நூற்பாலை
பருத்தியிலிருந்தும் செயற்கை இழையிலிருந்தும் கிடைக்கும் பஞ்சை மூலப் பொருளாகக் கொண்டு அதை நூலாக உருவாக்கும் ஆலை நூற்பாலை எனப்படும்.
நூற்பாலையின் பகுதிகள்
[தொகு]நூற்பாலை கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.
- பஞ்சடிக்கும் அறைப் பகுதி
- இழைநார் இணைப்புப் பகுதி
- இழைநார் கீறல் பகுதி
- இரட்டை நெசவு பகுதி
- நூற்றல் பகுதி
- நூல் இரட்டிப்புப் பகுதி
- நூல் சுற்றுப் பகுதி
- சிப்பமிடும் பகுதி போன்றவை இருக்கின்றன.
பஞ்சடிக்கும் அறைப் பகுதி
[தொகு]பஞ்சு அறவை ஆலையின் மூலம் பருத்தியிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட பஞ்சு இங்குள்ள இயந்திரத்தின் தொடக்கப் பகுதியில் இருக்கும் நகரும் பாயில் பிரித்துக் கொட்டப்படுகிறது. மிகப் பெரிய இயந்திரமான இதன் பல்வேறு பகுதிகளில் இந்தப் பஞ்சிலிருக்கும் தூசுகள், பிற கழிவுப் பொருட்கள் நீக்கப்பட்டு பஞ்சு அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து பாய் வடிவில் வெளியேறுகிறது. இதைக் குறிப்பிட்ட எடையில் ஒரு இரும்புக்கம்பியில் சுற்றித் தனியே வெளியில் எடுத்து வைக்கிறார்கள்.
இழைநார் இணைப்புப் பகுதி
[தொகு]பஞ்சடிக்கும் அறையிலுள்ள இயந்திரத்தில் பாயாகச் சுருட்டப்பட்ட பஞ்சுப் பாய் இழைநார் இணைப்பு இயந்திரத்தின் பின்புறமிருக்கும் பகுதியில் பொருத்தப்படுகிறது. இந்த எந்திரத்தின் மூலம் பஞ்சுப்பாயிலிருந்து பஞ்சு இழைகளாகப் பிரிக்கப்பட்டு முன் பகுதியில் வெளியேறுகிறது. வெளியேறும் இந்த இழைகளை உருளை வடிவிலான பிளாஷ்டிக் கேனில் குறிப்பிட்ட அளவில் சுற்றப்படுகிறது.
இழைநார் கீறல் பகுதி
[தொகு]இழைநார் இணைப்பு இயந்திரத்தின் மூலம் பிரித்து எடுக்கப்பட்ட இழையினை இழைநார் கீறல் இயந்திரம் மூலம் மேலும் பிரித்துத் தேவையான அளவுகளில் பிளாஷ்டிக் கேனில் குறிப்பிட்ட அளவில் சுற்றப்படுகிறது.
இரட்டை நெசவு பகுதி
[தொகு]இழைநார் கீறல் இயந்திரத்தின் மூலம் பிரித்து எடுக்கப்பட்ட இழையிலிருந்து இரட்டை நெசவு இயந்திரத்தில் தடிமனான நூலாகப் பிரித்து அதற்கான நூற்புக்கதிரில் சுற்றப்படுகிறது.
நூற்றல் பகுதி
[தொகு]இரட்டை நெசவு இயந்திரத்தின் மூலம் நூற்புக்கதிரில் சுற்றப்பட்ட தடிமனான நூல் நூற்றல் இயந்திரத்தின் மூலம் சிறிய அளவிலான நூலாகப் பிரிக்கப்பட்டு இங்குள்ள நூற்புக் கதிரில் சுற்றப்படுகிறது.
நூல் இரட்டிப்புப் பகுதி
[தொகு]நூற்றல் இயந்திரத்தின் மூலம் பிரித்தெடுக்கப்பட்ட சிறிய அளவிலான நூல் தேவைக்கேற்ப நூல் இரட்டிப்பு இயந்திரம் மூலம் இரட்டிப்பு நூலாக மாற்றம் செய்யப்படுகிறது.
நூல் சுற்றுப் பகுதி
[தொகு]நூற்றல் இயந்திரத்தின் மூலம் பிரித்தெடுக்கப்பட்ட சிறிய அளவிலான நூல் பின்னர் நூல் சுற்று இயந்திரத்தின் மூலம் நூல் சுற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட அட்டை அல்லது நெகிழியில் செய்யப்பட்ட கூம்பு வடிவப் பொருளில் குறிப்பிட்ட எடையில் சுற்றப்படுகிறது.
சிப்பமிடும் பகுதி
[தொகு]உற்பத்தி செய்யப்பட்ட நூல் குறிப்பிட்ட எடை அளவில் சிப்பங்களாகக் கட்டப்படும் பணிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.