நிலப் பயன்பாடு

நிலப் பயன்பாடு (Land use) என்பது, நிலங்களை மனிதப் பயன்பாடுகளுக்கு உட்படுத்துவதைக் குறிக்கும். இயற்கைச் சூழல்களையும், காட்டுப் பகுதிகளையும் வயல்கள், புல்வெளிகள், குடியிருப்புக்கள் போன்றவையாக மாற்றுவதற்கான மேலாண்மை, திருத்தம் ஆகியவற்றை நிலப்பயன்பாடு உட்படுத்துகிறது. "குறிப்பிட்ட நிலப்பகுதியொன்றில், உற்பத்தி செய்தல், மாற்றுதல், பேணுதல் போன்றவற்றுக்காக மனிதர் முன்னெடுக்கும் ஒழுங்குகள், நடவடிக்கைகள், உள்ளீடுகள்" என்பதே நிலப்பயன்பாடு என வரைவிலக்கணம் கூறப்படுகிறது.[1][2][3]
நிலப் பயன்பாடும் ஒழுங்கு விதிகளும்
[தொகு]நிலப் பயன்பாட்டு நடவடிக்கைகள் உலகின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக உள்ளன. நிலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கப்பெறும் உற்பத்திப் பொருட்கள், பயன்கள் என்பவை குறித்தும், இவ்வாறான உற்பத்திப் பொருட்களையும், பயன்களையும் உருவாக்குவதற்கு மனிதரால் எடுக்கப்படும் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்தும் நிலப் பயன்பாடு என்னும் விடயம் அக்கறை காட்டுகிறது. 1990 ஆம் ஆண்டின் நிலைவரப்படி உலகில் 13% நிலப்பகுதி வேளாண்மைக்கு உகந்ததாக உள்ளது. இவற்றுடன் 26% புல்வெளிகளாகவும், 32% காடுகளாகவும், 1.5% நகர்ப்புறப் பகுதிகளாகவும் உள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன் ஆல்பர்ட் குட்டன்பர்க் கூறியபடி, நகரத் திட்டமிடலின் மொழியில் நிலப் பயன்பாடு என்பது முக்கியமானதொரு சொல் ஆகும். பொதுவாக, நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் அரசியல் அதிகார நிறுவனங்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. நிலப் பயன்பாட்டு முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக நிலப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதும் இத் திட்டமிடலின் நோக்கமாகும். நிலப் பயன்பாட்டுத் திட்டங்கள் நில ஒதுக்கீடுகளூடாகவும், அரசாணைகள், ஒழுங்குவிதிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது மூலமும் நிறைவேற்றப் பெறுகின்றன.
நிலப் பயன்பாடும் சூழலும்
[தொகு]நிலப் பயன்பாடும், நில மேலாண்மைச் செயற்பாடுகளும் நீர், நிலம், ஊட்டப் பொருட்கள், தாவரங்கள், விலங்குகள் போன்ற இயற்கை வளங்கள் மீது பெரும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. நிலப் பயன்பாட்டுத் தகவல்களை, உவர்த்தன்மை, நீரின் தரம் என்பவை தொடர்பான இயற்கை வள மேலாண்மைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, காடழிப்பு அல்லது மண்ணரிப்பு ஏற்பட்ட இடங்களில் உள்ள நீர்நிலைகளில் காணப்படும் நீரின் தரம், காடுகள் உள்ள பகுதியின் நீர்நிலைகளில் உள்ள நீரின் தரத்திலும் வேறுபட்டிருக்கும்.
1750 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிலப் பயன்பாட்டினால் புவி மேற்பரப்பில் ஏற்பட்ட முக்கியமான தாக்கம் மிதவெப்பப் பகுதிகளில் நிகழ்ந்த காடழிப்பு எனலாம். அண்மைக் காலத்தில் நிலப்பயன்பாட்டினால் ஏற்பட்ட குறிப்பிடத் தக்க தாக்கங்களாக, நகர விரிவாக்கம், மண்ணரிப்பு, மண் தரமிழத்தல், நீர் உவராதல், பாலைவனமாதல் என்பவற்றைக் குறிப்பிடலாம். பெட்ரோலிய எரிபொருட்களின் பயன்பாடும், நிலப் பயன்பாட்டு மாற்றங்களுமே மிகமுக்கிய பசுங்குடில் வளிமமான காபனீரொட்சைட்டின் முக்கியமான மனிதவழி மூலங்கள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ellis, Erle; Goldewijk, Kees Klein; Gaillard, Marie-José; Kaplan, Jed O.; Thornton, Alexa; Powell, Jeremy; Garcia, Santiago Munevar; Beaudoin, Ella et al. (2019-08-30). "Archaeological assessment reveals Earth's early transformation through land use" (in en). Science 365 (6456): 897–902. doi:10.1126/science.aax1192. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:31467217. Bibcode: 2019Sci...365..897S.
- ↑ Ellis, Erle C.; Gauthier, Nicolas; Goldewijk, Kees Klein; Bird, Rebecca Bliege; Boivin, Nicole; Díaz, Sandra; Fuller, Dorian Q.; Gill, Jacquelyn L. et al. (2021-04-27). "People have shaped most of terrestrial nature for at least 12,000 years" (in en). Proceedings of the National Academy of Sciences 118 (17): e2023483118. doi:10.1073/pnas.2023483118. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:33875599. Bibcode: 2021PNAS..11823483E.
- ↑ Meyfroidt, P.; Roy Chowdhury, R.; de Bremond, A.; Ellis, E. C.; Erb, K. -H.; Filatova, T.; Garrett, R. D.; Grove, J. M. et al. (2018-11-01). "Middle-range theories of land system change" (in en). Global Environmental Change 53: 52–67. doi:10.1016/j.gloenvcha.2018.08.006. பன்னாட்டுத் தர தொடர் எண்:0959-3780. https://research.utwente.nl/files/59268660/middle_range.pdf.