பதிவு அஞ்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1936ல் ஆர்.எம்.எஸ் குயீன் மேரி கப்பலில் கனடாவிலிருந்து பெரிய பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்ட ஒரு பதிவு அஞ்சல்.
மின்னணு வரிக்குறியுடன், இந்தியாவில் இருந்து ஐக்கிய இராச்சியத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு பதிவுசெய்யப்பட்ட பொதி.

பதிவு அஞ்சல் என்பது, பல்வேறு நாடுகளில் உள்ள அஞ்சல் சேவைகள் வழங்கும் ஒரு சேவை ஆகும். இச்சேவையில், அனுப்புபவர், அனுப்பியதற்குச் சான்றாக பற்றுச்சீட்டொன்றைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், தேவையெனில், குறித்த பொருள் உரிய இடத்தில் சேர்ப்பிக்கப்பட்டதா, அல்லது அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்ற தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும். நாடுகளைப் பொறுத்து, இதில் கூடுதலான சேவைகளும் கிடைப்பது உண்டு. பொருள் எடுத்துச்செல்லப்படும் வழியில் எங்கெங்கே இருக்கிறது என்பதை அறியும் வகையில் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதும், சில வேளைகளில், இழப்புக்கான ;காப்புறுதிகள் வழங்கப்படுவதும் உண்டு.

பின்னணி[தொகு]

முன்னர், பதிவு அஞ்சல் மனித முயற்சியாலான செயற்பாடாக இருந்தது. இது, கையால் குத்தும் முத்திரை, பதிவுச் சிட்டை போன்ற பல வகையான அஞ்சல் குறிகள் உருவாகக் காரணமாயிற்று.[1] பல நாடுகள் பதிவு அஞ்சலுக்காக தனியான அஞ்சல் எழுதுபொருட்களையும், அஞ்சல் தலைகளையும் வெளியிட்டுள்ளன. தற்போது, பதிவு அஞ்சல் செயல்முறைகள் கணினிமயப்பட்டுள்ளன. அச்சிட்ட தொடர் இலக்கங்களைக் கொண்ட பழைய சிட்டைகளுக்குப் பதிலாக இப்போது வரிக்குறியீட்டுச் சிட்டைகள் பயன்படுகின்றன.

பொதுவாக, பொருளுக்கு வழமையான அஞ்சல் கட்டண வீதப்படி முன்கட்டணம் அறவிடப்பட்டு, அதற்குமேல் பதிவுக் கட்டணம் எனப்படும் கூடுதல் கட்டணமும் அறவிடப்படும். மேற்படி கட்டணம் செலுத்தியதும் அனுப்புபவருக்குப் பற்றுச்சீட்டு வழங்கப்படும். அத்துடன் தனித்துவமான எண் கொண்ட பதிவுச் சிட்டை ஒன்று கடிதத்தில் ஒட்டப்படும். கடிதம் அல்லது பொதி ஏதாவது அஞ்சல் பிரிப்பு அலுவலகங்களூடாக ஒரு அஞ்சலகத்தில் இருந்து இன்னொரு அஞ்சலகத்துக்குச் செல்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு பதிவேட்டில் கையொப்பம் இடப்படும். இறுதியாக இது உரியவரிடம் வழங்கப்பட்டு பெற்றுக்கொண்டதற்குச் சான்றாக அவரின் கையொப்பம் பெறப்படும். கணினிமயமாக்கம், வரிக்குறியீட்டுத் தொழில்நுட்பம் போன்றவற்றால் பெருமளவு பதிகைகள் எளிமையாக்கப்பட்டதோடு அனுப்புனரும், பெறுனரும், அனுப்பப்பட்ட பொருளின் நிலை குறித்து இணையம் மூலம் அறிந்துகொள்வதற்கான வசதிகளும் ஏற்பட்டுள்ளன.

பன்னாட்டு அளவில் பதிவு அஞ்சல்களின் பயன்பாடுக்கு 13 இலக்கங்களுடன் கூடிய எண்களையும், அதற்கொத்த வரிக்குறியீட்டையும் கொண்ட சிட்டைகள் தேவை. முதல் இரு எழுத்துக்கள் பதிவைக் குறிக்கிறது (பொதுவாக "RR"). இறுதி இரண்டு எழுத்துக்கள் பதிவு செய்யப்பட்ட பொருள் அஞ்சலில் இட்ட நாட்டைக் குறிப்பது. எடுத்துக்காட்டாக, RR913282511SG என்பது சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டது. RB5584847749CN சீனாவிலும், RR123456785KR கொரியாவிலும் பதிவு செய்யப்பட்டவை.[2]

மேற்கோள்[தொகு]

  1. Mackay (1982), pp. 154–179, 296–366
  2. "S10c-5 Identification of postal items - Part C: 13 character identifier for special letter products". Universal Postal Union. 2004-02-03. Archived from the original (doc) on 2007-07-16. பார்க்கப்பட்ட நாள் 2009-12-15.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிவு_அஞ்சல்&oldid=3561822" இலிருந்து மீள்விக்கப்பட்டது