தி மம்மி (திரைப்படம்)
தி மம்மி | |
---|---|
இயக்கம் | ஸ்டீபன் சோமர்ஸ் |
திரைக்கதை | ஸ்டீபன் சோமர்ஸ் |
நடிப்பு | |
வெளியீடு | மே 7, 1999(அமெரிக்கா) |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம்[1] |
ஆக்கச்செலவு | $80 மில்லியன் |
மொத்த வருவாய் | $415.9 மில்லியன் |
தி மம்மி என்பது 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஸ்டீபன் சோமர்ஸ் இயக்கியுள்ளார். ரேச்சல் வய்ஸ், பிரேன்டன் ஃபிரேசர், ஜான் ஹன்னா, அர்னால்டு வஸ்லோ ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1932 ஆம் ஆண்டு வெளிவந்த தி மம்மி திரைப்படத்தின் மறுபதிப்பு ஆகும்.
கதை
[தொகு]எகிப்து நாட்டின் தீபை பகுதியில் கிமு 1290 காலகட்டங்களில் வாழ்ந்த மிகப்பெரிய தலைமை மந்திரவாதியான இம்ஹோடெபும் முதலாம் பாரோ செடி மன்னனின் மனைவியான ஆங் சூ நமுனும் காதலித்து வந்துள்ளனர். பாரோ மன்னருக்கு இது பற்றி தெரிய வருகையில் இம்ஹோடெபும், ஆங் சூ நமுனும் சேர்ந்து மன்னரை கொலை செய்கிறார்கள். மன்னரை கொலை செய்துவிட்டு ஆங் சூ நமுன் தற்கொலை செய்து கொள்கிறார். தற்கொலை செய்தவரின் உடலை ஹன்னபுத்ராவிற்கு எடுத்துச் சென்ற இம்ஹோடெப், உடலிற்கு உரிரூட்டும் சடங்குகளை செய்யத் தொடங்குகிறார். அதற்குள் மன்னரை கொலை செய்த காரணத்திற்காக பாரோ மன்னரின் மெய்காவலர்களான மெஜாய் வீரர்கள் இம்ஹோடெப்பின் இருப்பிடத்திற்கு வந்து உரிரூட்டும் சடங்குகளை தடைபடுத்தி இம்ஹோடெப்பின் சீடர்கள் அனைவரையும் கொலைசெய்து உடலை மம்மியாக மாற்றுகின்றனர். இம்ஹோடெப்பிற்கு மட்டும் மிகவும் கடுமையான தண்டைனையான ஹோம் தாய் தண்டனை தருகின்றனர். ஹோம் தாய் தண்டனையின்படி உயிருடன் இம்ஹோடெப்பை சவப்பெட்டிக்குள் போட்டு, மனித மாமிசம் உண்ணும் வண்டுகளையும் போட்டு மூடிய சவப்பெட்டியை அனுகிஸ் தெய்வத்தின் காலடியில் புதைக்கிறார்கள். மேலும் உயிருடன் புதைக்கப்பட்டவன் மீண்டு வரமால் இருக்க மெஜாய் வீரர்கள் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். அதன்பின் வழிவழியாக மெஜாய்களின் வம்சாவளியினரும் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.
அதன் பின் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் கழித்து 1926 ஆம் ஆண்டு கைரோவில் நூலகராக பணிபுரியும் ஈவியும், அவளின் அண்ணன் ஜோனாத்தனும் அமெரிக்கரான ரிக்குடன் சேர்ந்து ஹம்னபுத்ராவிற்குச் செல்ல திட்டமிடுகிறார்கள். ஹம்னபுத்ராவிற்குச் செல்லும் வழியின் ரிக்கின் பழைய நண்பனான பெனி கூட்டிவரும் புதையல் வேட்டை குழுவுடன் இணைந்து கொள்கின்றனர். ஹம்னபுத்ராவிற்குச் சென்றவுடன் அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபடும் அவர்களை மெஜாய் வீரர்கள் தடுக்க முற்படுகின்றனர், அதை பொருட்படுத்தாமல் இக்குழு அடுத்த நாளும் அகழ்வாராய்ச்சியைத் தொடர்கின்றனர். அப்போது மரணப்புத்தகம் மற்றும் ஆங் சூ நமுனின் உடல் பாகங்கள் வைக்கப்பட்ட புனித ஜாடிகளை பெனியின் குழுவும், இம்ஹோடெப்பின் பதப்படுத்தப்பட்ட உடலை ரிக்கின் குழுவும் கண்டுபிடிக்கின்றனர். தவறுதலாக மரணப்புத்தகத்தை ஈவி படித்தவுடன் இம்ஹோடெப் உயிர்த்தெழுகிறான். உயிர்த்தெழுந்தவன் பெனியின் உதவியுடன் புனித ஜாடிகள் வைத்திருக்கும் நபர்களை ஒவ்வொருவராகக் கொன்று மனித உருவம் பெறுகிறான். ஆங் சூ நமுனை உயிர்த்தெழச் செய்ய ஈவியையும் கடத்திச் செல்கிறான். அமுன்றா எனும் தங்கப்புத்தகம் உயிர்த்தெழுந்த இம்ஹொடெப்பை மீண்டும் பாதாள உலகத்திற்கு அனுப்பும் எனும் செய்தியை அறிந்த ஈவி, ரிக்கின் உதவியுடன் புத்தகத்தைக் கண்டுபிடித்து அதைப் படிக்கிறாள். இம்ஹொடெப்பின் உயிர் பிரிந்து பாதாள உலகம் செல்லும் போது ரிக் இம்ஹோடெப்பின் உடலை மரண நதியில் தள்ளிவிடுகிறான். பெனியும் தெரியாமல் பொக்கிஷ அறையில் மாட்டிக்கொள்ள கிடைத்தப் பொக்கிஷங்களுடன் ரிக், ஈவி, ஜோனாத்தன் மூவரும் எகிப்தை விட்டு செல்கின்றனர்.
கதாபாத்திரங்கள்
[தொகு]பிரேன்டன் ஃபிரேசர் ரிச்சர்ட் ஓகானல் அல்லது ரிக் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரேச்சல் வய்ஸ் ஈவ்லின் அல்லது ஈவி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அர்னால்டு வஸ்லோ இம்ஹோடெப் மற்றும் மம்மி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இக்கதாபாத்திரம் 1290 காலகட்டங்களில் வாழ்ந்த மிகப்பெரிய தலைமை மந்திரவாதி, உயிருடன் புதைக்கப்பட்டு திரும்பி வராமல் இருக்க மெஜாய் வீரர்களால் பதுகாக்கப்பட்டவன், 3000 ஆண்டுகள் கழித்து மம்மியாக உயிர்பெற்ரு வருகிறான்.
ஜான் ஹன்னா ஜோனாத்தன் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இக்கதாபாத்திரம் ஈவியின் அண்ணன். பாரோவின் சொத்துக்களை திருடுவதற்காக ஹன்னபுத்ராவிற்கு செல்லுபவன்.
ஆடெட் பெர் ஆர்டெத் பே எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இக்கதாபாத்திரம் ஒரு மெஜாய் வீரன் மேலும் ஹன்னபுத்ரா நகரின் பாதுகாவலன்.
வெளியீடு மற்றும் வசூல்
[தொகு]தி மம்மி திரைப்படம் மே 7, 1999 அன்று அமெரிக்காவில் 3210 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட முதல் வாரமே இத்திரைப்படம் நாற்பத்தி மூன்று மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது. இத்திரப்படம் மொத்தமாக அமெரிக்காவில் 155 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் வெளிநாடுகளில் 260 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் வசூல் செய்தது. மொத்தம் இத்திரைப்படம் உலகம் முழுவதுமிருந்து நானூற்று பதினைந்து மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது.
விருதுகள்
[தொகு]ஜெர்ரி கோல்ட்ஸ்மித் இத்திரைப்படத்தின் சிறந்த இசைக்காக பி.எம்.ஐ திரைப்பட விருதை வாங்கினார்.
நிக் டட்மென் மற்றும் ஐலின் செடன் ஆகிய இருவரும் இத்திரைப்படத்தின் ஒப்பனைக்காக சாட்டர்ன் விருதை வாங்கியுள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Release". British Film Institute. London: BFI Film & Television Database. Archived from the original on January 3, 2014. பார்க்கப்பட்ட நாள் May 8, 2013.