உள்ளடக்கத்துக்குச் செல்

நிறமற்ற வானவில் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிறமற்ற வானவில்
நூலாசிரியர்சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைபுதினம்
வெளியீட்டாளர்கிழக்குப் பதிப்பகம்
ISBN8184933762 (ISBN13: 9788184933765)[1]

நிறமற்ற வானவில்- தமிழ் எழுத்தாளரான சுஜாதாவால் எழுதப்பட்ட புதினமாகும்.[2] ஒரே நாளில் தனது குடும்பம் முழுவதையும் இழந்த ஒரு மனிதன் எவ்வாறு தொடர்ந்து தனது வாழ்வை முன்னெடுத்துச் செல்ல நம்பிக்கை பெறுகிறான் என்பதே இந்நாவலின் அடியோட்டமாகும்.

கதை

[தொகு]

கதையின் நாயகனான கிருஷ்ணமூர்த்தி அழகும் அன்பும் பாசமும் நிறைந்த மனைவி, ஒரே மகள் மற்றும் மாமா கோத்தாரி போன்றோருடன் வசித்து வருகிறான். கணிணி நிரல் எழுதுபவனான அவன் மிகுந்த புத்தி கூர்மை உடையவன். மணவாளன் என்ற கூட்டாளியுடன் கணினி சம்பந்தமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதுடன் கணிசமான சம்பளமும் பெறுகிறான்.அவனுக்கு குணவதி என்ற புத்திசாலித்தனம் நிறைந்த ஒரு உதவியாளரும் உண்டு.

தங்களது 3 வயது பெண் குழந்தையான ஆண்டாள் ரோஜா கிருஷ்ணமூர்த்தியை ஆரம்பப் பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக கணவனும் மனைவியும் சேர்ந்து ஆலோசிப்பதாக தொடங்கும் கதை அவரது மாமா கோத்தாரி அவர்களுக்கு உதவியுடன் சென்னையில் உள்ள தலைசிறந்தப்பள்ளியில் ஆரம்ப பள்ளிக்கான சேர்க்கைக்கான நேர்முகத் தேர்விற்கு மகளை தயார்படுத்துகின்றனர் ஆனால் அவர்கள் மூவரும் கவலைப்பட்டதற்கு மாறாக அவனது மகள் தனது புத்திசாலித்தனமான பேச்சால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியையை கவர்ந்து அப்பள்ளியில் சேர்க்கையை உறுதி செய்கிறாள்.

மூர்த்தி மற்றும் அவரது கூட்டாளியான மணவாளன் இருவரும் இணைந்து ஒரு மிகப் பெரிய வியாபார ஒப்பந்தத்தை முடிக்கின்றனர். ஒரு வாரத்திற்குள் அமெரிக்க ஐக்கிய தேசத்திற்கு தேசத்திற்கு சென்று சில நடைமுறைகளை செய்யவேண்டியிருப்பதால் மணவாளன் மூர்த்தியையும் அழைக்கிறார். ஆனால் தனது உறவினரின் திருமணத்திற்கு குடும்பத்துடன் செல்லவிருப்பதால் மூர்த்தி யோசிக்கிறான்.ஆனால் மணவாளனின் தொடர்ந்த வற்புறுத்தல் காரணமாக இறுதியில் செல்ல சம்மதிக்கிறான். கூட்டாளிகள் இருவருமாக சேர்ந்து திருமணம் முடிந்த கையோடு விமானத்தில் புறப்படுகின்றனர். விமானத்தில் ஏறிய பின்பு தெரிகிறது மணவாளன் ஹாங்காங் நகரத்தில் ஒரு நாள் இரவு தங்குவதற்காக திட்டம் போட்டிருப்பது இதனால் கோபப்படும் மூர்த்தி மணவாளனை திட்டுகிறான் அவனை சமாதானப்படுத்த மணவாளன் ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துகிறார். ஆனால் அவளுடன் இரவை கழிக்க மறுத்த மூர்த்தி அந்நகரத்தை சுற்றி வருகிறான். அதிகாலையில் அவனை எழுப்பும் மணவாளன் அவனது குடும்பத்தார் ஒரு சிறு விபத்தில் சிக்கி இருப்பதாக தகவல் தெரிவித்து சென்னைக்கு விமானத்தில் அனுப்புகிறான். குழப்பத்துடன் ஊருக்கு வந்த மூர்த்திக்கு அவரது அருமை மனைவியும் மகளும் அவரது மாமனும் காஞ்சிபுரத்திலிருந்து திருமணத்தை முடித்துவிட்டு சென்னைக்கு வரும் வழியில் ஒரு விபத்து ஒன்றில் சிக்கி மரணமடைந்த தகவல் தெரியவருகிறது. மிகுந்த அதிர்ச்சி அடையும் மூர்த்தி நடந்த சம்பவத்திற்கு எல்லாம் தானே காரணம் என்று கருதி சுய பச்சாதாபம் மற்றும் கோபம் கொள்கிறான். தனது மனைவி மகளுடன் சேரும் பொருட்டு தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான். அதன்படியே தனது வாகனத்தை மிகவும் வேகமாகச் செலுத்தி விபத்துக்குள்ளாகிறான். ஆனால் சில காயங்களுடன் உயிர் தப்பி விடுகிறான்.

சில நாட்கள் சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூர்த்தி மருத்துவர்களின் கண்காணிப்பில் நலம் பெறுகிறான்.அவனைப் போன்றே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர் பிழைத்த சுப்ரியா என்ற ஒரு பெண்ணை பற்றி அங்குள்ள மருத்துவர்கள் கூறுகின்றனர்.இருவருமே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர் பிழைத்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மணவாளனும் அவ்வப்போது மருத்துவமனைக்கு வந்து மூர்த்தியை வந்து பார்த்து செல்கிறான். சில நாட்களில் காயங்கள் ஆறி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்பி தனது வேலைக்கும் செல்ல ஆரம்பிக்கின்றான். தற்கொலை எண்ணம் இருந்தாலும் தன்னால் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ள இயலாது அதற்கான தைரியம் இல்லை என்பதை உணர்கிறான்.

காஞ்சிபுரத்திற்கு மறுபடியும் சென்று தனது குடும்பத்தார் கடைசியாக பங்குபெற்ற திருமண நிகழ்வின் கானொளி பதிவுகளை பெற்று அதில் தனது மனைவியும் மகளும் இருக்கும் காட்சிகளை மட்டும் வெட்டி எடுத்து தனியாக ஒரு காணொளி காட்சியைத் தயாரித்து அதனை பார்த்து மகிழ்கிறான். அங்கிருந்து மெட்ராஸ் நகரத்திற்கு வரும் வழியில் தற்செயலாக மருத்துவமனையில் தனக்குச் சொல்லப்பட்ட சுப்ரியா என்ற பெண்ணை சந்திக்கிறான். தனது வாகனத்தில் அவளுக்கு இடம் தருவதுடன் அவரது வீட்டிலும் சென்றுவிட ஓட்டுநருக்கு உத்தரவிடுகிறான் திருமணம் முடிந்த 18 நாளில் தனது கணவர் விபத்தில் இறந்த காரணத்தினால் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்ததாக அந்தப்பெண் கூறியதை கேட்கும் மூர்த்தி அவளின் சோகத்தை புரிந்து கொள்கிறான். தனது மனைவி மகள் இருக்கும் காணொளி பதிவுகளை பார்க்கும் மூர்த்திக்கு சுப்ரியாவின் நினைவு வருகிறது. தனது அலுவலக வாகன ஓட்டுனரின் மூலம் சுப்ரியாவின் வீட்டு முகவரியை அறியும் மூர்த்தி அங்கு செல்கிறான் அவனை வரவேற்கும் சுப்ரியா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாள். இருவருமாக இணைந்து வெளியில் சென்று தங்கள் உணவை முடித்து வருகின்றனர். அப்படியே பேசும்போது சுப்ரியா மூர்த்தியை தன்னுடன் தனது வீட்டில் இருக்குமாறு அழைக்கிறாள். அதனை ஏற்கும் மூர்த்தி இருவரும் ஒரே வீட்டில் வசிப்பது என்று முடிவு செய்கிறான். இரவு உணவிற்கு பின்பு தங்களது படுக்கைக்கு செல்லும் இருவரும் பல்வேறு நினைவுகளின் காரணமாக அன்றைய இரவில் உறவில் ஈடுபடுகிறார்கள். அதிகாலையில் எழும் மூர்த்தி தனது மனதின் வெறுமை மாறிவிட்டது என்பதை உணர்கிறான். இருவரும் இந்த உறவை தொடர்கின்றனர். சிறிது காலத்திற்குப் பின்பு திருமணம் செய்யவும் முடிவு எடுக்கின்றனர்

எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் கைகளால் எழுதப்பட்ட கடிதங்கள் தொடர்ச்சியாக மூர்த்திக்கு வருகின்றது. அதில் முக்கியமாக சுப்ரியாவை நம்பவேண்டாம் என்பதாக எழுதப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் அதை அலட்சியப்படுத்தும் மூர்த்தி தனது நண்பன் ஒருவன் உதவியால் அக்கடிதங்கள் தனது உதவியாளரான குணவதி தான் கடிதம் எழுதுவதைக் கண்டறிகிறான் அவளை வேலையை விட்டு விடச் சொல்லும் மூர்த்தி சிறிது நாட்களுக்கு பின்பு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை உண்மை என உணர்கிறான். சுப்ரியாவின் வீட்டுக்கு செல்லும் மூர்த்தி, அவள் தனது கூட்டாளியான மணவாளனால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண் எனவும் தனது மன வேதனைகளுக்கு வடிகாலாகவும் தனது வேலையை மீண்டும் சரிவர செய்யவும் இத்தகைய ஏற்பாடு செய்திருப்பதை அறிகிறான். மணவாளன் மீதும் சுப்ரியா மீதும் கோபம் அடையும் மூர்த்தி சுப்ரியாவுடன் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்துகிறான். சுப்ரியா தான் திருமணம் ஆகாதவர் என்றும் தான் மூர்த்தியை நேசித்தது நிஜம் என்றும் எவ்வளவு கேட்டுக் கொண்டாலும் அதை கருத்தில் கொள்ளாத மூர்த்தி தனது மனைவி மற்றும் மகனுடன் இணைவதற்காக மறுபடியும் தற்கொலை செய்து கொள்ள ரயில் தண்டவாளத்தை நோக்கி செல்கின்றான்.

இந்தமுறை உறுதியாகத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்து கொண்டிருக்கும் ரயிலை நோக்கி தண்டவாளத்தில் நடந்து செல்லும் அவனை அவளது மகளின் வயதை ஒட்டிய ஒரு சிறு பிள்ளையின் அழுகுரல் தடுத்து நிறுத்துகிறது. அந்தப் பெண் குழந்தையை காவலர்களிடம் அழைத்துச்சென்று விசாரிக்கும்போது அந்த குழந்தையின் தகப்பன் ஒரு திருடன் என்றும் அந்த குழந்தையை விட்டுவிட்டு ஓடிவிட்டார் என்பதும் தெரியவருகிறது. அந்த குழந்தையை பார்த்துக் கொள்ள யாருமில்லை என்பதை அறியும் மூர்த்தி அவளை தன்னுடன் அழைத்துச் செல்கிறான் அந்த குழந்தையை குளிப்பாட்டி சுத்தமான உடை அணிவித்த பின்பு அவனது குழந்தையைப் போலவே இருப்பதை குறிப்பிடும் வகையில் அவனது அத்தையிடம் அவன் அந்த குழந்தையை தத்து எடுப்பதாகவும் அவள் ஆண்டாள் ரோஜா கிருஷ்ணமூர்த்தி எனவும் கூறுகின்றான் இவ்வாறாக அவன் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் கதை முடிவடைகிறது.

மேற்கோள்கள்

[தொகு]