தொண்டுர் விண்ணம்பாறைப் பாறை விஷ்ணு சிற்பமும் பல்லவர் கல்வெட்டும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொண்டூர் விண்ணம்பாறை விஷ்ணு சிற்பம்
தொண்டுர் விண்ணம்பாறைப் பாறை விஷ்ணு சிற்பமும் பல்லவர் கல்வெட்டும் is located in இந்தியா
தொண்டுர் விண்ணம்பாறைப் பாறை விஷ்ணு சிற்பமும் பல்லவர் கல்வெட்டும்
தமிழ்நாடு, இந்தியா
அமைவிடம்தொண்டூர், இந்தியா
ஆள்கூற்றுகள்12°21′04″N 79°28′44″E / 12.3511°N 79.4788°E / 12.3511; 79.4788

தொண்டூர் விண்ணம்பாறை விஷ்ணு சிற்பமும் பல்லவர் கல்வெட்டும் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், வல்லம் வட்டம், தொண்டூர் [1] கிராமத்தை ஒட்டி வயல்வெளியில் அமைந்துள்ள ஒற்றைக் கருங்கற் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர் கல்வெட்டு பல்லவ மன்னன் தந்திவர்மன் (கி.பி. 795 to 846) காலத்தைச் சேர்ந்தது.[2] திறந்த வெளியில் அமைந்துள்ள விஷ்ணு சிற்பம் கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.[3]இச்சிற்பத் தொகுதி இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையின் (Archaeological Survey of India (ASI) பராமரிப்பில் உள்ளது.[4]

பள்ளிகொண்ட விஷ்ணுவின் சிற்பம்[தொகு]

தோராயமாக 20 அடி நீளமும், 10 அடி உயரமும் உடைய நீள்சதுர வடிவப் பாறையில் இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.[2] விஷ்ணு வலமிருந்து இடமாக பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். இதுபோல காஞ்சிபுரம் 'சொன்னவண்ணம் செய்த பெருமாள்' கோயிலில் மட்டுமே பெருமாள் வலமிருந்து இடமாகப் பள்ளிகொண்டுள்ளார்.[5] சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில் 8-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.[6] இங்கு பெருமாள் இரண்டு கரங்களுடன் காட்சிதருகிறார். தலையில் கிரீடமகுடம், காதில் மகர குண்டலங்கள், கௌஸ்துபம் உள்ளிட்ட கழுத்தணிகள், தோள்வளைகள், கேயூரம், கைவளைகள், அரைப்பட்டிகை (உதரபந்தம்) ஆகிய அணிகலன்களை அணிந்துள்ளார். இடது தோளிலிருந்து கீழிறங்கும் முப்புரிநூல் வலது கைக்கடியில் உபவீதமாக காட்டப்பட்டுள்ளது. இடுப்பில் பட்டாடை அணிந்துள்ளார்.[7][8] பெருமாளின் தலைக்கு மேலே ஐந்துதலை நாகம் படமெடுத்து குடைபிடிக்கிறது. பெருமாள் அரிதுயிலில் ஆழ்ந்துள்ளார். [9] இங்குள்ள கல்வெட்டு விஷ்ணுவை 'கிடந்த பெருமாள்’ என்று குறிப்பிட்டுள்ளது.

கல்வெட்டு[தொகு]

பல்லவ மன்னன் விஜய தந்திவர்மனின் ஆறாம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு (S.I.I. vol. XIV, no. 42; A. R. No. 283 of 1916) விண்ணம்பாறை சிற்பத்தின் அருகே உள்ள எழுத்துப்பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது. விண்ணகோவரையார் என்னும் குறுநிலத்தலைவன் 16 கழஞ்சு பொன்னை அறக்கொடையாக அளித்துள்ளான். இதன் வாயிலாகக் கிடைக்கும் வட்டித் தொகையை பயன்படுத்தி எற்றுக் குன்றனார் பட்டாரி அம்மனுக்கு படையல் படைப்பதற்காக மேற்கொண்ட ஏற்பாட்டை இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது. படைத்த பின்னர் யாத்ரீகர்களுக்கு உணவாக வழங்கவேண்டும்.என்பது நிபந்தனை. சிங்கபுர நாடு, ஆறுவகூர் சபையோர் 16 கழஞ்சு பொன் கிடைத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். வாரியத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட அங்கத்தினர்கள் மூலம் நிவந்தம் முறையாக பரமரிக்கப்படுவதைக் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.[10][8]

பெருமாள் சிற்பத்திற்கு முன்னால் சிறிய தோரண சிற்பம் வில் அம்பு வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. இங்கு, பள்ளிகொண்ட பெருமாளுக்குத் நித்தமும் விளக்கெரிப்பதற்காக ஆடுகளைத் கொடையாக வழங்கிய செய்தியினை ஆதித்த கரிகாலனின் கல்வெட்டு பதிவு செய்துள்ளது.[3][8]

கால அளவீடு[தொகு]

பள்ளிகொண்ட விஷ்ணுவின் சிற்பம் பல்லவ மன்னன் தந்தி வர்மன் காலத்தைச் சேர்ந்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Thondur Onefivenine
  2. 2.0 2.1 2.2 தொண்டூர் குடைவரை தமிழிணையம் மின்னூலகம்
  3. 3.0 3.1 சேதி சொல்லும் சிற்பம்! விகடன் 02 Jun 2020
  4. Vinnamparai rock containing pallava inscriptions Thondur Villupuram List of Monuments and Sites: Gingee Sub-Circle Archaeological Survey of India, Chennai Circle.
  5. அருள்மிகு சொன்னவண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில் தினமலர் கோயில்கள்
  6. Yathothkari Perumal Temple Wikipedia
  7. 1200 years oldest vishnu | pallavas | thondur Mr.DK YouTube
  8. 8.0 8.1 8.2 தொண்டூர் பெருமாள் சிலை, Thondur Villupuram, perumal Kalai Pavan. Youtube
  9. Glimpses Of Indian Culture Architecture, Art And Religion. 138 Glimpses — Architecture, Art and Religion Soundararajan, KV. Archaeological Survey of India. Sundeep Prakashan, Delhi. 1981
  10. On a Boulder in a field near the ‘Vinnamparai-rock’. Tondur, Gingee Taluk, South Arcot District. SII No. 42. (A. R. No. 283 of 1916). South Indian Inscriptions Volume 12 Pallava Inscriptions Nos.26 to 50