பயனர்:கிடாரக்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உழவனின் மண்வாசனை:-

சிறுகதை:-

    வீட்டுக் கொல்லைப் புறத்தில் மாடுகளுக்கு வைக்கோலும், தண்ணீரில் புண்ணாக்குக் கரைசலையும் கலந்தபடி ஒரே நேரத்தில் இரு வேலைகளைச் செய்து கொண்டிருந்தார் மாடசாமிகுடும்பர்.
        "அப்பா".....
 பிள்ளைகளின் குரல் ஒன்றாகக் கேட்கவே, திரும்பினார். மூத்தவன் பழனியும், இளையவன் சேகரும் நின்று கொண்டிருந்தனர்... "என்னப்பா விஷயம்?"
    "உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்ப்பா!"
     "என்கிட்டடே தனியா பேச என்னப்பாயிருக்கு?" தலையில் கட்டிய தலைப்பாகைத் துண்டை எடுத்து உதறி, தன் மார்பை துடைத்தப்படி கேட்டார்....
       வீட்டுக்குள் இருந்த பார்வதி, "காலையிலயிருந்து வெறும் வயித்துலயிருக்கீங்க ....இந்த மோரையாவது குடியுங்க...." என சொம்பு மோரை கணவரிடம் நீட்ட....
      கயிற்று கட்டிலில் உட்கார்ந்தபடி மோரை வாங்கிக் குடித்தவர், "என்னவோ பெசணும்ன்னு சொன்னீங்களேடா.... உம்முன்னு இருந்தால் என்ன அர்த்தம்?"
          "அப்பா! என்னுடைய சென்னை நண்பன் ஒருத்தன், நம்ம கிராமத்துல, ரியல் எஸ்டேட் பண்றதாச் சொல்லியிருக்கான்.... நம்ம ஊரை கூட வந்து பார்த்துட்டுப் போயிட்டான்...."
        "கேள்விப்பட்டேன்! அதற்கு என்ன இப்ப?"
    "தண்ணீர் இல்லாமல் நாமளும் எவ்வளவு நாள்தான் விவசாயம் பண்றது? பேசாமல், நிலத்தையெல்லாம் வித்துட்டு, வர்ற வட்டிப் பணத்துல உட்கார்ந்து சாப்பிடலாமே..... நம்ம ஊர்லகூட எல்லாருமே அவங்க அவங்க இடங்களை விற்கறதா முடிவு பண்ணிட்டங்க.... நல்ல விலையும் தர்றாங்களாம்.... என்ன சொல்றீங்க?" -பழனி கேட்டான்.
    தனது அண்ணனின் கருத்தை சேகரும் கூடவே  ஆதரித்தான்...
    தனது மகன்களை பார்த்தார் மாடசாமி குடும்பர்..... வேஷ்டி, சட்டை போட்ட உருவத்தில் மட்டும் தாண்டா நீங்க கிராமத்து விவசாயியோட பையனாயிருக்கீங்க.... மற்றபடி பேச்சு சிந்தனை எல்லாமே வெள்ளைக்காரன் போலயிருக்கு.
      வயல், தோட்டத்தையெல்லாம் வித்துட்டு வேலை எதுவும் செய்யாமல், என்னைக் கால் மேல காலைப் போட்டு படுத்துக் கிடக்கச் சொல்றீங்க.... அப்படித்தானே....?
                      "ஆம்மாம்ப்பா!"
   "வேலை செய்யாட்டி, நோய், மனபாரம் எல்லாம் வந்து என்னை நடைப்பிணமா அலைய சொல்றீங்க.... அதற்குப் பதிலாக என்னை நீங்க சாகச் சொல்லாம் மேய்...
உங்களைப் படிக்க வெச்சு வளர்த்து ஆளாக்கினதே இந்த விவசாயம் தாண்டா.... கல்லூரிப் படிப்பை முடிச்சுட்டு, வேலை வெட்டிக்குப் போகாமல், ஊரைச் சுற்றினால் இப்படித்தான் வில்லங்கமா யோசிக்கத் தோணும்....."
           "அப்படின்னா, விளைச்சலே தராத இந்த நிலத்தை வெச்சு என்ன செய்யப் போறீங்க? எங்களுக்கும் இந்த நிலத்துல உரிமையிருக்கு இல்லையா? -பழனி
  "மவனே! உன்னைப் படிக்க வைக்காமல், சின்ன வயசுலேயே ஏரைப் பிடிச்சு உழறதக்கு வயல்காட்டிற்கு அனுப்பியிருந்தால், நீ இப்ப உரிமையைப்பற்றி பேசிட்டிருக்கமாட்டே.... உன்னை படிக்க வெச்சது, நாலு நல்ல விஷயங்களை கத்துக்கத்தானே தவிர, பெத்தவங்களை சங்கடப்படுத்த அல்ல.... போன வருஷம் நம்ம சித்தப்பா சொத்தையெல்லாம் வித்தான்.... சுறுசுறுப்பாத் திரிஞ்சவனை சோம்பேறித்தனம் ஆறு மாசத்துல கொன்னுடுச்சு.... அந்த நிலமை எனக்கும் வரக்கூடாது. உதவி செய்யலனாலும், உபத்தரம் செய்யாமல் இருங்க...."
           "அம்பா! நாங்க சொன்னதற்கு நீங்க சம்மதிக்கலைன்னா, சொத்தைப் பிரிக்க நாங்க பஞ்சாயத்தைக் கூட்டணும்" என்றான் சேகர்.
        அதுவரைப் பொறுமையாயிருந்த பார்வதி இரு மகன்களையும் மாறி, மாறிக் கன்னத்தில் அடித்து திட்டினாள்... "டேய்! உங்கப்பாவை மாதிரி விவசாயத்தை நம்பிகிட்டுயிருக்கற ஆளுங்க ரொம்ப கம்மிடா.... அவங்களை போல மண்ணை நம்பற ஆளை காயப்படுத்தாதீங்க....
         சற்று நேரம் அமைதியான மாடசாமி குடும்பர், ஏதோ பொறி தட்டியவர் போல முகம் மலர்ந்தார்....பின் "சரி, நீங்க சொல்ற மாதிரி நான் கேட்கணும்ன்னா, ஒரு நிபந்தனை...."
          இப்போது பழனியும், சேகரும் முகம் மலர்ந்தபடி, "என்னப்பா நிபந்தனை?"
         "நான் இந்த மண்ணை நம்பி இத்தனைக் காலமாயிருந்துட்டேன்... விவசாயியா என் காலத்தை தள்ளிட்டேன்.. என் பசங்களை விவசாயத்தோட அருமை தெரியாமல் வளர்த்துட்டேன்... வர்ற ஆடி மாசத்துலயிருந்து கார்த்திகை மாதம் அறுவடை வரை நீங்க இருவருமே நம்ம நிலத்துல நெல்லை விதைத்து அறுபடை பண்றீங்க.... தோட்டம் போட்டுக் காய்கறிகள் பயிரிட்டு விற்கறீங்க.... நான் இந்த ஐந்து மாசம் செய்யற வேலைக்கு கூலி கொடுத்தால் போதும்.. நான் எதுவுமே கத்தும் தரமாட்டேன்.... இந்தப் பரீட்சையில நீங்க ஜெயிச்சாலோ, தோத்தாலோ பரவாயில்லை... தைப் பொங்கலுக்கு சொத்தை உங்க பெயருக்கு எழுதிடறேன். நான் இந்த மண்ணுல ஐம்பது வருஷம் பட்ட கஷ்டத்தை என் பசங்க ஐந்து மாசமாவது படணுன்னு ஆசைப் படறேன்..."
           "எதற்குப்பா இந்த விபரீத நிபந்தனை?" -பழனி 
      "இந்த மண்ணை நீங்க காப்பாத்தறீங்களா? இல்லை, இந்த மண் உங்களைக் காப்பாற்ற போவுதான்னு தெரியணும்.... வேலை வெட்டிக்கே போகாத உங்களுக்கு இனிமேல் பொறுப்பு வரும்.... உழைப்போட வலியும், அருமையும் தெரியத்தான் இந்த நிபந்தனை..... ஒத்துக்கறீங்களா?"
    "ஆனால், எங்களுக்கு விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாதேப்பா!......" -பழனி
   "என்னைப் போல விவசாயிகிட்டேப் போய் கேளு.... விவசாய நல சங்கங்கள், கிராமப்புறச் சங்கங்கள், வேளாண்மைக் கழகங்களைப் போய்ப் பாரு..... கத்துக்கோ! இஷ்டப்பட்டுக் கஷ்டப்படு.... பிரச்சினை விலகிடும்...."
     "சரிப்பா! நாங்க ஒத்துக்கறோம். ஆனால் நீங்க வேலை செய்ய வேண்டாம்."
     "பசங்களுக்குக் கீழே கூலியா வேலை செய்யறதுகூட ஒரு தனி சுகம்ப்பா...."
   "அதற்கு மேல உங்க இஷ்டம்! உங்க நிபந்தனையிலும் ஜெயிச்சு அதன் பிறகு சொத்தையும் விற்கறோம்...." எனக் கூறிவிட்டு இருவரும் செல்ல...
     "ஏங்க இப்படியொரு முடிவை எடுத்தீங்க.... பசங்களுக்கு இப்ப வந்திருக்கறது பண ஆசை ... இப்படி பைத்தியக்காரத்தனமா சொத்தை தூக்கி கொடுத்துட்டீங்களே...." கோபமாய் பார்வதி ட்க,
    "நம்ம பசங்க சொத்தை விற்மாட்டாங்க... கவலைப்படாதே! மனுஷங்களுக்குச் சுற்றியிருக்கற வங்களைவிட, இந்த மண்ணுதான் அதிகமா அனுபவப் பாடங்களை கற்றுக் கொடுக்கும்.... நம்ம பசங்க நல்லவங்கதான்.... இந்த ரியல் எஸ்டேட்காரனுங்கதான் கொஞ்சம் கெடுத்திருக்காங்க.... அது கூடிய சீக்கிரமே மாறிவிடும்."
     "நம்ம பசங்கமேல உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையாங்க?"
    "ஆமாம் பார்வதி! நம்ம தோட்டத்திலுள்ள தென்னை மரங்கள் எல்லாமே சின்ன வயசுலேயே மூத்தவன் பழனி கையால நட்டினது.... மரங்கள் வளர்ந்து, ஒருமுறை சூறைக்காத்துல மரங்கள் எல்லாம் கீழே விழுந்தப்ப, அவன் அழுத அழுகை எனக்கு ஞாபகமிருக்கா? அவன் இயற்கை மீது பாசமுள்ளவன்... அவனுடைய உணர்ச்சியை மறுபடியும் நான் தட்டி எழுப்பியிருக்கேன்.... நமக்கு மூணாவதா ஒரு பெண் குழந்தை பிறந்து ஐந்து வயசுல உடம்பு சரியில்லாமல் இறந்ததே..... அந்தக் குழந்தை மீது சின்னவன் சேகர் உயிராயிருப்பான்.... நம்ம குழந்தையை நம்ம விவசாய நிலத்துலத்தானே புதைச்சோம்.... அப்பயிருந்து ரொம்ப நாளா கல்லறையே கதின்னு கிடப்பானே சேகர்...... அவன் இந்த மண் மீது பாசமாயிருக்கறதை வெச்சுத்தான் நம்ம பசங்க மாறமாட்டாங்கன்னு முடிவு பண்ணினேன்...... இந்த ரெண்டு சம்பவத்தையும் வெளியூர்லபோய் படிச்சுட்டு வந்ததனால மறந்திருப்பாங்க..... இனி இதையெல்லாம் நாம அடிக்கடி ஞாபகப் படுத்தினாலே போதும் பார்வதி..”
          “நீங்க சொல்றதும் சரிதாங்க!  எனக்கு இப்ப நம்ம பசங்க மேல முழு நம்பிக்கை வந்திடுச்சிங்க!”
    “அண்ணா!  அவசரப் பட்டுட்டோமோ? என்ன பண்ணப் போறோம்ன்னு தெரியலையே....”  -சேகர்.
   “அவசரப்பட்டிருந்தாலும், கத்துகிட்டு ஜெயிக் கணும்டா..... அப்பாகிட்டே ஜெயிச்சுக்கிட்டு போய் சொத்து கேட்டால்தான் மரியாதை!”
   “அப்பா, அம்மா! எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க...... இன்னைக்கு நம்ம நிலத்துல நெல்மணி விதைக்கப் போறோம்”.
  “விதைக்கறதுக்கு முன்னாடி, நம்ம தங்கச்சியைப் புதைச்ச இடத்துல கும்பிட்டு விதையுங்கப்பா...”
    இப்போது பழனியும், சேகரும் ஒருவரையொருவர் பார்த்தார்கள்.... பின், இருவரும் செருப்புகளைக் கழற்றி விட்டு நிலத்தில் இறங்கி மண்ணை நோக்கியும், கல்லறையை நோக்கியும் கும்பிட்டார்கள்....
   மாடசாமி குடும்பருக்கு தன் மண் மீது நம்பிக்கை முழுமையாக வந்தது.
   இருவரின் கடின உழைப்பாள், நெல்கதிர் நன்றாக வளர்ந்தது.
   “என்னடா! இரண்டுபேரும் தூங்காமல் ஏதோ சிந்தனையோட இருக்கறீங்க.... நாளைக்கு அறுவடையாச்சே!”
    “அதாம்ப்பா கவலையாயிருக்கு...”
   “அறுவடைங்கறது, உங்க உழைப்பு..... பலன், நீங்கப்பட்ட கஷ்டம்தானே.... இதுல உங்களுக்கு என்ன வருத்தம்?”
      “விளைச்சல் கஷ்டப்பட்டு நாங்க பண்ணினாலும், கதிருங்க, பயிருங்க எல்லாம் எங்க பிள்ளைகள் மாதரி.... கஷ்டப்பட்டு உரம் போட்டு, தண்ணர் ஊற்றி நாங்க வளர்த்ததுப்பா! நெல்மணிகளைத் தேடிவர்ற குருவிங்க கூட்டம் இனி நாளையிலயிருந்து வராதே! தூக்கணாங் குருவிகள் கூடத் தன் கூடுகளுடைய இருப்பிடத்தை மாத்திக்குமே.....சேகர் கூறினான்”
      தன்னுடைய இந்த ஐம்பது வருஷ விவசாய அனுபவத்தில் குருவி, காகம், பாம்புகளைப் பற்றி தானே இதுவரை யோசித்ததேயில்லை.... தன் மகன் தனக்கு ஒருபடி மேல் சிந்தித்ததில் மாடசாமி குடும்பருக்கு பெருமை....
       “சரி, இதுவரை நீங்க விவசாயத்திற்கு செஞ்ச செலவு எவ்வளவு? நாளை அறுவடையில, போட்ட காசு திரும்ப கிடைக்குமா? நக்கலாய் மாடசாமி குடும்பர் கேட்க....”
      “உழுதவன் கணக்குப் பார்த்தால், உலைக்கு கூட மிஞ்சிடாதுன்னு உங்களுக்கு தெரியாதா? எங்களுக்கு லாபமோ, நஷ்டமோ இந்த மண்ணை விட்டு பரிஞ்சிருக்க முடியாதுப்பா..... ஒண்ணுமே தெரியாத எங்களுக்கு விவசாயம்ங்கற தொழிலை கற்றுக் கொடுத்ததோடு, இயற்கையை நேசிக்கவும் கற்றுக் கொடுத்திடுச்சுப்பா.... உழவர் திருநாளோட முழுப் பலளையும் நாங்க இந்த பொங்கலுக்குத்தாம்ப்பா அனுபவிக்கப்போறோம்...  இனி சொத்தை பற்றி பேச மாட்டோம்ப்பா.... உங்ககூட சேர்ந்து நாங்களும் இந்த மண்ணுல உழைக்கப்றோம்ப்பா....” இருவரும் மகிழ்ச்சியாக கூறவும்,
    கண்ணீருடன் தன் இரு மகன்களையும் அரவணைத்தப்படி மாடசாமி குடும்பர் சொன்னார்....”

கடைசிக் காலத்துல நம்மை சுமக்கற மண்ணு நம்மகிட்டே எதிர்பார்ப்பதே ஒண்ணே ஒண்னுதாண்டா பசங்களா..... நீங்கள் என்னைச் சுமக்க வேண்டாம். பாதுகாத்து காப்பாற்றினாலே போதும்!”

     கதை: மு.மஜாமாரிதேவேந்திரன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கிடாரக்குளம்&oldid=2180613" இலிருந்து மீள்விக்கப்பட்டது