தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் என்பது இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது பாதிக்கப்பட்டு தங்கள் உடைமைகளை இழந்து, அகதிகளாக தமிழகத்திற்கு வருகை தந்த இலங்கைத் தமிழர்களை குறிப்பதாகும். இலங்கையில் இரு வகையான தமிழர்கள் உள்ளனர். 1.பூர்வீகத் தமிழர்கள். 2. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் இருந்து இலங்கையின் மலையகப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் அழைத்துச் செல்லப்பட்ட மலையகத் தமிழர்கள். 2012 ஆம் ஆண்டு இலங்கை அரசின் மக்கள் தொகை கணக்கின் படி இந்தியப் பூர்வீகத் தமிழர்கள் 839,504 பேரும், இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள் 2,269,266 பேரும் இலங்கையில் வசித்து வருகின்றனர். [1]

அகதியாக தமிழகம் வருகை[தொகு]

இலங்கையில் ஏற்பட்ட இன மோதல்களின் தொடர்ச்சியாக உயிரைக் காத்துக் கொள்வதற்காக எந்த வித பாதுகாப்புமில்லாத மீன்பிடிப் படகுகளில் 1983ம் ஆண்டு முதன் முதலில் அகதியாக இந்தியா நோக்கி தமிழர்கள் வந்தனர். வசதி வாய்ப்புள்ள சிலர் விமானம் மூலமும் தமிழகத்திற்கு வருகை தந்தனர். தொடர்ந்து 1983-1987, 1989-1991, 1996-2003, 2006-2010 ம் ஆண்டுகளிலும் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் நோக்கி வந்தனர். தமிழக மறுவாழ்வுத்துறை அலுவலகத்தின் கணக்கின் படி இக்காலப்பகுதியில் மொத்தமாக 3,03,076 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் நோக்கி வந்துள்ளனர். [2]

தமிழகத்தில் அகதி முகாம்கள்[தொகு]

அகதிகளாக தமிழகத்திற்கு வருகை தரும் இலங்கைத் தமிழர்களுக்காக மண்டபத்தில் ஏற்கனவே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாம் தற்காலிக இடைத்தங்கல் முகாமாக மாற்றப்பட்டது. அகதியாக வரும் மக்களை இங்கு வைத்து அவர்கள் உண்மையான அகதிகள் தானா என்பதை உறுதி செய்த பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போராளிக் குழுக்களைச் சார்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் பட்சத்தில் மண்டபத்தில் உள்ள தடுப்பு முகாம்களிலோ அல்லது செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் இருந்த சிறப்பு முகாம்களிலோ தடுத்து வைக்கப்பட்டனர். தமிழகத்தில் மண்டபம், கொட்டப்பட்டு ஆகியவை இடைத்தங்கல் முகாம்களாக அமைக்கப்பட்டு தற்போது தற்காலிக முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கும்முடிப்பூண்டி, புழல், ஈரோட்டில் உள்ள பவாணிசாகர், திருச்சியில் உள்ள கொட்டப்பட்டு, வாழவந்தான்கோட்டை, இராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் ஆகிய முகாம்கள் அளவில் பெரிய முகாம்கள் ஆகும். இங்கு ஒவ்வொரு முகாமிலும் சுமார் 500 முதல் 1500 குடும்பங்கள் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஓரளவு பொருளாதார வசதியுடன் வருகை தந்தவர்கள் காவல்துறைப் பதிவுடன் முகாம்களுக்கு வெளியே சென்று வசிக்க அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை காவல் நிலையம் அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் தங்களது பதிவுகளை அல்லது அனுமதிகளை புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

தற்போது தமிழகத்தில் உள்ள 110 முகாம்களில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்களைச் சார்ந்த 65000 பேர் வசித்து வருகின்றனர். இவர்களைத் தவிர முகாம்களுக்கு வெளியே சுமார் 35000 பேர் வசித்து வருகின்றனர்.

தமிழக அரசின் உதவிகள்[தொகு]

தமிழகத்தைப் பொறுத்தவரை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலங்கைத் தமிழர்களுக்கு பாராபட்சம் காட்டாமல் முடிந்த வரை உதவித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளன.

வீடு மற்றும் சுகாதாரம்[தொகு]

முகாம்களில் மக்கள் வசிப்பதற்கு ஆரம்பத்தில் பத்துக்கு பத்து என்ற அளவில் தற்காலிக குடியிருப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து வந்த காலங்களில் அவை ஓரளவு நிரந்தர வீடுகளாக அமைத்துக் கொடுக்கப்பட்டது. இருப்பினும் இது அனைத்து முகாம்களிலும் முழுமையாக நடைபெறவில்லை. இன்னும் ஒரு சில முகாம்களிலும் வீடுகளின் தேவை இருந்து கொண்டுதான் உள்ளது. அரசும் தொடர்ந்து வீடுகள் அமைப்பு, திருத்தம் போன்ற பணிகளை செய்து கொண்டிருக்கிறது. ஒரு சில முகாம்களில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் வீடுகள் அமைத்துக் கொடுத்தல் மற்றும் திருத்தப் பணியினை அரசு மேற்கொண்டது. உதாரணமாக திருநெல்வேலியில் கங்கைகொண்டான் என்னும் இடத்தில் பலநோக்கு சமூக சேவை மையத்துடன் இணைந்து புதிய நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சிவகிரிப்பட்டியில் ஆபர் என்னும் நிறுவனத்தினாலும், சிவகங்கை மாவட்டம் கௌரிப்பட்டி என்னும் இடத்தில் அட்ரா இந்தியா என்னும் நிறுவனத்தினாலும் நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. கழிவறை மற்றும் குழியலறைகளைப் பொறுத்தவரையில் அரசு மட்டுமின்றி முகாம்களில் பணியாற்றிடும் தொண்டு நிறுவனங்களின் மூலமும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நீர் தேவையும் இயன்றவரை அரசினால் முழுமையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வீடுகள், சுகாதார வசதி மற்றும் நீர் வசதிகளைப் பொறுத்தவரையில் சில இடங்களில் தேவைகள் இருப்பினும் உள்ளூர் மக்களுடன் ஒப்பிடும் போது ஓரளவு மேம்பட்ட நிலையே அகதி முகாம்களில் காணப்படுகிறது.

மின்சாரம்[தொகு]

அகதி மக்கள் பயன்படுத்திடுவதற்காக இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மின்சாரத்திற்கான செலவினங்களை தமிழக மறுவாழ்வுத்துறையே ஏற்றுக் கொண்டுள்ளது..

உதவித்தொகை[தொகு]

இலங்கைத் தமிழர்கள் தங்களது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அரசினால் 1990ம் ஆண்டுகளில் மாதம் ஒன்றிற்கு ரூ.144 ஆக கொடுக்கப்பட்ட உதவித் தொகை தொடர்ந்து வந்த காலங்களில் 288, 400 என மாற்றம் செய்யப்பட்டு தற்போது, குடும்பத் தலைவர் ஒருவருக்கு ரூ.1000ம், 12 வயதிற்கு மேற்பட்ட குடும்பத் தலைவர் அல்லாதவர்களுக்கு ரூ.750ம் 12 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு ரூ.400ம் ஆக வழங்கப்படுகிறது.

மானிய விலையில் உணவுப் பொருட்கள்[தொகு]

மானிய விலை உணவுப் பொருட்களைப் பொறுத்த வரையில் எட்டு வயது பூர்த்தியடைந்தவர்களை பெரியவர்கள் எனக் கணக்கில் கொண்டு பெரியவர்களுக்கு மாதாந்தம் 12 கிலோ அரிசியும் குழந்தைகளுக்கு மாதாந்தம் ஆறு கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது. போக்குவரத்துச் செலவினங்களுக்காக மட்டும் 57 பைசா என்ற வகையில் அரிசிக்கு மக்களிடம் இருந்து பணம் பெறப்பட்டது. ஆனால் தற்போது ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ வரையிலும் முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. மிகுதியான அரிசிக்கு மட்டும் இந்தத் தொகை பெறப்படுகிறது.

மண்ணென்ணெய், சீனி, கோதுமை, பாமாயில், உளுந்து, பருப்பு போன்ற ஏனைய பொருட்களும் சராசரி தமிழக ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மானிய விலையிலேயே வழங்கப்படுகிறது. இவற்றில் மண்ணென்ணெய் மற்றும் சீனி மட்டுமே ஆரம்ப காலங்களில் அகதி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஏனைய பொருட்கள் அனைத்தும் கடந்த சில வருடங்களாகவே அகதி மக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வழங்கப்படுகிறது.

ஆடைகள், பாத்திரங்கள்[தொகு]

ஆண்டிற்கொருமுறை அரசினால் துணிமனிகள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக துணிமனிகளின் மதிப்பிற்கான கூப்பன் மக்களுக்கு வழங்கப்பட்டு அவற்றைக் கொண்டு கோ-ஆப் டெக்ஸ் சில் மக்கள் தங்களுக்கு வேண்டிய துணிகளை எடுத்துக் கொள்வதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்கள் எனில் வேட்டி, துண்டு, பணியன், பாய், பெட்சீட் போன்றவை வாங்குவதற்கும், பெண்கள் எனில் சேலை, பாவாடை, ஜாக்கெட், பெட்சீட், துண்டு, பாய் போன்றவை வாங்குவதற்கும் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இதே போன்று சிறுவர்களுக்கும் அவர்களுக்குரிய ஆடைகள் வாங்குவதற்கான கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இவற்றைக் கொண்டு மக்கள் தங்களுக்குத் தேவையான ஆடைகளை வாங்கிக் கொள்ள இயலும்.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை அரசினால் ரூ.250 மதிப்புள்ள அலுமினிய பாத்திரங்கள் வழங்கப்படுகிறது.

இவை தவிர தமிழக மக்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் அரசின் பெரும்பாலான சமூக நலப் பாதுகாப்பு நலத்திட்டங்கள் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அவற்றில் சில…

 • முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம்
 • திருமண உதவித் திட்டம்
 • பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
 • ஆதரவற்றோருக்கான உதவுத்தொகை
 • மாற்றுத் திறனாளிகளுக்கான உதவுத்தொகை
 • விதவையர்களுக்கான உதவுதொகை
 • தையல் தெரிந்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்குதல்
 • முதல்வரின் மருத்தவ காப்பீட்டுத் திட்டம்
 • இறுதிச்சடங்கிற்கான உதவித்தொகை

கல்வி[தொகு]

ஆரம்பக் கல்வி[தொகு]

இலங்கையில் இருந்து அகதியாக வரும் மாணவர்கள் எந்த வித உரிய ஆவணங்களும் இல்லாமல் பெற்றோர்கள் வழங்கும் உறுதி மொழியின் அடிப்படையில் பள்ளித் தலைமையாசிரியரின் ஒப்புதலுடன் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆரம்பக் கல்வி முதல் 12ம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் இலவசமாக கல்வியைத் தொடர அனுமதிக்கப்பட்டனர். தமிழக மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாடப்புத்தகம், குறிப்பேடுகள், மிதிவண்டி, மடிக்கணினி போன்றவையும் அகதி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

உயர்நிலைக் கல்வி[தொகு]

கல்லூரிக் கல்விக்கு ஆரம்ப காலத்தில் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு பொறியியல் கல்வியில் பத்து இடங்கள், மருத்துவ கல்வியில் பத்து இடங்கள், சட்டப் படிப்பில் ஐந்து இடங்கள், வேளாண் கல்லூரியில் ஐந்து இடங்கள், பல்தொழிற்நுட்பக் கல்லூரியில் 20 இடங்கள் என அகதி மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்து இந்த சிறப்பு இட ஒதுக்கீடுகள் நிறுத்தப்பட்டது. சில ஆண்டுகள் இலங்கைத் தமிழ் அகதி மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடர இயலாத நிலை இருந்தது. தொடர்ந்து வந்த காலங்களில் தமிழக அரசின் உதவியோடு பொறியியல் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் இன்று வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் இலங்கைத் தமிழ் அகதி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லை. ஒரு சில மாணவர்கள் மட்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் இலங்கைத் தமிழ் அகதி மாணவர்களும் பொறியியல் கல்லூரிகளுக்கான பொதுக் கலந்தாய்வில் பொதுப் பிரிவின் கீழ் கலந்து கொள்ளலாம் என்று தமிழக அரசினால் உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தகுதியுள்ள இலங்கைத் தமிழ் அகதி மாணவர்கள் பொறியியல் கல்விக்கான பொதுக் கலந்தாய்வில் கலந்து கொண்டு பொறியியல் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர்.

தமிழக அரசின் கல்வி தொடர்பான உதவிகள்[தொகு]

 • முகாம்களிலேயே அங்கன்வாடி மையம்
 • இலவச பள்ளிக் கல்வி
 • விலையில்லா மிதிவண்டி
 • விலையில்லா மடிக்கணினி
 • முதலாவது தலைமுறை பொறியியல் மாணவர்களுக்கு ரூ.20,000 கல்வி உதவி
 • உயர்கல்வி பயில்வோருக்கு கல்வி உதவி
 • அனைத்து அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளிலும் தலா ஐந்து இடங்கள் ஒதுக்கீடு

வேலை வாய்ப்பு[தொகு]

அகதி மக்களுக்கு என சிறப்பு வேலை வாய்ப்புகள் எதுவும் அரசினால் உருவாக்கிக் கொடுக்கப்படவில்லை. ஆரம்ப காலங்களில் வேலை வாய்ப்பிற்காக முகாமினை விட்டு வெளியே செல்வதற்கான கட்டுப்பாடுகளும் இருந்தது. தற்போது அவை படிப்படியாக குறைந்துள்ளது. முகாம்களின் அமைவிடத்திற்கேற்ப தங்களுக்கு கிடைக்கும் வேலைகளை அகதி மக்கள் செய்து வருகின்றனர். குறிப்பாக வண்ணப் பூச்சுப் பணிகளில் பெரும்பாலான அகதி மக்கள் ஈடுபடுகின்றனர். படித்த சிலர் தனியார் நிறுவனங்களில் பணி புரிகின்றனர். அகதி மக்களுக்கு அரசு வேலை வாய்ப்புக்கான அனுமதிகள் இல்லை. சில நேரங்களில் தகுதி இருந்தும் கூட தனியார் நிறுவனங்களில் அகதி என்ற காரணத்தினால் வேலை வாய்ப்பு மறுக்கும் சம்பவங்களும் உண்டு. முகாம்களில் பணியாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் சில தொழிற்பயிற்சிகள் வழங்கி சிறு தொழில் முயற்சிகளுக்கான உதவிகள் வழங்குகின்றன.

தணிக்கை/அனுமதிகள்[தொகு]

ஆரம்ப காலங்களில் அகதி மக்கள் குடியிருப்புகள் பாதுகாப்பு வலயங்கள் போன்றே இயங்கின. ஒவ்வொரு முகாமிலும் காவல்துறை அலுவலர்கள், புலனாய்வுத்துறை அலுவலர்கள் இருப்பார்கள். அவர்களின் அனுமதி பெற்றே வெளியே செல்ல வேண்டும். மாலைக்குள் இருப்பிடம் திரும்ப வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் இருந்தது. காலப்போக்கில் கட்டுப்பாடுகள் குறைந்து, அகதி மக்களும் தமிழக மக்களைப் போன்றே நடமாடும் நிலை ஏற்பட்டிருந்தாலும் கூட, இன்றும் அகதி மக்களை அரசு அதிகாரிகள் தணிக்கை என்னும் கணக்கெடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமைகளில் முகாம் வருவாய் ஆய்வாளர் மற்றும் புலனாய்வுத் துறையினரால் அகதி மக்கள் கணக்கெடுப்பு நடைபெறும். இதில் அனைத்து மக்களும் தவறாது சமூகமளிக்க வேண்டும். இன்றும் சில முகாம்களில் முகாம்களுக்குள்ளேயே புலனாய்வுத்துறை, காவல்துறை போன்றோரின் கண்காணிப்பு உள்ளது. அகதி மக்கள் முகாமினை விட்டு வெளியூர்களுக்கு செல்வதாயின் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.

அடையாள அட்டை[தொகு]

இலங்கைத் தமிழ் அகதி மக்களுக்கு அவர்களின் அடிப்படை விபரங்கள் மற்றும் குடும்ப புகைப்படத்துடன் கூடிய குடும்ப அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. அகதியாக மண்டபம் முகாமில் பதிவு செய்யப்பட்ட உடனே இத்தகைய அடையாள அட்டைகள் வழங்கப்படும். கடந்த 2007ம் ஆண்டு முதல் முகாம்களில் உள்ள அகதி மக்களுக்கு தனிநபர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. அகதி மக்களின் விபரங்கள் முழுமையாக சேகரிக்கப்பட்டு தேசிய தகவல் மையத்தின் உதவியுடன் அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு மறுவழ்வுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் திட்டமான ஆதார் அடையாள அட்டைகள் வழங்கும் திட்டத்தின் கீழும் அடையாள அட்டைகள் இலங்கைத் தமிழ் அகதி மக்களுக்கும் பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனங்களும் உதவிகளும்.[தொகு]

இலங்கைத் தமிழ் அகதி மக்களிடையே பணி செய்வதாயின் தமிழக அரசின் மறுவாழ்வுத்துறை அனுமதி பெற்றே பணிகளைத் தொடர முடியும். அந்த வகையில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தமிழக அரசின் மறுவாழ்வுத்துறையின் அனுமதியுடன் இலங்கைத் தமிழ் அகதி மக்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை செய்து வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத் தக்கவை,

ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்[தொகு]

ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் என்பது இலங்கைத் தமிழ் அகதி மக்களுக்காக இலங்கைத் தமிழ் மக்களால் நடத்தப்பட்டு வரும் தொண்டு நிறுவனம் ஆகும். ஆரம்ப காலம் முதலே இலங்கைத் தமிழ் அகதி முகாம்களில் பணி செய்து வருகிறது. குழுக் கட்டமைப்புகள், கல்விக்கான உதவிகள், சுய உதவிக் குழுக்களை உருவாக்குதல், சான்றிதழ்கள் தொடர்பான விழிப்புணர்வு என்ற வகையில் இதன் பணிகள் உள்ளன.

ஜே. ஆர். எஸ்[தொகு]

ஜே.ஆர்.எஸ் ம் ஆரம்ப காலம் தொட்டே இலங்கைத் தமிழ் அகதி மக்களுக்காக பணியினைச் செய்து வருகிறது. இது முகாம்களில் மாலைநேரக் இலவச பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது.

அட்ரா இந்தியா[தொகு]

அட்ரா இந்தியா – இந்நிறுவனம் 2004ம் ஆண்டிற்குப் பின்னரே அகதி முகாம்களில் பணியாற்றத் தொடங்கியது. இருப்பினும் இந்நிறுவனம் முகாம்களில் கழிவறைகள் அமைப்பு, நிரந்தர வீடுகள் அமைப்பு போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது பணிகளை மேற்கொண்டது. தற்போது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள், கடன் உதவிகள் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

லெபரா இந்தியா[தொகு]

லெபரா இந்தியா – குழந்தைகள் ஊட்ட நலத்திட்டத்தை செயற்படுத்தி வருகிறது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள் வழங்குதல், கல்விக்கான உபகரணங்கள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பல்நோக்கு சமூக சேவை மையங்கள் தங்கள் அமைவிடத்திற்கு அருகில் உள்ள முகாம்களில் தங்களது நிதி வளத்திற்கு ஏற்ப தங்களால் இயன்ற பணிகளை செய்து வருகின்றனர். வீடமைப்பு, கழிவறை அமைப்பு, தொழிற்பயிற்சிகள் என்பன இவற்றின் பணிகளில் குறிப்பிடத்தக்கவை.

அரசு நிர்வாகம்[தொகு]

இந்தியாவைப் பொறுத்தவரையில் அகதிகளுக்கு மத்திய அரசு உதவிகளைப் பெற்று மாநில அரசே அவர்களை பராமரித்து வருகின்றது. அகதி மக்களுக்கான செயல் திட்டங்களை மாநில அரசு நடைமுறைப்படுத்தி அவற்றை மத்திய அரசுக்கு சமர்ப்பித்து உரிய செலவினத்தை பெற்றுக் கொள்ளும் முறை பின்பற்றப்படுகிறது. இருப்பினும் இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் உதவி மட்டுமின்றி பல்வேறு திட்டங்களில் மாநில அரசும் தனது முழுமையான பங்களிப்பை வழங்கி வருகின்றது.

தமிழக அரசின் மறுவாழ்வுத்துறை அலுவலகம் சென்னையில் உள்ள எழிலகத்தின் நான்காம் தளத்தில் அமைந்துள்ளது. இங்கு மறுவாழ்வுத்துறை ஆணையர் மற்றும் பிற அலுவலர்கள் உள்ளனர். மறுவாழ்வுத்துறையின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), அகதிகளுக்கென சிறப்பு வட்டாட்சியர் போன்றோர் அகதி மக்களுக்கான பொறுப்பாக உள்ளனர். மேலும் முகாம்கள் அமைந்துள்ள தாலுக்காவினைச் சார்ந்த வட்டாட்சியரின் கண்காணிப்பில் முகாம்கள் இருக்கும். ஒவ்வொரு முகாமிற்கும் அகதிகள் பணிகளை மேற்கொள்வதற்கென வருவாய் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]