தாய் (புதினம்)
தாய் (புதினம்) | |
---|---|
உருசியா மொழியில் தாய் புதினத்தின் அட்டை | |
வெளியீட்டுத் தகவல் | |
ஆசிரியர்(கள்) | மாக்சிம் கார்கி |
நாடு | உருசியா |
மொழி | உருசியம் |
பாணி | புரட்சி |
பதிப்புத் திகதி | 1906[1] |
ஊடக வகை | அச்சு |
பக்கங்கள் | 416 பக்கங்கள் (ஆங்கிலப் பதிப்பு) |
ISBN | பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0806508906 (ஆங்கிலப் பதிப்பு) |
தாய் (உருசியம்: Мать) எனும் ரஷிய புதினம் மார்க்ஸிம் கார்கியால் எழுதப்பட்டது. 1907 இல் முதன் முதலாக வெளியான இது உலகின் மிகச் சிறந்த செவ்விலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரஷியாவின் கம்யுனிசப் புரட்சிக்கு நெருங்கிய காலகட்டத்தை காலமாகவும், புரட்சியில் பங்கேற்கும் இளைஞர்களை கொண்ட தொழிற்சாலையை கதை களமாகவும் கொண்ட புதினம். இந்த புதினம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கபட்டுள்ளது.[2] திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.[3][4]
பாவெல் எனும் புரட்சியாளரின் தாய் நீலவ்னா கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலையிலிருந்து எப்படி தனது மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள், உண்மையை புரிந்து கொள்கிறாள், புரட்சியாளர்களுக்கு உதவ உத்வேகம் கொள்கிறாள், தனது வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை எப்படி கண்டடைகிறாள் என்பதை உணர்வு பொங்க சொல்லுவதோடு நம்மையும் அந்த தாயோடு பயணிக்க வைக்கிறது நாவல்.
கதை
[தொகு]இந்த புதினம் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
பாகம் 1
[தொகு]ஒரு ஆலைகுடியிருப்பிலிருந்து ஆரம்பிக்கிறது பெலகேயா நீலவ்னாவின் கதை. புகைபோக்கிகளுடனும், தொழிலாளிகளை குறித்த நேரத்தில் வர ஆணையிடும் சங்குடனும் கம்பீரமாக நிற்கும் அத்தொழிற்சாலை அப்பகுதி மக்களை நாள்முழுதும் சக்கையாக உறிஞ்சியெடுக்கிறது. அவர்களது வாழ்க்கையில் குறிப்பாக ஆண்களது சந்தோஷம் என்பது குடிப்பதும் சண்டையிடுவதுமே. நீலவ்னாவின் கணவனும் இதற்கு விதிவிலக்கல்ல. கிட்டதட்ட இருபது வருடங்கள் கணவனிடம் அடியும் உதையும் வாங்கியே அவளது இளமைக்காலம் கழிந்துவிடுகிறது. அவளது கணவன் இறந்துவிட, நீலவ்னாவின் மகன் பாவெலும் அதே ஆலையில் வேலைக்குச் சேர்கிறான்.
பாவெலுக்குச் சில தோழர்களுடன் பரிச்சயம் ஏற்படுகிறது. அவனுக்குள் மாற்றங்கள் உண்டாகிறது. ஒரு தொழிலாளி கிட்டதட்ட முப்பது வருடங்கள் உழைத்து கண்ட பலன் ஒன்றுமில்லை, ஆலைதான் வளர்ச்சியடைகிறதே தவிர அவர்களது வாழ்க்கையில் கிஞ்சித்தும் மாறுதல் ஏற்படவில்லை, தமது அடிமை நிலையிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றால் தொழிலாளிகள் இறுக்கமாக இணைவதே இதற்கு விடை என்பதை உணர்ந்துக்கொள்கிறான். நிறைய புத்தகங்களை வாசிக்கிறான். அவனோடு இன்னும் பல தோழர்கள் வீட்டிற்கு வருகிறார்கள். ஒன்றாக வாசிக்கிறார்கள். தங்களுக்குள் விவாதிக்கிறார்கள்.
பெலெகேயா நீலவ்னா இவை அனைத்தையும் பார்க்கிறாள். அவர்கள் பேசுவதைக் கேட்கிறாள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து கொள்கிறாள். தனது கடந்த கால வாழ்க்கையையும் அவளது தோழிகளின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறாள். பாவெல் பேசுவதைக் குறித்து மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியை அடைந்தாலும் தனது மகனின் பாதுகாப்புக் குறித்து கலக்கமடைகிறாள். ஏனெனில், பாவெல் படிப்பது அத்தனையும் தடை செய்யப்பட்ட புத்தகங்கள். அவை தொழிலாளிகளின் உண்மை நிலையைப் பேசுவதோடு அந்த நிலைமைய மாற்றுவதற்கான வழியையும் போதிக்கின்றன.
சிறிது சிறிதாக பாவெலின் வீட்டில் கூட்டம் அதிகரிக்கிறது. எங்கிருந்துதான் மனிதர்கள் வருகிறார்களோ தெரியாது, குறித்த நேரத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு தேநீர் வைத்துக் கொடுப்பதும், வெந்நீர் கொடுப்பதும் அவர்கள் பேசுவதை கேட்பதுமே தாய்க்கு ஆனந்தம். தாயாலும் அவர்களைப் போல வாசிக்க முடிந்தால்…..பாவெலில் நண்பர் அந்திரேய் மூலமாக வாசிக்கக் கற்றுக்கொள்கிறாள் அந்தத் தாய்.
இதன் நடுவில், வீடு போலிசாரால் சோதனையிடப்படுகிறது. பாவெலின் நண்பரை கைது செய்து கொண்டு செல்கிறார்கள். இது தாயை அதிர்ச்சிகுள்ளாக்குகிறது. ஆனாலும், தொழிற்சாலைக்குள் பிரசுரங்கள் பரவுவதை யாராலும் தவிர்க்க முடியவில்லை. தொழிலாளர்களிடையே பேசிய பேச்சுக்காக போலீஸ் பாவெலை கைது செய்கிறது. தாய்க்கு கதறியழ வேண்டும் போலிருக்கிறது. ஆனால், அமைதியாக ஏற்றுக்கொள்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக தானே பிரயத்தனப்பட்டு புத்தகங்களை வாசிக்கிறாள். பாவெலின் நண்பர்களுக்கு பிரசுரங்களை ஆலைக்குள் தொழிலாளிகளிடையே தொடர்ந்து விநியோகிப்பது எப்படியென்று தெரியவில்லை.
தாய் இவ்வேலையை செய்ய முன்வருகிறாள். ஒருவேளை விநியோகிப்பது நின்று விட்டால் செய்தது பாவெல்தான் என்று நிரூபணமாகிவிடும். இதற்கு ஒரேவழி, பிரசுரங்கள் தொடர்ந்து ஆலைக்குள் தொழிலாளிகளுக்குக் கிடைக்கச் செய்வதுதான் என்று நண்பர்கள் பேசுவதைக் கேட்டதும் அவள் அவ்வேலையை செய்வதாக முன்வருகிறாள்.
ஆப்பம் விற்கும் பெண்ணுடன் உதவி செய்பவராக தொழிற்சாலைக்குள் செல்கிறாள் தாய். பிரசுரங்கள் தொழிலாளிகளின் கைகளை அடைகின்றன.
இதில் தாய்க்கு பெரிதும் மகிழ்ச்சி. தனது மகனிடம் இதைப் பற்றி உடனே சொல்லவேண்டும் என்றும் அவன் இதை அறிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைவான் என்றும் எண்ணுகிறாள். இரவுகளில் உறங்கப் போகும் முன் இயேசுவிடம் இந்தக் குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்யவும் தயங்குவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தாய் தனது மகனின் புதிய மார்க்கத்திலிருக்கும் உண்மையை அறிந்து கொள்கிறாள். அதுவே சத்தியம் என்றும் உழைக்கும் மக்கள் அனைவரும் இதனை உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்றும் எண்ணுகிறாள். பாவெலும் சிறையிலிருந்து வந்துவிடுகிறான்.
மேநாள் நெருங்குகிறது.மேநாள் பேரணிக்கான வேலைகள் நடக்கின்றன. மகனின் மேலுள்ள பாசத்தினால் தாய்க்கு அழுகை முட்டுகிறது. ஏனெனில், பேரணியை தலைமை தாங்கி நடத்தப் போவது பாவெல். போலிஸ் சிறைக்கு அனுப்பினாலும் அனுப்பலாம். தாயால் சிலநேரங்களில் ஒரு தாயாக நடந்துக்கொள்வதை தவிர்க்க முடிவதில்லை. ஆனாலும், தாங்கிக் கொள்கிறாள்.
பெரும் எழுச்சியுடன் மேநாள் பேரணி நடக்கிறது. பெரும் கூட்டம் திரள்கிறது. தாயால் பாவெல் அருகில் கூட நெருங்க முடியவில்லை. ஆனால், பாவெல் தனது மகன் என்று தாயின் மனம் மகிழ்ச்சி கொள்கிறது. பேரணியில் பாவெல் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவதோடு முதல் பாகம் முடிகிறது.
பாகம் 2
[தொகு]இரண்டாவது பாகத்தில், தாய் ஒரு புரட்சியாளராக பரிணமிப்பதும், நாட்டின் பல பகுதிகளுக்கு பயணம் சென்று பிரசுரங்களை சேர்ப்பிப்பதும், தனது மகனைப் போல பல புரட்சியாளர்களைச் சந்திப்பதும் உணர்வுமிக்க வகையில் விவரிக்கப்படுகிறது. உழைக்கும் மக்களும்,விவசாயிகளும் ஒன்று சேர்ந்தால்தான் முதலாளித்துவத்தை ஒழிக்க முடியும் என்றும் அதில்தான் மக்களின் விடுதலை இருக்கிறது என்றும் தாய் உணர்ந்து கொள்கிறாள். புதிது புதிதாக மனிதர்களைச் சந்திக்கிறாள். ஆரம்பத்தில் அவளுக்கு ஏற்படும் தயக்கங்களும், அவர்களுடன் நட்பு கொள்வதும் மிக இயல்பாக எழுதப்பட்டிருக்கிறது.
கதைமாந்தர்கள்
[தொகு]- பெல்கேயா நீலவ்னா. இவள்தான் தாய். இவளின் மகன் பாவெல்
- பாவெல் விலாசவ். இவனது செல்லப்பெயர் பாஷா
- மிகயீல் விலாசவ்.பெல்கேயா நீலவ்னாவின் கணவன்
- அந்திரேய் நஹோத்யா. இவனை ஹஹோல் என்றும் அழைப்பர். ஹஹோல் என்பது உக்ரேனிய பிரதேச மக்களுக்கு ருஷ்யர்கள் இட்டுள்ள கேலிப் பெயர்
- நதாஷா
- நிகலாய் விஸோவ்ஷிகோல்
- பியோதர்
- சாஷா
- பெகுன்சோவ். இவன் ஒரு சாராயக் கடைக்காரன். ஊரார் இவனுக்கு எலும்பு கண்ணன் என்று பட்டப் பெயர் வைத்திருந்தார்கள்
- மரியா கோர்சுனவா. இவள் விலாசாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரி. விதவை. தொழிற்சாலை வாசலில் சாப்பாடு விற்று வாழ்பவள். இவளது இறந்துபோன கணவன் ஒரு இரும்பு பட்டறை தொழிலாளி.
- பெத்யாகின். உள்ளூர் போலீஸ்காரன். நறுக்கு மீசை வைத்தவன்.
- திவெர்யகோவ். பழைய பாத்திர தொழிலாளி.
- ரீபின். கொல்லுப் பட்டறை தொழிலாளி. கருத்த தடித்த ஆசாமி
- இகோர்
உரையாடல்கள்
[தொகு]- நான் இன்னும் சின்ன பிள்ளை தான். இதற்குள் குடித்திருக்க கூடாது. ஆனால் மற்றவர்கள் குடிக்கிறார்களே. அவர்களுக்கு ஒன்றும் செய்வதில்லை. நான் மட்டும் இப்படி ஆகிவிட்டேன்" என புலம்புகிறான் பாவெல். அதற்கு அவன் தாய் "ஆனால் நீ மட்டும் குடிக்காதே. உன் அப்பா உனக்கும் சேர்த்து குடித்து தீர்த்து விட்டார்.அவர் என்னைப் படாதபாடுபடுத்தினார். உன் தாய் மீது கொஞ்சமாவது நீ பரிவு காட்ட கூடாதா?" என்கிறாள்.
- "நீ என்னதான் செய்ய விரும்புகிறாய்?" என்று அவனது பேச்சில் குறுக்கிட்டு கேட்டாள் அவள். முதலில் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தொழிலாளர்களான நாம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நம்முடைய வாழ்க்கை ஏன் இவ்வளவு கஷ்டம் நிறைந்ததாக இருக்கிறது என்பதை நாம் கண்டுபிடித்து தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்"
- உன் இஷ்டப்படியே நீ வாழப்பா. அதெல்லாம் நான் தலையிடக்கூடிய விவகாரம் இல்லை. நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். நீ மற்ற மனிதர்களோடு பேசும் போது இவ்வளவு தீவிரமாக பேசாதே. மனிதர்களைப் பற்றிய பயம் உனக்கு எப்போதும் இருக்கவேண்டும். அவர்கள் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள். பேராசையிலும் பொறாமையாலுமே வாழ்கிறார்கள். அடுத்தவனைத் துன்புறுத்துவதில் ஆனந்தம் கொள்கிறார்கள். நீ அதை எடுத்துக் காட்டி அவர்களை குறை கூற தொடங்கினால் உடனே அவர்கள் உன்னையும் பகைப்பார்கள். உன்னை அழித்தே விடுவார்கள்"
- "அவள் மிகவும் களைத்துப் போவாள்"என்று தாய் கூறியதை ஆமோதித்து பேசினான் இகோர். "சிறைவாழ்க்கை அவள் உடல் பலத்தை உருக்குலைத்து விட்டது. அவள் எவ்வளவு பலசாலியாக இருந்தாள்?. செல்லமாய் வளர்க்கப்பட்ட பெண். அவள் நுரையீரல் ஏற்கனவே கெட்டுப்போய் இருப்பது போலத்தான் தோன்றுகிறது"
தமிழ் மொழிபெயர்ப்பு
[தொகு]இந்த நூலை தமிழில் ப. இராமசாமி அன்னை என்ற பெயரில் மொழிபெயர்த்தார். மேலும் தொ. மு. சி. ரகுநாதன் தாய் என்ற பெயரில் மொழிபெயர்த்தார். இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளில் தாய் என்ற பெயரிலான மொழிபெயர்ப்பே தமிழ் வாசகர் பரப்பில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. முன்னாள் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தனக்கு பிடித்த புதினமாக இதைக் குறிப்பிட்டார். மேலும் இந்த கதையை தாய் காவியம் என்ற பெயரில் கவிதை நடையில் எழுதினார்.[5] இக்கதையை தழுவி 2011 ஆம் ஆண்டு மு. கருணாநிதியின் உரையாடலில் இளைஞன் என்ற பெயரில் திரைப்படம் வெளியானது.[6]
உசாத்துணை
[தொகு]- ↑ Released date
- ↑ Максим[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Мать
- ↑ இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Мать
- ↑ "தொ.மு.சிதம்பர ரகுநாதன் நூற்றாண்டு: நவீனத்துவம் வாய்ந்த எழுத்து!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-10-10.
- ↑ "CM to launch 'Ilaignan'". Indiaglitz. 24 April 2010. Archived from the original on 26 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 16 March 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)