பயனர்:ரா.க.பூபதி/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வண்டி வேடிக்கை திருவிழா!

விநோத வழிபாடு 2 சேலம்


1800ம் ஆண்டுகளில் பாரத தேசம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த காலகட்டம். அப்போதைய சேலம் என்பது வனம் சூழ்ந்த பகுதி. இங்கு வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு குறைவான பேரே வசித்தனர். இப்போது கான்கிரீட் கால்வாயில் சாக்கடையாய் ஓடும் திருமணிமுத்தாறு, அன்றைக்கு தூய்மையான நீரை வயிற்றில் நிரப்பிக்கொண்டு ஓடுகிறது. 

இதனால் நூலுக்கு சாயமேற்ற தேவையான தண்ணீர் வசதி தங்குதடையின்றி கிடைத்தது. வாழ்வதற்கு தேவையான குடிநீருக்கும் பஞ்சம் இல்லை. இதனால் ஆற்றங்கரையில் மக்களை தங்க வைத்து நெசவுத்தொழில் செய்வது எல்லாவகையிலும் சிறந்தது என பிரிட்டிஷார் கருதினர்.

தற்போதைய கர்நாடக பகுதி மக்களை பிரிட்டிஷ் அரசாங்கம் சேலம் பகுதிக்கு வந்து தங்கி நெசவுத்தொழில் செய்யுமாறு வேண்டிக்கொண்டது. அங்கிருந்து தேவாங்க குல மக்கள் சேலத்திற்கு இடம்பெயர்ந்து குடியேறினார்கள். அவர்கள் நெசவுத்தொழிலுக்கு தேவையான நூல், தறிகளை பிரிட்டிஷார் கொடுத்து உதவினர். சேலத்தில் குகை பகுதியில் சிறிய காளியம்மன், மாரியம்மன் கோயில் இருந்தது. அந்த கோயிலை பெரிதாக்கி தங்கள் குல தெய்வமாக தேவாங்க குல மக்கள் வழிபட துவங்கினர். 
ஒரு பக்கம் தறித்தொழில் ஜரூராக நடக்கிறது. மற்றொரு பக்கம் தேவாங்க குல வணிகர்களிடம் இருந்து நூல்களை வாங்கி ஆடையாக நெய்து திருப்பித்தரும் பணியில் தற்போதைய ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், ராசிபுரம் பகுதி மக்கள் ஈடுபட்டனர். இதுதான் வாழ்க்கைக்கான வருமானத்தை இப்பகுதி மக்களுக்கு வழங்கியது. அதனால் தொழிலையும், வருமானத்தையும் தந்த கர்நாடகா மாநில தேவாங்க குல மக்களையே இவர்களும் எஜமானர்களாக பார்த்தனர். எஜமானர்கள் கும்பிட்ட காளியம்மன், மாரியம்மனையே இவர்களும் வழிபட துவங்கினர்.

இந்த கோயிலில் நடக்கும் ஆடித்திருவிழாவில் அந்தரத்தில் அலகு குத்தி பக்தர்கள் தொங்கியபடி சென்றனர். ஆனால் இது, உடலை வருத்தும் கொடூரமான பழக்கம் என பிரிட்டிஷ் அரசாங்கம் 1900ம் ஆண்டிலேயே தடை செய்தது குறிப்பிட வேண்டிய அம்சம். இதற்கு பிறகு தான் வன்மையான பிரார்த்தனை, நேர்த்திக்கடன், வழிபாட்டு முறை, பழக்க வழக்கம் மாறி மென்மையான வழிபாட்டு முறைகள் உருவாயின. அப்படி தோன்றியதுதான் இப்போது நாம் சேலம் திருவிழாக்களில் பார்க்கும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி! சேலத்துக்காரர்களுக்கு வண்டி வேடிக்கை என்றால் புரியும். பக்கத்தில் உள்ள நாமக்கல்காரர்களுக்கு தெரியும். ஆனால் தமிழகத்தின் மற்ற மாவட்டத்துக்காரர்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை. வேறொன்றுமில்லை. வண்டி வேடிக்கை என்பது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில், கடவுள்களை போல வேஷமிட்ட பக்தர்கள் உலா வருவார்கள். அவர்களை வழிநெடுக கூடி நின்று மக்கள் வேடிக்கை பார்ப்பார்கள். இதுதான் வண்டி வேடிக்கை.

வாகனங்களில் சிறு தெய்வங்களான காளியம்மன், மாரியம்மன் மட்டும் இல்லாமல் பெருந்தெய்வங்களான ராமர், கிருஷ்ணர், சிவபெருமான் போன்ற கடவுள்களும் இடம்பெற்று இருப்பது ஆச்சரியமான விஷயம். இவ்வாறு கடவுள் மேக்கப்பை சுலபத்தில் போட்டு விட முடியாது. அச்சமயத்தில் 12 நாளுக்கு மேல் விரதம் இருக்க வேண்டும். பெண்டாட்டியை தொடக்கூடாது. மட்டன், சிக்கன், பீடி, சிகரெட்டை தொடக்கூடாது. மேக்கப், உலா என 16 மணி நேரம் அப்படியே அசையாமல் இருக்க வேண்டும். இதில் ஆண்டுதோறும் சிறந்த வண்டி வேடிக்கை காட்சி அமைப்பை போடும் குழுவிற்கு பரிசு கூட உண்டு.
1890 ஆண்டுகளில் துவங்கி 2011 என நூற்று பத்து ஆண்டுக்கும் மேலாக வண்டி வேடிக்கை என்கிற விநோத திருவிழா இன்று வரை தொடர்ந்து நடக்கிறது என்பது தான் ஆச்சரியத்தை அதிகப்படுத்தும் தகவல்!

வியப்புகளும், விநோதங்களும்... தொடரும்...