உள்ளடக்கத்துக்குச் செல்

தேவிபாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவிபாரதி
பிறப்புந.ராஜசேகரன்[1]
(1957-12-30)30 திசம்பர் 1957
கஸ்பாபேட்டை, ஈரோடு, தமிழ்நாடு இந்தியா
பணிதமிழ் இலக்கிய எழுத்தாளர்
பெற்றோர்நல்லமுத்து
முத்தம்மாள்

தேவிபாரதி (devibharathi, பிறப்பு: டிசம்பர் 30, 1957) என்ற புனைபெயரில் எழுதி வரும் ராஜசேகரன் தமிழகத்தைச் சேர்ந்த புதின, சிறுகதை எழுத்தாளர் ஆவார். இடதுசாரி பார்வையில் எழுதத்தொடங்கிய இவர், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள கொமரப்பா செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவரது குடும்பத்தோடு அதே ஊரில்தான் வசித்து வந்த நிலையில், 1975இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனம் பற்றி அப்போது பார்த்த, அனுபவித்த விஷயங்களைப் பற்றிய கட்டுரையில் தனது எழுத்துப்பணியை தொடங்கியுள்ளார். உளவியல் பின்னணியில், சமூக தொடர்புகளை பற்றி எழுதி வரும் இவர் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறார் மேலும் ஆங்கிலம், மலையாளம், இந்தி உட்பட இன்னும் சில இந்திய மொழிகளில் இவருடைய ஆக்கங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

பிறப்பு மற்றும் குடும்பம்

[தொகு]

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் புதுவெங்கரையாம்பாளையம் என்பதை சொந்த ஊராகக் கொண்டுள்ள நல்லமுத்து மற்றும் முத்தம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாக ராஜசேகரன் என்ற இயற்பெயரில் பிறந்தார். 1937 முதல் 1947 வரை இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த இவரின் தந்தை, 1948 முதல் ஆசிரியராக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் பணியாற்றியுள்ளார். இத்தம்பதியருக்கு இவருக்கு பின்பதாக மேலும் நான்கு பிள்ளைகளும் உண்டு.

இதயக்கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த இவரின் தந்தை ஆசிரியப்பணியில் இருக்கும் போதே 1983 மார்ச் 18 ஆம் தேதி இறந்த காரணத்தினால், கருணை அடிப்படையில் இவரின் தந்தை இறந்த இரு ஆண்டுகளுக்கு பின்பு, 1986ஆம் வருடம் 16ஆம் தேதி மொடக்குறிச்சி ஒன்றியம் மின்னப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராகப் தமிழக அரசுக் கல்வித்துறையில் மூலமாக அரசுப்பணியில் சேர்ந்து, இருபதாண்டுகள் பணிபுரிந்து 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பத்தாண்டு விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளார். தனக்குக் கிடைத்த இருபதாண்டு கால அரசுப் பணி என்பது தனது அப்பாவின் மரணம் தந்த கொடை என்பதை குறிப்பிட்டுள்ள இவர், அவரது தந்தையைப் பற்றியும், அவரது ஆசிரியப் பணியில் இவரது குடும்பம் இருந்த ஏழ்மை நிலையையும் ஓதாமல் ஒருநாளும் மற்றும் மீதி ஆகிய சிறுகதைகளில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டில் [திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் நடைபெற்ற சாலை விபத்தில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு பேசமுடியாத நிலையில் இருந்து மீண்டு வந்துள்ள இவர், தற்போது மூன்று நாவல்களை எழுதி வருவதாக கூறியுள்ளார்.[2]

இவரது வாழ்வுப்பாதை குறித்து நினைவு மீள்கிற அனுபவ உரையாடலை பாரதி கோபால், வினோத் பாலுச்சாமி, அய்யலு குமரன், அங்கமுத்து, கோகுல், விமல் ஆகியோரின் கூட்டுழைப்பில் ஆவணப்படமாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.[3]

இலக்கியப் பணி

[தொகு]

1980 ஆம் ஆண்டில் இருந்து பல தமிழ் இலக்கிய இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், அரசியல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதி வரும் இவர் தமிழ் மாத இதழான காலச்சுவடின் பொறுப்பாசிரியராகப் ஏழாண்டு காலமாக பணிபுரிந்துள்ளார். பல்வேறு சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் நான்கு நாவல்கள் இதுவரை வெளிவந்து பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது.

1998 ஆம் ஆண்டில் சிவசக்தி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வ.கௌதமன் (சந்தனக்காடு தொலைக் காட்சித் தொடரின் இயக்குனர்) இயக்கத்தில் வெளிவந்த கனவே கலையாதே திரைப்படத்தின் கதாசிரியராக திரையுலகிலும் பணிபுரிந்துள்ளார். மேலும் ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

புதினம்

[தொகு]

1980 ஆம் ஆண்டில் இருந்து சிறுகதைகள், கட்டுரைகள் வழியாக இலக்கிய பங்களித்திருந்தாலும், 2011 ஆம் ஆண்டில் தான் இவர் தனது முதல் நாவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

  1. நிழலின் தனிமை (2011)
  2. நட்ராஜ் மகராஜ் (2017)
  3. நீர்வழிப் படூஉம் (2020)[4]
  4. நொய்யல் (2022)

சிறுகதைத்தொகுதிகள்

[தொகு]
  1. பலி
  2. பிறகொரு இரவு
  3. வீடென்ப
  4. கண் விழுத்த மறுநாள்
  5. தேவிபாரதி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
  6. மூன்றாவது விலா எலும்பும் விழுதுகளற்ற ஆலமரமும்

கட்டுரைத் தொகுப்பு

[தொகு]
  1. புழுதிக்குள் சில சித்திரங்கள்
  2. அற்ற குளத்து அற்புத மீன்கள்
  3. சினிமா பாரடைசோ

மொழிபெயர்ப்பு

[தொகு]
  1. தேவிபாரதியின் நிழலின் தனிமை நாவல் The Solitude of a Shadow என்ற தலைப்பில்  என். கல்யாணராமனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

விருதுகள்

[தொகு]
  1. சங்கீத நாடக அகாடமி பரிசு - ‘மூன்றாவது விலா எலும்பும் விழுதுகளற்ற ஆலமரமும்’என்ற நாடகத்துக்காக. # ‘கராஸ் வேர்டு’விருதுக்கு இவரது ‘Farewell, Mahatma’ சிறுகதைத் தொகுப்பு பரிந்துரைக்கப்பட்டது.
  2. தன்னறம் இலக்கிய விருது (2021) [5]
  3. நிழலின் தனிமை, ஜெயந்தன் விருது,
  4. அறிஞர் போற்றுதும் விருது, திருச்சி
  5. சாகித்திய அகாதமி விருது (நீர்வழிப்படூஉம்) [6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஈரோடு எழுத்தாளர் - தேவிபாரதி".
  2. "தேவிபாரதிக்குத் தன்னறம் விருது".
  3. "எழுத்தாளர் தேவிபாரதி அவர்களின் வாழ்வனுபவ உரையாடல்".
  4. "'நீர்வழிப் படூஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!", Hindu Tamil Thisai, 2023-12-20, பார்க்கப்பட்ட நாள் 2023-12-21
  5. "தேவிபாரதிக்குத் தன்னறம் விருது".
  6. "தமிழில் 'நீர்வழிப் படூஉம்' என்ற புதினம் எழுதிய ராஜசேகரன் (தேவிபாரதி)-க்கு சாகித்ய அகாடமி விருது".

வெளியிணைப்புகள்

[தொகு]
  1. இணைய பக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவிபாரதி&oldid=4151141" இலிருந்து மீள்விக்கப்பட்டது