திருக்களிற்றுப்படியார் அனுபூதி உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்களிற்றுப்படியார் அனுபூதி உரை [1] என்னும் இந்த உரைநூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. திருக்களிற்றுப்படியார் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சைவ சித்தாந்த நூல். தில்லை நடராசனின் அம்பலத்துக்கு ஏறும் படிக்கட்டு யானையின் துதிக்கையிலிருந்து யானையின் மத்தகமாகிய ஆள் ஏறியிருக்கும் பகுதிக்கு ஏறுவது போல அமைந்திருப்பதால் அதனைக் 'களிற்றுப்படி' எனக் குறிப்பிட்டு தில்லையம்பலவாணனின் பேறு அடைய வழிகாட்டும் நூல் திருக்களிற்றுப்படியார்.

இது தில்லைநாதனையும், நூலையும் அனுபவித்து எழுதிய உரை ஆதலால் 'அனுபூதி உரை' என்னும் பெயரினைப் பெற்றுள்ளது. 1962 ஆம் ஆண்டு அச்சாகி வெளிவந்துள்ள இந்த நூலில் இந்த உரைநூலை இயற்றியவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும் இந்த உரையில் கையாளப்பட்டுள்ள 'ஒழிவு', 'கழற்றி' என்னும் சொற்களை ஒப்புநோக்கி இதன் உரையாசிரியர் 'கண்ணுடைய வள்ளல்' என்னும் முடிவுக்கு அறிஞர் அருணாசலம் வருகிறார். [2]

இந்த உரையில் உரையாசிரியர் நூலாசிரியரை ஒரு பாடலைப் பாடிச் சேர்த்துப் போற்றியுள்ளார். அந்தப் பாடல்;

பொருளும் மனையும் அற மறந்து போகம் மறந்து புலன் மறுந்து
கருவி கரணம் அவை மறந்து காலம் மறந்து கலை மறந்து
தமுமம் மறந்து தவம் மறந்து தம்மை மறந்து தற்பரத்தோடு
உருகி உருகி ஒரு தீர்மை ஆயேவிட்டார் உய்யவந்தார்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
  2. இந்த முடிவினை மு. அருணாசலம் 1952 ஆம் ஆண்டே வெளியிட்டுள்ளார்.