த கெட் இன் த ஹாட் (சிறுவர் கதைப் புத்தகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

த கெட் இன் த ஹாட்  என்பது சிறுவர் கதைப் புத்தகம் ஆகும்.  1957 ஆம் ஆண்டு டாக்டர் சியூஸ் என்ற புனைப்பெயரில்  தியோடர் கீசல் எழுத்தில் வெளியிடப்பட்டது. மனித நடத்தையுடைய, சிவப்பும், வெள்ளையும் கலந்த தொப்பியும், சிவப்பு நிற கழுத்துப்பட்டி அணி முடிச்சும் அணிந்துள்ள பூனையை மையமாக வைத்து இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. மழை நாள் ஒன்றில் வீட்டில் தனிமைபட்டிருக்கும் இரு சிறுவர்களின் வீட்டில் நுழையும் பூனையானது தனது தந்திரங்களால் அச் சிறுவர்களை மகிழ்விக்கின்றது. பொருள் 1, பொருள் 2 எனும் பூனையின் சகாக்களுடன் இணைந்து வீட்டை அலங்கோலப்படுத்துகிறது. சிறுவர்களின் தாய் வீட்டிற்கு வரும் முன் வீட்டை சுத்தப்படுத்திவிட்டு மறைந்து போகிறது.

த கெட் இன் த ஹாட்
நூலாசிரியர்டாக்டர் சியூஸ்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
வகைசிறுவர் இலக்கியம்
வெளியீட்டாளர்ரேண்டம் ஹவுஸ், ஹவ்டன் மிப்ளின்
வெளியிடப்பட்ட நாள்
மார்ச் 12, 1957
பக்கங்கள்61
ISBN978-0-7172-6059-1
OCLC304833
முன்னைய நூல்இவ் ஐ ரேன் த சர்கஸ்
அடுத்த நூல்ஹவ் த கிரின்ச் ஸ்டோல் கிறிஸ்மஸ்
கெட் இன் த ஹாட் கம்ஸ் பெக்

குழந்தை பருவத்தில் கல்வியறிவு மற்றும் பாரம்பரிய தொடக்கக் கல்வி புத்தகங்களின் பயனற்ற தன்மை குறித்து அமெரிக்காவில் நடந்த விவாதத்திற்கு பதிலளிக்கும் விதமாக கீசல் இந்த புத்தகத்தை எழுதினார்.

இரண்டாம் உலகப் போரின் போது கீசலை சந்தித்த ஹவ்க்டன் மிஃப்ளினில் கல்விப் பிரிவின் இயக்குநராக இருந்த வில்லியம் ஸ்பால்டிங் என்பவர் கீசலிடம் சுவாரஸ்யமான ஒரு தொடக்கக் கல்வி புத்தகமொன்றை  எழுதும்படி கேட்டார். கீசெல் ஏற்கனவே ரேண்டம் ஹவுஸுடன் ஒப்பந்தத்தில் இருந்ததால், இரு வெளியீட்டாளர்களிடமும் ஒப்பந்தத்தை மேற்கொண்டார். ஹவ்க்டன் மிஃப்ளினினால் கல்வி பதிப்பு வெளியிடப்பட்டு பள்ளிகளுக்கு விற்கப்பட்டது.  ரேண்டம் ஹவுஸினால் வர்த்தக பதிப்பு வெளியிடப்பட்டு புத்தகக் கடைகளில் விற்கப்பட்டது.

கீசல் கதையை எழுதுவதற்கான இயைபொலியாய் அமைகின்ற இரு சொற்களான கெட் மற்றும் ஹெட் ஆகிய இரு சொற்களை தெரிவு செய்தார். புத்தகம் உடனடியாக விமர்சன ரீதியாகவும்,  வணிக ரீதியாகவும் வெற்றியை சந்தித்தது. புத்தகம் வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகளில்  ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டன.

2001 ஆம் ஆண்டில் பப்ளிஷர்ஸ் வீக்லி சஞ்சிகை இந்த புத்தகத்தை எல்லா நேரத்திலும் அதிகம் விற்பனையாகும் குழந்தைகள் புத்தகங்களின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் பட்டியலிட்டுள்ளது.  1971 ஆம் ஆண்டு உயிரூட்டப்பட்ட கதாபாத்திரங்களுடன் தொலைக்காட்சியில் ஒளிப் பரப்பபட்டது. மேலும் 2003 ஆம் ஆண்டில் திரைப்படமாகவும் வெளிவந்தது.

கதைச்சுருக்கம்[தொகு]

சாலி என்ற சிறுமியும், அவளது சகோதரனும் குளிர்ந்த, மழை நாளில் தங்கள் வீட்டில் தனியாக உட்கார்ந்து சன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். திடீரென்று அவர்கள் குதிக்கும் சத்தத்தை  கேட்கிறார்கள். அதைத் தொடர்ந்து சிவப்பும் வெள்ளையிம் கோடுகளை கொண்ட தொப்பியும், சிவப்பு நிற கழுத்துப்பட்டி அணி முடிச்சும் அணிந்த உயரமான மானுட பூனையொன்று வருகிறது. தனக்குத் தெரிந்த சில தந்திரங்களைக் கொண்டு குழந்தைகளை மகிழ்விக்க பூனை போவதாக கூறுகிறது. குழந்தைகளின் செல்லப் பிராணியான மீன், பூனையை  வெளியேறுமாறு வலியுறுத்துகிறது.

பூனை தனது குடையின் நுனியில் மீனை சமநிலைப்படுத்துகிறது. அத்தோடு நிறுத்தாமல் பந்தொன்றில் ஏறி தன்னை சமன் வீட்டில் உள்ள பல பொருட்களை தனது உறுப்புக்களினால் சமனிலைப்படுத்த முயற்சி செய்து தரையில் சிதறவிடுகிறது. மீன் மீண்டும் பூனையை வெளியேறுமாறு அறிவுறுத்துகின்றது. பூனை புதிய விளையாட்டொன்றை முன்மொழிகின்றது.

பூனை வெளியில் இருந்து சிவப்பு நிற பெரிய பெட்டியை எடுத்து வருகின்றது. அந்த பெட்டியில் இருந்து ஒரே மாதிரியான இரு கதாபாத்திரங்கள் வெளிவருகின்றனர். நீல நிற தலை முடியுடன், சிவப்பு நிற ஆடை அணிந்திருக்கின்றனர். அவர்கள் பொருள் ஒன்று, பொருள் இரண்டு என்று பெயரிடப்பட்டுள்ளனர். பொருட்கள் இருவரும் வீட்டினுள் பட்டம் பறக்க விடுதல், சுவரில் உள்ள படங்களை தட்டிவிடுதல், சிறுவர்களின் தாயின் புள்ளியிடப்பட்ட ஆடையை எடுத்தல் போன்ற குழப்பங்களை உண்டு பண்ணுகின்றனர். மீன் சிறுவர்களின் தாய் வீட்டிற்கு வருவதை சன்னல் வழியாக காண்கின்றது. இவை அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வருவதற்காக சாலியின் சகோதரன் பொருள் ஒன்றையும், பொருள் இரண்டையும் வலையில் பிடிக்கின்றார்.  பூனை பொருட்கள் இரண்டையும் மீண்டும் சிவப்பு நிற பெட்டியில் பத்திரப்படுத்தி எடுத்துச் செல்கின்றது. பூனையின் செயல்களால் சிறுவர்களும், மீனும் குழப்பமடைந்து காணப்படுகின்றனர். பூனை மீண்டும் வீட்டிற்குள் இயந்திரமொன்றை எடுத்து வருகின்றது. இயந்திரத்தால் விரைவாக வீட்டை சுத்தப்படுத்தி விட்டு சிறுவர்களின் தாய் வருவதற்குள் சென்று விடுகிறது. சிறுவர்களும், மீனும் கதை தொடங்கும் போது இருந்த இடத்திற்கு திரும்புகின்றனர். வீட்டினுள் காலடி எடுத்து வைக்கும் தாய்  வெளியே இருக்கும் போது என்ன செய்தீர்கள் என்று சிறுவர்களிடம் வினவுகிறாள். அவர்கள் பதில் சொல்ல தயங்குகிறார்கள். "உங்கள் அம்மா உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?" என்ற கேள்வியுடன் கதை முடிகிறது.

வெளியீடு[தொகு]

ஹவ்க்டன் மிஃப்ளினின் வில்லியம் ஸ்பால்டிங்கின் வேண்டுகோளின் பேரில் த கேட் இன் த ஹாட் கதைப் புத்தகத்தை எழுத கீசல் ஒப்புக்கொண்டார். இருப்பினும், கீசெல் ரேண்டம் ஹவுஸுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து  இருந்ததால், ரேண்டம் ஹவுஸின் தலைவர் பென்னடர் செர்ப், ஹவ்க்டன் மிஃப்ளினுடன் மற்றுமொரு ஒப்பந்தத்தை மேற்கொண்டு ரேண்டம் ஹவுஸ் வர்த்தக விற்பனையின் உரிமைகளை தக்க வைத்துக் கொண்டார். ஹவ்க்டன் மிஃப்ளின் கல்வி உரிமைகளை தக்க வைத்து கொண்டார். [1]

ஹவ்க்டன் மிஃப்ளின் கல்வி பதிப்பு 1957 ஆம் ஆண்டு சனவரி அல்லது பிப்ரவரி இல் வெளியிடப்பட்டது. ரேண்டம் ஹவுஸின் வர்த்தக பதிப்பு அதே ஆண்டில் மார்ச் 1 இல் வெளியிடப்பட்டது. [2]இரண்டு பதிப்புகளும் புத்தகத்தின் அட்டையினால் மட்டுமே வேறுபட்டிருந்தன.[2]

ஜூடித் மற்றும் நீல் மோர்கன் ஆகியோரின் கூற்றுக்களின் படி, புத்தகம் உடனடியாக அமோகமாக  விற்பனையானது. ஆரம்பத்தில் வர்த்தக பதிப்பு ஒரு மாதத்தில் சராசரியாக 12,000 பிரதிகள் விற்பனையானது. வேகமாக விற்பனையின் அளவு உயர்ந்தது.[3]

கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள புல்லக்கின் டிபார்ட்மென்ட் ஸ்டோர்சில் புத்தகத்தின் முதல் நூறு பிரதிகள் ஒரே நாளில் விற்கப்பட்டு, அதே நாளில் 250 பிரதிகள் விரைவாக மறுவரிசைப்படுத்தப்பட்டது.[3]

த கேட் இன் த ஹாட் புத்தகம் வெளியிடப்பட்டு மூன்று வருடத்தில், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பிரதிகள் விற்பனையானது. இந்த புத்தகம் பிரெஞ்சு, சீன, ஸ்வீடிஷ் மற்றும் பிரெய்லி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [3]2001 ஆம் ஆண்டில், பப்ளிசர்ஷ் வீக்லி சஞ்சிகையின் எல்லா காலத்திலும் அதிகம் விற்பனையாகும் சிறுவர் புத்தகங்களின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.[4]

2007 ஆம் ஆண்டின் கணிப்பின்படி, த கேட் இன் த ஹாட் புத்தகத்தின் பிரதிகள் 10 மில்லியனுக்கும் அதிகமான அச்சிடப்பட்டுள்ளன. மேலும் இப் புத்தகம் “கட்டஸ் பெட்டாசடஸ்” என்ற தலைப்பில் இலத்தீன் மொழியிலும், 12 இற்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளிளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[5][6]

2007 ஆம் ஆண்டில், த கேட் இன் த ஹாட் புத்தகத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ரேண்டம் ஹவுஸ் தி அனோடேட்டட் கேட்: அண்டர் தி ஹேட்ஸ் ஆஃப் சியூஸ் அன்ட  ஹிஸ் கேட்ஸ் ஆகிய புத்தகத்தை வெளியிட்டது. இந்த புத்தகம் தி கேட் இன் த ஹாட் மற்றும் அதன் தொடர்ச்சியை உள்ளடக்கியது. [2]

2007 ஆம் ஆண்டின் கருத்துக் கணிப்பின் அடிப்படையில், தேசிய கல்விச் சங்கம் அதன் "சிறுவர்களுக்கான ஆசிரியர்களின் சிறந்த 100 புத்தகங்களில்" ஒன்றாக இந்த புத்தகத்தை பெயரிட்டது.[7] 2012 ஆம் ஆண்டில் பள்ளி நூலக இதழ் வெளியிட்ட ஒரு கணக்கெடுப்பில் "சிறந்த 100 பட புத்தகங்களில்" 36 வது இடத்தைப் பிடித்தது - பட்டியலில் உள்ள ஐந்து டாக்டர் சியூஸின் புத்தகங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்டது.[8] 2004 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இந்த புத்தகத்திற்கு பில்பி விருது வழங்கப்பட்டது.[9]

தழுவல்கள்[தொகு]

த கேட் இன் த ஹாட் புத்தகத்தின் கதையை தழுவி தொலைக்காட்சி கார்டூன்கள் மற்றும் திரைப்படங்கள் வெளியிடப்பட்டன.

1971 ஆம் ஆண்டு அனிமேஷன் மியூசிக் டிவி ஸ்பெஷல் இந்த கதை உயிரூட்டப்பட்ட கதாபாத்திரங்களுடன் திரையிடப்பட்டது. இதில் ஆலன் ஷெர்மன் பூனையாக நடித்தார்.

2003 ஆம் ஆண்டில் லைவ்-ஆக்சன் திரைப்படமாக வெளியிடப்பட்டது, இதில் மைக் மியர்ஸ் பூனையாக நடித்தார். 109 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டது. படம் உலகளவில் 3 133,960,541  டாலர்கள் வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ்.காம் தெரிவித்துள்ளது. [10]

1984 ஆம் ஆண்டில் இந்த புத்தகம் ரஷ்ய மொழியில் தி கேட் இன் த கேப் என்ற பெயரில் கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டு ஒன்பது நிமிட கார்ட்டூனாக வெளியிடப்பட்டது.

2009 ஆம் ஆண்டில் ராயல் நேஷனல் தியேட்டர் இந்த புத்தகத்தை தழுவி  கேட்டி மிட்செல் இயக்கத்தில் மேடை பதிப்பை உருவாக்கியது.[11]

மேற்கோள்கள்[தொகு]


 1. Morgan 1995, pp. 153-154
 2. 2.0 2.1 2.2 "Fifty Years of 'The Cat in the Hat'".
 3. 3.0 3.1 3.2 Morgan 1995, pp. 156–157
 4. Publishers Weekly. (17 திசம்பர் 2001). ""All-Time Bestselling Children's Books"". மூல முகவரியிலிருந்து திசம்பர் 25, 2005. அன்று பரணிடப்பட்டது.
 5. ""The Cat at 50: Still lots of good fun that is funny"". மூல முகவரியிலிருந்து 22 நவம்பர் 2013. அன்று பரணிடப்பட்டது.
 6. "Terence Tunberg . Cattus petasatus: The cat in the hat in Latin".
 7. National Education Association (2007) (ஆகத்து 19, 2012.). "Teachers' Top 100 Books for Children".
 8. ""Top 100 Picture Books Poll Results"".
 9. ""Previous Winners of the BILBY Awards: 2001 to date"". மூல முகவரியிலிருந்து 19 நவம்பர் 2015. அன்று பரணிடப்பட்டது.
 10. Boxoffice.com. (27 November 2013.). ""Dr. Seuss' The Cat in the Hat"". மூல முகவரியிலிருந்து 27 நவம்பர் 2013 அன்று பரணிடப்பட்டது.
 11. Spencer, Charles (17 திசம்பர் 2009). ""The Cat in the Hat at the National Theatre, review"".