உள்ளடக்கத்துக்குச் செல்

தம்மாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தம்மாம், (அரபு : الدمّام ad -Dammām ) சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தின் தலைநகரம் ஆகும். மாகாணத்தின் நீதி மற்றும் நிர்வாக அமைப்புகள் மற்றும் பல அரசு துறைகள் நகரத்தில் அமைந்துள்ளன. கிழக்கு மாகாணத்தின் மிகப் பெரிய நகரமும், சவுதி அரேபியாவின் ரியாத், ஜித்தா, மக்கா, மதீனா மற்றும் தாயிப் ஆகிய நகரங்களுக்கு பிறகான ஆறாவது பெரிய நகரமும் ஆகும். சவுதி அரேபியாவின் மற்ற 12 பிராந்திய தலைநகரங்களைப் போலவே இந் நகரமும் நகராட்சியின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றது.

சவுதி எண்ணெய் தொழிற்துறையின் முக்கிய நிர்வாக மையம் ஆகும். அருகிலுள்ள நகரங்களான தஹ்ரான் மற்றும் அல் கோபருடன் சேர்ந்து தம்மாமும் அதன் புறநகர்ப் பகுதிகளும் பெரிய தம்மாம் என்று அழைக்கப்படுகின்றது. இவற்றில் 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி 4,140,000 மக்கள் வசிக்கின்றனர். சவுதி அரேபியா, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் மற்றும் அரபு உலகில் ஆண்டுக்கு 12% விகிதத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. [சான்று தேவை]

காலநிலை

[தொகு]

தம்மாம் கோப்பனின் காலநிலை வகைப்பாட்டின் கீழ் வெப்பமான பாலைவன காலநிலை கொண்டுள்ளது.[1] தென்மேற்கு ஆசியாவின் பெரும்பாலான நாடுகளைப் போலவே கோடையில் மிகவும் வெப்பமாக காணப்படும். பொதுவாக சுமார் ஐந்து மாதங்களுக்கு 40 °C (104 °F) ஐ விட அதிகமான வெப்பநிலையை கொண்டிருக்கும்.

பொதுவாக தம்மாமில் மழைவீழ்ச்சி குறைவாகவே இருக்கும். பொதுவாக டிசம்பரில் சிறிய அளவில் மழைப்பொழிவு ஏற்படும். இருப்பினும் சிலசமயம் குளிர்காலங்களில் மழைவீழ்ச்சி ஒப்பீட்டளவில் கனமாக காணப்படுவதன் விளைவாக சாலைகள் நீரில் மூழ்குவதும் உண்டு. பல ஆலங்கட்டி மழை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பொதுவாக குளிர்காலத்தில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யாது. 2008 ஆம் ஆண்டு டிசம்பரில் இடியுடன் கூடிய மழை பெய்தது. 3 அங்குலங்கள் (76 மிமீ) மழைவீழ்ச்சி பதிவாகியது. 2018 நவம்பர் தம்மாமில் வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பெய்தது. [சான்று தேவை]

கோடையில் பெரும்பாலும் அரேபிய தீபகற்பத்தின் அல்லது வட ஆபிரிக்காவின் பாலைவனங்களில் இருந்து வரும் தூசி புயல்கள் போன்ற அசாதாரண நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

2010 சூன் 30 அன்று மிக உயர்ந்த வெப்பநிலை 50.3 (C (122.5 °F) பதிவாகியது. அதே நேரத்தில் 2008 சனவரி 16 இல் மிகக் குறைந்த வெப்பநிலை 0.8 °C (33.4 °F) பதிவாகியது.[2]

போக்குவரத்து

[தொகு]

விமானம்

[தொகு]

தம்மாம் கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்தால் சேவை செய்யப்படுகிறது. இது நிலத்தின் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய விமான நிலையமாகும். மத்திய கிழக்கு, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பிற நகரங்களுடன் தம்மம் விமானம் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் சவுதி வளைகுடா ஏர்லைன்ஸின் மையமாக உள்ளது.

கடல்

[தொகு]

பாரசீக வளைகுடாவின் கடற்கரையில் அமைந்துள்ள கிங் அப்துல் அஜீஸ் கடல் துறைமுகம் சவூதி அரேபியாவின் மிகப் பெரிய துறைமுகமாகும். மேலும் இது பாரசீக வளைகுடாவின் மிகப்பெரிய துறைமுகமாகும்.

சாலை

[தொகு]

கிழக்கு மாகாண நகரங்களான அப்கைக் , தஹ்ரான் , ஹோபுஃப் , ஜுபைல் ( தஹ்ரான்-ஜுபைல் நெடுஞ்சாலை ), காஃப்ஜி, கோபர் (தம்மாம்-கோபார் நெடுஞ்சாலை), ராஸ் தனுரா , சிஹாத் மற்றும் கதிஃப் ( வளைகுடா சாலை ), அத்துடன் அரேபியாவின் பிற பகுதிகளில் உள்ள பல நகரங்கள் 8 வழிச்சாலைகள் மூலம் தம்மாமுடன் இணைக்கப்பட்டுள்ளன. தம்மாம் சவூதி தலைநகரான ரியாத் மற்றும் மேற்கு கடற்கரையில் உள்ள ஜித்தாவுடன் நெடுஞ்சாலை 40 மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பஸ் சேவைகள் தம்மாமை கோபார் மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள பிற நகரங்களுடன் இணைக்கின்றன.

புகையிரதம்

[தொகு]

சவூதி அரேபியாவின் இரண்டு புகையிரத நிறுவனங்களில் ஒன்றான சவூதி புகையிரத அமைப்பின் (எஸ்.ஆர்.ஓ) தலைமையகம் தம்மாமில் அமைந்துள்ளது.[3] மேற்கு பிராந்தியத்தில் ரியாத் மற்றும் மக்கா வழியாக தம்மாமை ஜித்தவுடன் இணைக்கும் மற்றும் தம்மாமத்தை ஜுபைலுடன் இணைக்கும் இரண்டு எதிர்கால புகையிரத திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

புள்ளிவிபரங்கள்

[தொகு]

1950 ஆம் ஆண்டில் தம்மாமில் தொகை 22,000 மக்கள் வசித்தனர். 2000 ஆம் ஆண்டளவில் மக்கட் தொகை 759,000 ஆக உயர்ந்தது. இந்த 50 ஆண்டு காலப்பகுதியில் சனத்தொகை வளர்ச்சி விகிதங்களின் அடிப்படையில் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் 10 வது நகரமாக தம்மாம் திகழ்ந்தது.[4]

மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2010 ஆம் ஆண்டு திசம்பர் நிலவரப்படி தம்மாமில் 903,000 மக்கள் வசிக்கின்றனர். இது சவுதி அரேபியாவில் ஆறாவது அதிக சனத் தொகை கொண்ட நகரமாகவும், கிழக்கு மாகாணத்தில் அதிக சனத்தொகை கொண்ட நகரமாகவும் திகழ்கிறது.[5]

கல்வி

[தொகு]

தம்மாமில் ஏராளமான பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் காணப்படுகின்றன. பல்வேறு பாடத்திட்டங்கள் மற்றும் பல்வேறு மொழிகளில் கற்பிக்கும் பள்ளிகளைக் காணலாம்.

பொழுதுபோக்கு இலக்குகள்

[தொகு]

சவூதி அரேபியாவில் எண்ணெய் அல்லாத வருவாயைப் பன்முகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சவூதி 2030 திட்டத்தின் ஒரு பகுதியாக சவூதி பொது முதலீட்டு நிதியம் கிழக்கு மாகாணமான இரண்டு பொழுதுபோக்கு இடங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.[6] பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை நிறுவுவது இதில் அடங்கும். 50 சதுர கிலோமீற்றர் பரப்பில் தம்மாம் மற்றும் அஹ்சா இடையில் அரோம்கொவில் கிங் சல்மான் எனர்ஜி பார்க் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.[7]

சான்றுகள்

[தொகு]
  1. "Dammam climate: Average Temperature, weather by month, Dammam weather averages - Climate-Data.org". en.climate-data.org. பார்க்கப்பட்ட நாள் 2019-11-09.
  2. "Wayback Machine". web.archive.org. 2016-03-04. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-11-09.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "Saudi Railways Locations". Archived from the original on 2011-07-19.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "The scale of urban change worldwide 1950-2000 and its underpinnings"" (PDF). Archived from the original (PDF) on 2017-12-11.
  5. "Riyadh most populous Saudi city, Makkah most populous province". Arab News (in ஆங்கிலம்). 2012-02-25. பார்க்கப்பட்ட நாள் 2019-11-09.
  6. "Saudi Arabia looks east for next stage of entertainment revolution". Arab News (in ஆங்கிலம்). 2019-05-02. பார்க்கப்பட்ட நாள் 2019-11-09.
  7. "Saudi Arabia's crown prince to inaugurate 1st phase of energy park". Arab News (in ஆங்கிலம்). 2018-12-09. பார்க்கப்பட்ட நாள் 2019-11-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்மாம்&oldid=3587146" இலிருந்து மீள்விக்கப்பட்டது