தாமரை (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாமரை என்பது 1950 களில் வெளியான முற்போக்கு சிற்றிதழ் ஆகும். இது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டில் இருந்து மாதம் இருமுறை வெளிவந்தது.

வரலாறு[தொகு]

தாமரை இதழின் ஆசிரியராக ப. ஜீவானந்தமும், 'மாஜினி' துணை ஆசிரியராகவும் பணியாற்றினர். பணியாற்றினார். ஜீவானந்தத்துக்குப் பிறகு மாஜினி இதழ் பொறுப்பை நிர்வகித்தார். பின்னர், 1960 களில் தி. க. சிவசங்கரன், ஆ. பழநியப்பன், எம். கே. ராமசாமி ஆகிய மூவரைக் கொண்ட 'ஆசிரியர் குழு' தாமரையை வளர்க்கும் பணியை ஏற்று நடத்தியது. இவர்களது ஆசிரியப் பொறுப்பு பத்து வருட காலம் நீடித்தது. இந்தக் காலகட்டத்தில் 'தாமரை' இலக்கியவாதிகளின் கவனத்தைக் கவர்ந்தது.

உலக இலக்கியங்களின் வளர்ச்சி, அண்டை மாநிலங்களில் வளரும் இலக்கியப் போக்குகள், சோவியத் உருசியாவின் புதிய இலக்கியப் படைப்புகள் ஆகியவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு விரிவாக அறிமுகம் செய்தது தாமரை. இதற்கென்றே சர்வதேச சிறுகதை மலர், (இந்திய) அயல்மொழிச் சிறுகதைச் சிறப்பிதழ் என்று அவ்வப்போது சிறப்பிதழ்களை ஆசிரியர் குழுவினர் உருவாக்கினர். அவ்வப்போது சிறுகதைப் போட்டிகளை நடத்தினர்.[1]

தமிழ்நாட்டின் இலக்கியப் படைப்பாளிகளது சிறுகதைகளைச் சேகரித்து சிறுகதைச் சிறப்பிதழ்கள் வெளியிட்டார்கள். வட்டார இலக்கிய வளர்ச்சியை அறிமுகப்படுத்தும் வகையில் 'கரிசல் இலக்கிய மலர்' தயாரித்தார்கள்.

விமர்சனக் கட்டுரைகளைச் சேகரம் செய்து வெளியிடுவதில் அக்காலக்கட்டத்திய தாமரை அதிக அக்கறை காட்டியது. மணிக்கொடி எழுத்தாளர்களை விமர்சித்து தி. க. சிவசங்கரன் ஒரு கட்டுரைத் தொடர் எழுதினார். உலக நாடக இலக்கியம் குறித்து எம். கே. மணி சாஸ்திரி கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதினார்.

ஆசிய, ஆப்பிரிக்க விடுதலைக் கவிஞர்களின் படைப்புகளைத் தமிழில் தந்தது தாமரை. வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும், அதன் பின்னணியில் தோன்றிய இலக்கியங்களின் பெருமையையும் எடுத்துச் சொல்வதற்காக 'வியட்நாம்' மலர் ஒன்றை வெளியிட்டது.

தாமரை வெகுகாலம் வரை புதுக் கவிதையை வரவேற்கவில்லை. பின்னர் முற்போக்குப் பாணியில் எழுதப்படும் புதுக் கவிதைகளை விரும்பி வெளியிட்டது. புதிய கவிஞர்களுக்கு ஆதரவு தந்தது.

நூறு இதழ்கள் தயாரித்து முடித்துப் பெயர் ஈட்டிய பெருமையோடும் மகிழ்ச்சியோடும் ஆசிரியப் பொறுப்பிலிருந்து ஆசிரியர் குழுவினர் விலகிக் கொண்டனர்.[2] அதிலிருந்து 'தாமரை' தனது பெருமையை இழக்கலாயிற்று.

குறிப்புகள்[தொகு]

  1. ச.தமிழ்ச்செல்வன். "தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு சாந்தி, தாமரை, செம்மலர் இதழ்களின் பங்களிப்பு". www.keetru.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
  2. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 159–161. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரை_(இதழ்)&oldid=3807284" இலிருந்து மீள்விக்கப்பட்டது