பயனர்:நவினன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்த்திகேயன் ( Karthikeyan chennasamy ) என்பது இயற்பெயர். நான் ஒரு நாடகக் கலைஞன் ( drama artist ) தமிழ் இலக்கியத்தில் முதுகலைப்படிப்பும், நாடகம் மற்றும் அரங்கக்கலையில் முதுகலை, இளம் முனைவர் (எம்பில்,) முனைவர்பட்டம் (பிஎச்டி)முனைவர் பட்ட உயராய்வு (பிடிஎப்) முடித்தவன். ( MA, Mphil, PhD PDF )முனைவர் பட்ட ஆய்வில் அண்ணன்மார் சாமி உடுக்கடிக் கூத்தை ஆய்வு செய்துள்ளேன். ஈரோடு காங்கயம் முத்தூர் கிராமத்தைச் சார்ந்தவன். 50 மேற்பட்ட நவீன நாடகத்தில் நடித்தேன். 10 நாடகங்களை இயக்கி உள்ளேன். 12 நவீன நாடகங்களை எழுதியுள்ளன்.7 தொலைக்காட்சி தொடர்கள் , 3 திரைப்படங்கள் என நடித்துள்ளேன். தொடர்ந்து நவீன நாடகம் மற்றும் திரைத்துறையில் இயங்கி வருகிறேன்.

   என்னுடைய நாடக அனுபவங்கள் சில...பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வுகால நாடகத் தயாரிப்பாக உதிர்காலம் நாடகம் 1999 ல் அரங்கேற்றம் ஆனது. இதை இயக்கியவர் ஜெகன் .  இவர் நாடகத் துறையில் முதுகலை இறுதி ஆண்டு மாணவர். பாரதியார் பல்கலைக் கூடத்தில் இளங்கலை ஓவியம் படித்தவர். வேலு சரவணனின் குழுவில் முதன்மை நடிகர். தற்போது ஒசூரில் உள்ள விளையாட்டுச் சார்ந்த பள்ளியில் நாடக இயக்குனராகவும் ஆசிரியராகவும் செயலாற்றி வருபவர். கோட்டோவியப் பாணியில் இயற்கையையும் மனிதனையும் கலந்து வரையும் தூரிகைக் கலைஞர்.  ஓவியமும் நாடகமும் கலந்த வண்ணப் படைப்பாக  அரங்கியலை உயிர்ப்பித்திருந்தார்.

தமிழகத்தின் புகழ் பெற்ற நாவலசிரியர் எஸ் இராமகிருஷ்ணன் எழுதிய இந்த நாடகத்தின் வசனப் போக்கு அவரின் சிறுகதை மொழி நடையைப் போன்றே நவீனத் தன்மையுடனும் கதை சொல்லும் பாணியிலும் அமைந்திருக்கும். பிரதியின் மையச் சுழற்சியானது இரஷ்யப் படைப்பாளிகளின் கதை உருவாக்க உத்தியைக் கொண்டிருந்தது. இயற்கை சூழ்ந்த ஊரில் காரையார் குடும்பம் தனிச் சிறப்புடைய குடும்பம். குடியும் காமமும் நிறைந்த தந்தை, இரு மகன்கள் ஆகியோருக்கிடையே ஏற்பட்ட பிளவினால் திடீர் என இழப்புகளைச் சந்திக்கிறது. உறவுகளின் இழப்புகளுக்குப் பின்னர் வீடானது பாழடைந்து புதர் மண்டிப் போகிறது. மழைக் காலத்தில் வீட்டில் மரக் காளான்கள் முளைத்துக் கிடக்கிறது. இதன் பின்னர் ஆழ்ந்த மனச் சித்திரங்களை இந்நாடகம் உருவாக்குகிறது. காரையார் வீட்டில் இரு பெண்கள் வாழ்கின்றார்கள். ஒருவள் வீட்டுக்குச் சொந்தக்காரி ஆதி. மற்றொருவள் சமையல்காரி. இவ்விரு பாத்திரங்களுக்கிடையான பேச்சுக்களோடு நாடகம் நகரும். வேலைக்காரி பாத்திரம் சூனியக்காரி போலவும், நல்ல குடும்பப் பெண் போலவும் முரண்பட்ட இருவேறான மன நிலையில் இருக்கும். இந்த பாத்திரத்தை ஏற்று நடிக்க சரியான பெண் கலைஞர்களை இயக்குனர் ஜெகன் தேட ஆரம்பித்தார். எங்கள் நாடகத் துறை மட்டுமின்றி தமிழ் துறை, பிரஞ்சு துறை என பல மாணவியர்களுடன் கலந்து பேசினார். ஆனாலும் அவரால் முடிவுக்கு வர முடியவில்லை. ஒத்திகையைத் தொடங்கிய நிலையில் வேலைக்காரி பாத்திரத்துக்கான பதிலியாக நான் வசனம் பேசி நடித்து வந்தேன். நாடகம் மேடை ஏறும் காலமும் எதிர் வரத் தொடங்கிற்று. டேய் மாமு நீதான் இனி வேலைக்காரியாக நடிக்கப் போறே என்றார். ஒப்புக்குச் சப்பானியா வந்தவனைப் பெண்ணா நடினா எப்படி மாமு என்றேன். உன் பாவனைகள் சரியா இருக்கு, நீ பொருத்தமா இருப்பேனு சொல்லி நடிக்க வெச்சுட்டார். நாடகத்தில் பெண் வேடங்கட்டுவதால் மீசை மழிக்க வேண்டும். மீசை எடுப்பதில் எனக்கு ஒரு சிக்கல் இருந்தது. நாடகம் முடிந்து மூன்று நாள் கழிந்து தங்கை ஒருவர் மண விழாவுக்காக நான் ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. எங்க ஊரில் (காங்கயம் –முத்தூர் ) மீசையை முழுக்க மழிப்பது ஒரு துயரச் சம்பவம் நடந்து முடிந்த செயல்பாட்டைக் குறிக்கும். இன்று மாறிப்போய்விட்டது. என்னப்பா கார்த்தி மீசை எடுத்து இருக்கே எனக் கேட்பார்கள். பலருக்கும் பதில் சொல்லியாக வேண்டும். இந்த சூழலை நினைந்து பெண் பாத்திரமேற்க இயலாது எனக் கூறினேன். இறைவனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் என நாயன்மார்கள் போற்றுவதப் போல என்னை ஜெகன் விடுவதாய் இல்லை. காலப்பட்டு மதுக் கடை ஒன்றில் வெங்கடேசன், ஆனந்த வேலு ,ஜெகன் ஆகியோர் முன்னிலையில் நடிக்கும் ஒப்பந்தம் உறுதியானது. வீட்டுக்காரியாக அனிதாவும் காரையாராக வெங்கடேசனும் நடித்தார்கள். இருவரும் நாடகத் துறையின் முதுகலை இறுதி ஆண்டு மாணவர்களாவர். வேலைக்காரி பாத்திரத்திற்காக இனிமையான குரல், கரகரப்பான குரல் என இரு வகையான குரல் மற்றும் பாவ வேறுபாடுகளை நவீனப் போக்குடன் காட்டி நடிக்கும் பயிற்சியை மேற்கொண்டேன். நல்ல அனுபவத்தைக் கொடுத்தது. இந்த நாடகத்தின் ஒப்பனைப் பொறுப்பை வெங்கடேசன் ஏற்றிருந்தார். என் முகத்தை இடம் வலமாகப் பிரித்து ஒரு புறம் வேலைக்காரியாகவும் மற்றொரு பாகம் சூனியக்காரியாகவும் வேடப்புனைவினைச் செய்தார். இருபுறமும் முகத்தில் உள்ள ஒப்பனைக்கு ஏற்ப சேலையால் முகத்தை மறைத்தும் காட்டியும் பாத்திர குணத்தை வெளிக்காட்டி நடிக்க வேண்டியிருந்தது. ஒப்பனையை வெங்கடேசன் மிக நுணுக்கமாக என் முகத்தில் தீட்டினார். நாடகம் சிறப்புடன் அரங்கில் விளைந்தது. நாடகம் முடிந்ததும் ஆரோவில் பகுதியைச் சார்ந்த திருநங்கை ஒருவர் என்னிடம் வந்து நீங்கள் எங்கள் சமூகமா என்றார். ஆமாம் தமிழ் சமுகம் என்றேன். அன்பு பொங்க முகத்தில் கிள்ளியவர் உங்களிடம் பெண்மை நிறைகுடமாக இருக்கிறது என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார். அவரை ஏய்த்த பெண் வேடம் பற்றி நானே சிரித்துக் கொண்டேன். Xy உள்ள ஆண் பெண்ணில் பாதி தானே. இந்த நாடகம் காணப் புறத் தேர்வாளராக வந்திருந்த பேராசிரியர் இராமானுசம் ஐயாவின் பாராட்டு மிக முக்கியமானது. அடுத்த நாள் காலையில் பேராசிரியர் ஆறுமுகம் சார் என்னை அவருடைய அறைக்கு அழைத்தார். அங்கு இராமானுசம் ஐயா அமர்ந்திருந்தார். நீ தான் வேலைக்காரியாக நடித்த பையனா ? என்றார். ஆமாங்கையா என்றேன். நல்லா நடிச்சீங்க தம்பி என்றார். நன்றி ஐயா என்றபடி உளம் பூரித்து நின்றேன்.

இதைப் போன்றே 2001 ல் என்னுடைய நண்பர் பாலா பழனி இதே நாடகத்தை இயக்கினார். இதிலும் நான் தான் சமையற்காரி. ஆதியாக திவ்யாவும், காரையாராக பால முரளி கிருட்டினனும், இரு மகன்களாக செல்வம், பாபு  ஆகியோர் நடித்தனர். நாடகத்தின் ஒளியமைப்பை சிபு எஸ் கொட்டாரம் செய்தார். இதில் நடிக்கும் போது மூன்று அடியில் நீண்ட தலை முடி இருந்தது. பெண்ணாகவே மாறி நடித்தேன். இந்த நாடகம் எனக்கு நல்ல நடிகன் என்ற  பெயரை வாங்கித்தந்தது. 
  காலங்கள் தன்னுள் தங்கிய பதிவுகளை முன்னோக்கியும் பின்னோக்கியும்  நகர்த்திய பூதகண்ணாடியின் திரைக்குள் ஓசையிடும் நிகழ் களங்களின் ஒளிப்புள்ளிகளுக்குள் அதிரும் மனதூட்டத்திலிருந்து ஒய்யாரம் ததும்ப நாடகமொழி புறப்பாடாகிறது. சரியாய் 1998 அதாவது  இன்றிலிருந்து பதினாறு ஆண்டுகள் பின்னூட்டமாய் சுருட்டிப் பதுங்கி இருந்த அரங்கியல் ஆலோலங்கள் கிளிகள் விரட்டும் வள்ளிக்குறத்தியின் கல் சுழற்றும் கயிற்றிலிருந்து எழும்புகிறது. 

இராமானுஜர் – நாடக நூல். வைணவ அடியாரின் சமுகப் புரட்சியைச் சித்தரிக்கும் நவீன நாடகம். அடித்தட்டு மக்களை வைணவ எல்லைக்குள் நிறுத்தி சக மாந்தனாகக் கண்ட இராமானுசன் எனும் வைணவ அடியாரின் வாழ்வுப் பதிவினை நாடகம் முன்னிருத்துகிறது. மத்திய அரசின் சரஸ்வதி விருது பெற்ற இப்பனுவலைப் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி எழுதியுள்ளார். புது டெல்லி தேசிய நாடகப்பள்ளியின் பேராசிரியர் கே. எஸ். இராஜேந்திரன் இயக்கத்தில் இப்பனுவல் முதல் அரங்கேற்றமாக எழும்பூர் மியூசியம் நாடக அரங்கில் மூன்று நாட்கள் தொடர் நிகழ்வாய் நிகழ்த்தப்பெற்றது. 1998ல் இந்த நாடகத்தை நிகழ்வித்த பிறப்பியல் களமானது சென்னை தரமணிக்குள் தமிழாய்வு நூற்கள் நிறம்பிக் கிடந்த செம்மொழிப்புலத்தில் தொடங்கியது. உலகத்தமிழாராச்சி நிறுவனமும் புது டெல்லி தேசிய நாடகப்பள்ளியும் இணைந்து நடத்திய 40 நாட்கள் நாடகப் பயிற்சிப் பட்டறையில் நிறைவு நாள் இந்த நாடகத்தின் பிறந்த நாள். எனது நவீன நாடக அரங்கேற்றத்தின் தொடக்க நாள். மனத்தில் எழும் வாழ்வியல் கற்பனைகள் ஒவ்வொன்றும் முற்றுமாய் மறைந்துவிடுவதில்லை. பகலிலும் இரவிலும் தனிமையிலும் கூட்டாளிகள் சூழ்விடத்தும் மெல்லுதடுகள் அசைவின்றி நாக்குகள் அசைய மந்திர உச்சாடனங்களாய் என்னுள் மெளனமாய் ஊடாடிக்கொண்டிருந்த கலைக்கனவினை மெய்யாக்கிடும் விதமாய் ஒரு விளம்பரம். தமிழக நாடகத்துறையில் இயங்கும் கலைஞர்களுக்கான நாடகப் பயிற்சி முகாமுக்கு வருக! வருக! என்று தினமணியில் வந்த விளம்பம் உத்வேகப்படுத்தியது. நாடகப் பயிற்சி, உணவு, உறைவிடம் எல்லாம் இலவசமாகத் தருவதாகவும் தகவலிருந்தது. அன்றே விண்ணப்பித்தேன். அழைப்பும் வந்தது. எந்த முன் திட்டமும் இல்லாமல் கல்லூரிக்காலத்தில் வாங்கிய விடுதிக்கறை படிந்த சூட்டேசுடன் சென்னைக்குக் கிளம்பினேன். சென்னை சென்ரலில் வந்து இறங்கிய போது பாய்ந்து சென்று கொண்டிருக்கும் வாகனங்கள் அச்சமூட்டியது. தரமணி முகவரியை வைத்துக் கொண்டு பலரிடம் காட்டிய போது யாருக்கும் உலகத்தமிழாராச்சி நிறுவனம் தெரிந்திருக்கவில்லை. முடிவில் ஆட்டோ ஒன்றைக் குறித்த தொகை பேசி முடித்துக் கிளம்ப வேண்டியிருந்தது. ஆட்டோக்காரர் இடத்தை எப்படியோ தேடிப்பிடித்து உலகத்தமிழாராச்சி நிறுவனத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பித்தார். உலகத்தமிழாராச்சி நிறுவனத்தில் அன்று காலை முதலாகவே பயில்வோருக்கான தேர்வு நடந்தது. எல்லாம் புதிதாய் இருந்தது எனக்குத் தெரிந்த நாடகம் தவிர. மதிய இடைவேளைக்கு பின் முதல் ஆளாக என் தேர்வு இருந்தது, அச்சம் கலந்த மனதுடன் உள்ளே நுழைந்தேன். அறியப்படாத முகங்கள். யாரையும் கண்டிராத அச்சம். எனைப் பற்றிய முதல் கேள்விற்கு என் பதிலை விட கொங்கு நாட்டு தமிழில் உலறியது எல்லோருக்கும் பிடித்துப் போயிருந்தது. நாடக அனுபவத்தைக் கேட்ட போது எட்டாம் வகுப்பிலிருந்து பள்ளி நாடகத்திலும், பகவதி அம்மன் கோயில் திருவிழாவுக்காகப் போடப்படும் சமுக நாடகங்களில் நடித்த அனுபவத்தையும் வரிசைப்படுத்தினேன், பாராட்டி விட்டு நடிக்கச் சென்னார்கள். பசியால் வாடும் கிழவனாக நடித்து, 40 நபர்களில் ஒருவனாகத் தேர்வாகிவிட்டேன். நடிப்பைக் கண்டு வியந்து போனதாகப் பின்னாலில் சிலர் சொல்லக் கேட்டேன். ஊரின் வல மூலையில் இருந்த மாமா வீட்டுப் போன் செய்து அம்மாவுக்குத் தகவல் சொல்லிட்ட நிமிடத்தில் இருந்து 40 நாட்கள் சென்னை வாசியாகிப் போனேன்.

காலையில் யோகா, களரி, சிலம்பம். காலை உணவுக்குப் பிறகு நாடக விளையாட்டு, நடிப்பு, குரல் பயிற்ச்சிகள். மதிய உணவிற்குப் பின் அரங்க வடிவமைப்பு சார்ந்து பயிற்ச்சி இருக்கும். மாலை டீக்குப் பிறகு இராமானுஜர் நாடகப் பிரதி வாசிப்பும் ஒத்திகையும். நாடகம் நடிக்க எதுக்குடா இப்படிப் போட்டு வதைக்கிறாங்கனு முதலிலே தோனுச்சு. அப்புறம் தான் ஒவ்வொரு பயிற்சிக்கும் நாடகத்திற்கும் தொடர்பிருப்பதை உணர முடிந்தது. இந்த நாடகத்தில் பல நவீன நாடகக் கலைஞர்கள் பங்கெடுத்தனர். நல்ல பாத்திரங்களைப் பெற போட்டியும் இருந்தது. நான் நவீன நாடகத்திற்குப் புது முகமாக இருந்தாலும் இராமானுஜர் நாடகத்தில் பெரிய நம்பி எனும் முதன்மைப் பாத்திரத்தை இயக்குனர் இராஜேந்திரன்  கொடுத்தார். இதற்குத் தேற்றமும் குரல் வளமும் உதவியிருந்தது. ஆளவந்தாரின் முதன்மைச் சீடர்களில் ஒருவராகிய பெரிய நம்பி படைப்பு கதைத் தலைவன் இராமானுஜனுடன் நெருக்கமான பாத்திரமாக இருந்தது. இராமானுஜனைக் காப்பாற்ற வேண்டி அரச தண்டனையால் கண் இழந்து, கூரேசருடன் சென்று மடியும் வரை தனித்துவத்துடன் பயணித்த பாத்திரமாகும்.  தொடக்க  ஒத்திகை நாட்களில் நாடக வசனத்தில் கொங்கு வாசம் அடிப்பதாகப் பலரும் கிண்டல் அடித்தனர். கடின வசனப் பயிற்ச்சிக்குப் பின் மாற்றிக்கொண்டேன். ”கச்சி வந்தேன் உங்களை திருவரங்கம் அழைத்துச்செல்ல” என்ற முதல் வசனம் மனதில் அசைபோட்டுக் கொண்டுதான் இருக்கிறது. 

இந்த நாடக பட்டரையில் தமிழ் பல்கலைக்கழக நாடகத்துறைப் பேராசிரியர். சே இராமானுசம், மேடைக்கலைஞர் எஸ்.பி சீனிவாசன், புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறைப் பேராசிரியர் இராசு, தேசிய நாடகப்பள்ளி பேராசிரியர் கே எஸ் இராஜேந்திரன், கலைஞர் பூசன், போன்றவர்கள் முதன்மைப் பயிற்றுநராக இருந்தனர். தினமும் நாடகம் பற்றிய விவாத அரங்கம் உணவுக்குப் பின்னர் நடைபெறும். உண்ட தூக்கம் மறைய விவாதம் கலகலப்பாய்ச் செல்லும். இதில் கூத்துப்பட்டறை முத்துச்சாமி, பேரா. கே.ஏ.குணசேகரன், அம்சன்குமார், ஜீவா, மங்கை, பிரளயன், வேலுசரவணன், நாசர், பேரா வ ஆறுமுகம், செயந்தன், மித்திர தேவநேசன், நடேசன், கலைராணி எனப் பலரும் அறிமுகமாயினர். இன்று சிறப்பாக நாடகப்பங்காற்றும் செவ்வாலியர் விருது பெற்ற முனைவர் காந்திமேரி, முனைவர் பெ கோவிந்தசாமி, ஆழி வெங்கடேசன், பிரபாகரன், ஜெகன், ஏர்முனை அருள்மொழி. திரைக்கலைஞர் சண்முக ராஜா, திருப்பூர் சசிக்குமார் எனப் பலரும் பயிற்சி பெற்றனர்.

இரவு எட்டு மணிக்குள் நாடகப் பயிற்சியும் ஒத்திகையும் முடியும். இரவு உணவு முடித்து விட்டு ஊர்க்கதைகள் பேசுவோம். திருநங்கையாகப் போகும் ஒருவரும் பயிற்சி பெற்றார். இரவில் அவரின் பாடல் ஆழ்மனத்தினை இதமூட்டும். நண்பர் ஒருவர் பறையிசை வாசிக்க நான் கொங்கு நாட்டுப்பாணியில் பறையாட்டம் ஆடுவேன். சில நாட்களில் மது மயக்கத்தில் இரவை விடியச் செய்து விடுவோம். பெசண்ட் நகர் கடற்கரையில் கூட்டாகக் கதை பேசி பார்வையாளர் கூட்டதைக் கூட்டுவோம்.   பயில்வோரை நாடக களத்திற்குள் ஒருங்கிணைக்கும் விதமாகக் கூத்துப்பட்டறையின் வெள்ளை வட்டம் என்ற நாடகத்தை வீடியோ பதிவாகப் போட்டனர். அடுத்து பாதல் சர்க்காரின் வீதி நாடகம் ஒன்றைப் பிரளயன் இயக்கத்தில் நிகழ்த்தினர். இரு நாடக வடிவங்களையும்  மிரண்ட விழிகள் பிதுங்கப் பார்த்து மகிழ்ந்தேன். 

நாடக நிகழ்வு அன்று என்னுள் ஒரு பிரமிப்பு மிகுந்திருந்தது. ஒப்பனை முடிந்து அரங்கில் தோன்றிய கணத்தில் ஏற்பட்ட அச்சம் சில நிமிடங்களில் மறைந்து பெரிய நம்பியானேன். மூன்று நாட்கள் நாடகம் சிறப்பாய் முடிந்தது. எல்லோரும் விடை பெற்றுக் கிளம்பினார்கள். என்னோடு சேர்த்து சிலர் மட்டும் உலகத்தமிழாராச்சி நிறுவனத்தில் இரவு தங்கினார்கள். தனிமை வாட்டியது. விடியல் தொடங்கும் முன்னர் பஸ் பிடித்து ஊரை நோக்கி பயணித்தேன். பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் நாடகம் படிக்கும் முடிவோடு பயணம் இருந்தது.

 அண்ணமலை எனும் தொடர் சன் டீவியில் 1999 - 2004 வரை ஒலிபரப்பாயிற்று.   அதில் சூதாடிச் சித்தனாக நடித்தேன். இது என் முதல் மீடியா நுழைவாயிலாக அமைந்தது. இதை அடுத்து விஜய் டீவியில் காத்துக் கருப்பு. அமனுசியக் கதைகளுக்கு வரம் முழுமையும் கதை சொல்லியாக இருந்த அனுபவம். முற்றும் புதிதானது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:நவினன்&oldid=2148874" இலிருந்து மீள்விக்கப்பட்டது