உள்ளடக்கத்துக்குச் செல்

நாஞ்சில் வள்ளுவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாஞ்சில் வள்ளுவன் சங்ககாலத்து வள்ளல்களில் ஒருவர் ஆவார். இவர் சிறந்த போர்வீராகவும் விளங்கினார். இவரை ஒருசிறைப் பெரியனார், ஔவையார், கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார், மருதன் இளநாகனார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர்.

இவரை வல்வேல் கந்தன் என்று ஒரு புலவர் குறிப்பிடுகிறார்.

  • நாஞ்சில் நாடு ஆற்று வளத்தால் கரும்பு விளையும் நிலம். இவரைப் பாடும் புலவர் ஒருசிறைப் பெரியனார் தாம் வேந்தர்களை அறிந்ததில்லை எனவும், இவர் மட்டுமே அறிமுகமானவர் என்றும் குறிப்பிட்டுப் பரிசில் வேண்டுகிறார்.[1]
  • ஔவையார் தன்னிடமிருந்த அடகுக் கீரையோடு சேர்த்துச் சமைத்து உண்பதற்காக நாஞ்சில் வள்ளுவனிடம் கொஞ்சம் அரிசி கேட்டார். அவரோ யானை ஒன்றைப் பரிசாக வழங்கினார். இதனைத் தேற்றா ஈகை (தெளிவில்லாத கொடை) என ஔவை குறிப்பிடுகிறார்.[2]
  • தென்கடல் முத்தும், வடகுன்றத்துச் சந்தனமும் இவர் அணிகலன். தென்னவன் வயமறவன் என இவர் போற்றப்படுகிறார். இதனால் இவர் பாண்டியனின் படைத்தலைவர் எனத் தெரிகிறது. பாடலில் இவர் பெயர் வல்வேல் கந்தன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் புலவர்களின் வறுமையைப் போக்குபவர்.[3]
  • கிளி ஓட்டும் புனத்தில் விளைந்திருக்கும் கதிர் போல் எல்லாருக்கும் உதவுபவர் என்றும் [4], வேந்தருக்காகப் போரிடுபவர் என்றும் [5] புலவர் மருதன் இளநாகனார் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. புறம் 137
  2. புறம் 200
  3. புலவர் கருவூர்க் கதப்பிள்ளை - புறம் 380
  4. புறம் 138
  5. புறம் 139
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாஞ்சில்_வள்ளுவன்&oldid=4483897" இலிருந்து மீள்விக்கப்பட்டது