்டமங்கலம் என்றும் அவர்கள் கூடிய இடம் கூடநாணல் என்றும் கர்ணபரம்பரை செய்தி இன்றளவிலும் சொல்லப் பட்டு வருகிறது.

மக்கள்


மக்கள் பெரும்பாலும் விவசாயத்தைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். நெல், கரும்பு, வாழை முதலியன பயிரிடப்படுகின்றன. மக்கள் 100% கல்வியறிவு பெற்றவர்கள்.

கோயில்கள்

குளத்தாளம்மன், இரட்டைப்பிள்ளையார், சங்கிலிகருப்பு, சாம்பான், மதுரைவீரன்,பெருமாள், நாகதேவதை, வன்னீஸ்வரன் முதலான தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. முதலில் குளத்தாளம்மனை வழிபட்ட பிறகே ஏனைய தெய்வங்களை வழிபடும் மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வூரினர் இறந்துபடின் காவிரிக்கரையில் இவ்வூருக்கென உள்ள சுடுகாட்டிற்கே கொண்டு சென்று இறுதிக்கடன் செய்யும் வழக்கம் உள்ளது. இறுதி ஊர்வலத்தின்போது வடக்குக்கூடநாணலைச் சேர்ந்தவர்களின் சந்திமாக்கோட்டை வழிபாடு வன்னீஸ்வரன் கோயிலுக்கு எதிரிலும் தெற்குக்கூடநாணலைச் சேர்ந்தவர்களின் சந்திமாக்கோட்டை வழிபாடு நாகதேவதை கோயிலுக்கு எதிரிலும் நடைபெறுவது மரபு.


காமன் திருவிழா

மாசிமாதம் வளர்பிறை திருதியை திதியில் காமன்விழாவிற்கான கால்கோள் இடப்படுகிறது.மாசிப்பௌர்ணமி தினத்தன்று சிவன் காமனை எரித்தகதை நாடகமாக நடிக்கப் படுகிறது. காமனாகவும் இரதியாகவும் ஆண்களே வேடம் புனைத்து நடிப்பார்கள். சிவன் காமனை எரித்ததும் இரவு அனைவரும் குளித்துவிட்டே வீடுதிரும்புவார்கள். காமனை எரித்த மூன்றாம்நாள் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

நல்லேர் /பொன்னேர் கட்டுதல்

தமிழ்வருடப்பிறப்பாகிய சித்திரை ஒன்றாம் தேதி நல்லேர் கட்டி வழிபாடு செய்வது இவ்வூரின் வழக்கமாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Dr_T._Hemalatha/மணல்தொட்டி&oldid=2458935" இலிருந்து மீள்விக்கப்பட்டது