உள்ளடக்கத்துக்குச் செல்

படிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவார்ட்ஸ் படிகம்

படிகம் (crystal) என்பது அதனை உருவாக்கும் அணுக்கள், மூலக்கூறுகள், அயன்கள் என்பன ஒழுங்கமைவான முறையில், திரும்பத் திரும்ப வரும் வடிவொழுங்கில் முப்பரிமாணங்களிலும் நெருக்கமாக அமைந்துள்ள ஒரு திண்மமாகும். படிகம் என்பதைப் பளிங்கு என்றும் சொல்வதுண்டு.

பொதுவாகத் திண்மமாதல் (solidification) செயற்பாட்டின் போதே படிகங்கள் உருவாகின்றன. ஒரு இலட்சிய நிலையில் விளைவு ஒற்றைப் படிகமாக இருக்ககூடும். இந் நிலையில் திண்மத்திலுள்ள எல்லா அணுக்களும் ஒரே படிக அணிக்கோவையில் (crystal lattice) அல்லது படிக அமைப்பில் பொருந்துகின்றன. ஆனால் பொதுவாக ஒரே நேரத்தில் பல படிகங்கள் உருவாவதால் உருவாகும் திண்மங்கள் பல்படிகத் தன்மை (polycrystalline) கொண்டவையாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக நாம் அன்றாடம் எதிர் கொள்ளும் உலோகங்களில் பெரும்பாலானவை பல்படிகங்களாகும்.[1][2][3]

திரவத்திலிருந்து எவ்வகைப் படிக அமைப்பு உருவாகும் என்பது அத் திரவத்தின் வேதியியல் தன்மையிலும், எத்தகைய நிலையில் திண்மமாதல் நிகழ்கிறது என்பதிலும், சூழல் அமுக்கத்திலும் தங்கியுள்ளது. படிக அமைப்பு உருவாகும் செயற்பாடு பொதுவாகப் படிகமாதல் (crystallization) எனக் குறிப்பிடப்படுகின்றது.

பிஸ்மத் படிகம்

வழக்கமாக குளிர்ச்சி அடைதலின்போது படிகங்கள் உருவானாலும், சில சமயங்களில் திரவங்கள் உறைந்து படிகமற்ற நிலையில் திண்மமாவதுண்டு. திரவங்கள் மிகத் துரிதமாகக் குளிர்வடைய நேரும்போது அதன் அணுக்கள் படிக அணிக்கோவையில் அவற்றுக்குரிய இடத்தை அடைவதற்கு முன்பே அசையும் தன்மையை இழந்துவிடுவதனாலேயே இந்நிலை ஏற்படுகின்றது. படிகத் தன்மையற்ற பதார்த்தம் ஒன்று, படிக அமைப்பு இல்லாத, கண்ணாடி, அல்லது கண்ணாடித் தன்மையான பொருள் என்று அழைக்கப்படுகின்றது. கண்ணாடிகளுக்கும், திண்மங்களுக்கும் இடையே பல சிறப்பான வேறுபாடுகள் - குறிப்பிடத்தக்கதாக கண்ணாடி உருவாகும்போது உருகல் மறைவெப்பம் வெளிவிடப்படுவதில்லை - இருந்தாலும், படிக அமைப்பு இல்லாத திண்மம் என்றும் இதனைக் குறிப்பிடுவது வழக்கம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Stephen Lower. "Chem1 online textbook—States of matter". பார்க்கப்பட்ட நாள் 2016-09-19.
  2. Ashcroft and Mermin (1976). Solid State Physics.
  3. κρύσταλλος, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus Digital Library
"https://ta.wikipedia.org/w/index.php?title=படிகம்&oldid=4100323" இலிருந்து மீள்விக்கப்பட்டது