உள்ளடக்கத்துக்குச் செல்

திரையச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு சித்திரம் அல்லது எழுத்து போன்ற உருவத்தை சிறிதளவும் மாறுபடாமல் பலமுறைகள் படியெடுப்பது அச்சு எனப்படுகிறது. இதற்காகப் பற்பல இயந்திரங்கள் சந்தையில் உள்ளன. ஆனால் தனிப்பட்ட நபர் அதிக செலவின்றி செய்ய முடியுமான அச்சு திரையச்சு (Screen Printing) ஆகும்.

வரலாறு[தொகு]

சில வரலாற்று நூல்கள் சீனாவில் சாங் வம்சத்தினரின் (கி.பி 960 - 1279) காலப்பகுதியில் திரையச்சு நடைமுறையில் இருந்தது எனக் குறிப்பிடுகின்றன[1][2]. இது பின்னர் சப்பான், மற்றும் ஆசிய நாடுகளுக்குப் பரவியது.

முதன் முதலில் வாழை இலைகளில் பல வண்ண வேலைப்பாடுகளைச் செய்து துளைகளை இட்டு அத்துளைகளின் மூலமாக தாவரங்கள், மரங்கள், காய்கள், விதைகள், மலர்கள் முதலியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட சாயங்களை உட்செலுத்தி உடலிலும் மரப்பட்டைகளிலும் பதிவுசெய்து ஆடைகளை அணிந்து மகிழ்ந்தனர்.

வரலாற்றுச் சான்றுகளின்படி கி.பி. 500 ஆம் ஆண்டில் புத்தரது போதனைகள் அலங்காரச் சுவர்களில் வாழை இலைகளில் துளைகளையிட்டு படியெடுக்கும் அட்டை போலத் தயாரித்து அச்சிட்டு வந்தனர். இத்தொழிலின் அடிப்படை வளர்ச்சிக்கும், துரித வளர்ச்சிக்கும் வித்திட்டவர்கள் சீனர்களும், சப்பானியர்களுமே.

திரையச்சுக் கலை 18ம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவுக்குச் சென்றது. 18 ஆம் நூற்றாண்டில் ஜீன் பிலொன் என்ற பிரெஞ்சுக் குடிமகனே வால் கடதாசிகளில் திரையச்சு செய்யும் முறையை அறிமுகஞ் செய்தார். இந்தத் தொழில் முழுமையாக ஆராயப்பட்டு திரையச்சு "சில்க் ஸ்கிரீன்" (Silk Screen) என்ற சொல் கிரேக்கர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. கார்ல் ஜிக்ரோசர்ஸ் (Carl Gigrossers) என்பவர் இதற்கு 'செரிகிராப்' (Serigraph) எனப் பெயரிட்டார்.

திரையச்சை 1868 ஆம் ஆண்டில் சேர் ஜோசப் ஸ்வான், ஜெலட்டின் மற்றும் அமோனியம் பைக்ரோமேட் என்னும் வேதிப் பொருள் மூலம் ஒளிபுகச் செய்து செயற்படும் எளியமுறையைக் கண்டுபிடித்தார்.

1907 இல் சான் பிரான்சிஸ்கோவில் ஜான் பில்ஸ்வர்த் பல நிறங்களில் திரையச்சு மூலம் அச்சடிப்பதை அறிமுகம் செய்தார். சாமுவேல் சைமன் என்பவரும் அதற்குச் சான்றுபகரும் வகையில் இங்கிலாந்தில் பல நிறங்களில் பட்டுத் துணி மூலம் திரையச்சு செய்து மேலும் இக்கலைக்கு மெருகூட்டினார்.

திரையச்சு செய்யத் தேவையான பொருட்கள்[தொகு]

  • திரையச்சு செய்ய ஒரு மரச் சட்டகம். அதனுடன் இணைந்த அடிப்பலகை
  • அச்சு மையைத் தேய்க்கும் இரப்பர் அல்லது ஸ்குவிஜீ
  • அச்சு செய்யத் தேவையான ஸ்ரென்சில்
  • திரைச் சட்டகம்
  • உதவி அட்டை (பேஸ் போர்டு)
  • வேதியல் பொருட்கள்
  • உலர்த்தும் அமைப்பு

இவை அடிப்படைத் தேவைகளாகும். நிழற்பட முறையையும் இதனுடன் இணைக்கும்போது அதற்குத் தகுந்த வெளிரிய மென்மையான படம், இருட்டறை, வேதியல் பொருட்கள் போன்றவையும் தேவைப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.jstor.org/pss/4629553
  2. http://www.screenweb.com/content/historys-influence-screen-printings-future

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரையச்சு&oldid=1828891" இலிருந்து மீள்விக்கப்பட்டது