நாட்டை
நாட்டை ராகத்தில் உள்ள ஸ்வரங்கள் ஷட்ஜம், ஷட்ஸ்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம், ஷுத்த மத்யமம், ஷட்ஸ்ருதி தைவதம், காக்கலி நிஷாதம் ஆகும். இதன் ஆரோஹண-அவரோஹணம் :
- ஆரோஹணம் : ஸ ரி3 க3 ம1 ப த3 நி3 ஸ்
- அவரோஹணம் : ஸ் நி3 ப ம1 ரி3 ஸ
இது 36வது மேளகர்த்தாவான சலநாட்டையின் ஜன்ய ராகம் ஆகும். ஸம்பூர்ண ராகமான சலநாட்டையும் ஒளடவ ராகமான கம்பீரநாட்டையும் சேர்ந்த கலவையே ஆகும்.கச்சேரியின் தொடக்கத்தில் பாடக்கூடிய மங்களகரமான ராகம் இது. இது ஒரு விவாதி ராகம் ஆகும்.
நமது இசையில் பல நாட்டை ராகங்கள் காணப்படுகின்றன. அவற்றில் நாட்டை, சலநாட்ட, சுத்த நாட்ட, சாயா நாட்ட, மோகன நாட்ட, ஆஹிரி நாட்ட முதலியவற்றை கூறலாம். முதன்முதலாக தோன்றியிருக்கக் கூடிய ஔடவ ராகம் இதுவாகும் . இதுவே கம்பீர நாட்டையாகவும் , பண்டைய தமிழிசைப் பண்ணில் நட்ட பாடை[1] என்ற பண்ணாகவும் பொலிவுற்று விளங்கியுள்ளது.
தோற்றம்
[தொகு]கி.பி 16ம் நூற்றாண்டு முதலே அதாவது ராமமாத்யர் காலம் முதற்கொண்டே சாதாரண காந்தாரமே சில இராகங்களில் ஷட்சுருதி ரிஷபமாகவும், கைசிகி நிஷாதமே ஷட்சுருதி தைவதமாகவும் விளங்கின. இப்படியாக ஷட்சுருதி ரிஷப ஷட்சுருதி தைவதங்களுடன் நாட்டை இராகம் தோற்றம் அளித்தது. அதுவே சுத்த நாட்ட என்றும் சுத்த நாட்டி என்றும் அறியப்பட்டன.
ராமமாத்யர் சுத்த நாட்ட என்கிறார் . துளஜா மகாராஜா தன்னுடைய 'சங்கீத சாராம்ருதத்தில்' சுத்த நாட்டி என்கிறார். நாட்ட என்ற இராகப் பெயர் இசை வரலாற்றின் இடைக்காலம் முதற்கொண்டே வழக்கத்தில் இருந்திருக்கின்றது. இராகங்களை ஜனக, ஜன்னிய பாகுபாட்டிற்கு உட்படுத்திய காலம் முதல் நாட்டராகம் ஜனக ராக ஸ்தானத்தை வகித்தது. பிற்பாடு மேளமாகவும் கருதப்படலாயிற்று. கி. பி. 16ம் நூற்றாண்டுகளில் தோன்றிய தாள்ளப்பாக்க அண்ணமாச்சாரியாருடைய சங்கீர்த்தனங்களுக்கு கொடுக்கப்பட்ட இராகங்களில் நாட்டை இராகம் வெகுவாகக் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அ. கி. மூர்த்தி (1998). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 161.