பச்சைக் குறும்பள்ளத்தாக்கின் பழுப்புக் கரடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

" பச்சைக் குறும்பள்ளத்தாக்கின் பழுப்புக் கரடி " என்பது ஸ்காட்லாந்திய விசித்திரக் கதையாகும். இது ஜான் பிரான்சிஸ் காம்ப்பெல் என்ற ஸ்காட்லாந்திய எழுத்தாளரின் மேற்கு மேட்டுநிலங்களின் பிரபலமான கதைகள் என்ற கதைத் தொகுப்பில் காணப்படுகிறது. நாடோடிப் பயணியான ஜான் மெக்டொனால்ட் இக்கதையைத் தனக்குக் கூறியதாகச் சொல்லும் காம்ப்பெல் இக்கதையானது தி வாட்டர் ஆஃப் லைஃப் கதையின் இணைக்கதையாக உள்ளதையும் குறிப்பிடுகிறார்.[1]

கதைச் சுருக்கம்[தொகு]

ஒரு அரசன் தன் பார்வையையும், நடக்கக்கூடிய திறனையும் இழந்து கொண்டிருந்தான். அவருடைய இரு மூத்த மகன்கள், அவரைக் குணப்படுத்துவதற்கான உயிர் நீரைக் கொண்டுவருவதற்காகப் புறப்பட்டனர். முட்டாளென அறியப்பட்டிருந்த மூன்றாவது மகனான ஜானும் தந்தைக்காக உயிர்நீரைக் கொண்டுவரப் புறப்பட்டுச் சென்றான். அவன் சென்றடைந்த முதல் நகரத்தில் தன் சகோதரர்களைக் கண்டான். பயணத்தைத் தொடர்ந்த ஜான் வழியில் இரவைக் கழிக்க ஒரு மரத்தில் ஏறினான். ஆனால் வாயில் நெருப்புத்தணலுடன் அங்கு வந்த ஒரு கரடி அவனைக் கீழே இறங்கி வரும்படிக் கூறியது. அவன் கீழே இறங்கி வராவிட்டால் தான் மரத்தின்மீது ஏறி வந்துவிடுவதாகக் கூறி அவனை அச்சுறுத்தியதால் ஜானும் கீழிறங்கி வந்தான். கரடி ஒரு மானைப் பிடித்துச் சமைத்து இறைச்சியை அவனுக்கு அளித்தது. காலையில் தன்மீது அவனைச் சவாரி செய்ய வைத்தது. ஒவ்வொரு இரவும், பச்சைக் குறும்பள்ளத்தாக்கின் பழுப்புக் கரடி அனுப்பியதாகக் கூறி ஒவ்வொரு ராட்சனுடன் தங்க வைத்தது. மூன்றாவது ராட்சதன் ஜானுடன் மல்யுத்தம் செய்து அவனை வீழ்த்திய சமயம் அவன் பச்சைக் குறும்பள்ளத்தாக்கின் பழுப்புக்கரடி அங்கு வந்தால் ராட்சனுக்கு அது கெட்ட நேரமாக இருக்கும் என்று சொன்னான். அப்போது அங்கு கரடி தோன்றியது.

ஒரு செம்மறி ஆட்டின் இறந்த உடலைக் கதவின் முன் வைக்க ராட்சசன் உத்தரவிட்டான். ஒரு கழுகு வந்து அதைத் தின்னும் என்றும் அப்போது அக்கழுகின் காதில் இருந்த மருவை ஒரு துளி இரத்தம்கூட வராமல் வெட்டிவிட வேண்டும் என்றும் ஜானிடம் கூறினான். ஜானும் அவ்வாறே செய்யக், கழுகு அவனது தந்தையைக் குணப்படுத்தக்கூடிய உயிர் நீருக்காக அவனைப் பச்சைத் தீவுக்கு கொண்டு சென்றது. அங்கு அவனுக்கு உயிர் நீருடன் மேலும் காலியே ஆகாத ஒரு மதுப் புட்டி, வெட்டவெட்டக் குறையாத ஒரு ரொட்டி, அதே போன்ற ஒரு பாலாடைக்கட்டியும் கிடைத்தன. அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஒரு அழகான பெண்ணை ஜான் முத்தமிட்டான்.

கழுகு அவனைத் திரும்பச் சுமந்து சென்றது. ஜான் ராட்சதனிடம் மதுப் புட்டியைக் காட்டினான். ராட்சதர் அவனுக்குப் பணம், சேணம் மற்றும் கடிவாளத்தை வழங்கினான். அவற்றை ஏற்றுக்கொண்ட ஜான் தன் மனதிற்கினியவள் வந்தால் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள ராட்சதனும் ஒப்புக்கொண்டான். அடுத்த இரண்டு ராட்சதர்களுக்கும் அதே நிபந்தனைகளின் கீழ் ரொட்டி மற்றும் பாலாடைக்கட்டிகளை விற்றான். ஜான், நகரத்தை அடைந்து அங்கிருந்த தனது சகோதரர்களைச் சந்தித்து வீட்டிற்கு வரச் சொன்னான். ஆனால் அவர்கள் அவனைக் கொன்று உயிர் நீரைத் திருடி சென்றனர். அவன் இறந்துவிடவில்லை. நினைவு திரும்பியபோது அங்கு சென்று கொண்டிருந்த ஒரு கொல்லனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டான். கொல்லனும் ஜானைத் தூக்கித் தனது வண்டியினுள் போட்டான். வண்டியிலிருந்த இரும்பு அவனது காயங்களில் நுழைந்து அவன் தோலைக் கரடுமுரடானதாகவும் தலையை வழுக்கையாகவும் ஆக்கி விட்டது.

ஜான் முத்தமிட்ட இளம்பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். கோழிவளர்க்கும் பெண்ணொருத்தி, குழந்தையின் தந்தையைக் கண்டவுடன் அவன் தலைமேல் குதிக்கும் ஒரு பறவையை அப்பெண்ணுக்குக் கொடுத்தாள். அப்பெண், வழியில் அந்த மூன்று ராட்சதர்களையும் சந்தித்து மதுப்புட்டி, ரொட்டி, பாலாடைக்கட்டி மூன்றையும் பெற்றுக்கொண்டு அரசரைப் போய் சந்தித்து நடந்ததைக் கூறினாள். அரசனும் அவள்முன் எல்லா ஆண்களையும் வரவழைத்தான். ஆனால் அப்பறவை யார் தலைமீதும் குதிக்கவில்லை. இன்னும் வராதவர்கள் யாராவது இருக்கிறார்களாவென அரசன் வினவ, கொல்லன் முரட்டுத்தோலும் வழுக்கைத் தலையுமுடைய தனது வேலையாள் ஒருவன் உள்ளதாகத் தெரிவித்தான். அரசன் அவனைக் கூட்டிவரச்சொல்ல, வேலையாளாக வந்த ஜானின் மேல் பறவை குதித்தது. அரசனும் தன் மகனை அடையாளம் கண்டுகொண்டான். ஜான் நடந்தவற்றைத் தந்தையிடம் தெரிவித்து அப்பெண்ணை மணந்து கொண்டான்.

ஆதாரம்[தொகு]

இந்த கதை பிரான்சிஸ் ஹிண்டஸ் க்ரூம் என்பவராலும் தொகுக்கப்பட்டது. இங்கிலாந்து அரசரும் அவரது மூன்று மகன்களும் என்ற கதையின் மாற்றுவடிவமாக இக்கதை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். [2]

பகுப்பாய்வு[தொகு]

கதை வகை[தொகு]

ஐரோப்பிய அறிஞர்களான ஜோஹன்னஸ் போல்ட் மற்றும் ஜிரி பொலிவ்கா ஆகியோர் க்ரிம் ஃபேரி டேல்ஸ் பற்றிய அவர்களின் கூட்டு வர்ணனைகளில் இந்த ஸ்காட்லாந்தியக் கதையை செருமானிய தி வாட்டர் ஆஃப் லைஃப்பின் மாறுபட்ட வடிவமெனப் பட்டியலிட்டனர். [3] இரண்டு கதைகளும் பன்னாட்டு ஆர்னே-தாம்சன்-உதர் குறியீட்டில் ATU 551 ஆக, "தங்கள் தந்தைக்கான அற்புதமான தீர்வுக்கான தேடலில் மகன்கள்" அல்லது "உயிர் நீர்" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கதை வகை, இறக்கும் அல்லது பார்வையற்ற ஒரு அரசனைப் பற்றியதாகவும் அவரைக் குணப்படுத்தக்கூடிய ஒரே பொருளைக் கண்டுபிடிக்க அவரது மூன்று மகன்களை அனுப்புவதாகவும் அமைந்துள்ளது. [4]

குறிப்புகள்[தொகு]

  1. John Francis Campbell, Popular Tales of the West Highlands, "The Brown Bear of the Green Glen"
  2. Groome, Francis Hindes. Gypsy Folk-Tales. London: Hurst & Blackett. 1899. pp. 272-277.
  3. Bolte, Johannes; Polívka, Jiri. Anmerkungen zu den Kinder- u. hausmärchen der brüder Grimm. Zweiter Band (NR. 61–120). Germany, Leipzig: Dieterich'sche Verlagsbuchhandlung, 1913. p. 397.
  4. Aarne, Antti; Thompson, Stith. The types of the folktale: a classification and bibliography. Folklore Fellows Communications FFC no. 184. Helsinki: Academia Scientiarum Fennica, 1961. pp. 195, 197.