உள்ளடக்கத்துக்குச் செல்

தபூக் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) காலத்தில் நடைபெற்ற ஒரு போர் ஆகும்.

இதற்கு முன் நிகழ்ந்த மக்கா போர் சத்தியம் எது? அசத்தியம் எது? என்பதைப் பிரித்தறிவித்து விட்டது. முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதைப் புரிய வைத்துவிட்டது. எனவே, காலநிலை முற்றிலும் மாறி மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமில் வரத் தொடங்கினர் என்பதை இதற்குப் பின் “குழுக்கள்” என்ற தலைப்பில் வரும் விவரங்களிலிருந்தும், நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையிலிருந்தும் இதை நன்கு அறிந்து கொள்ளலாம். ஆக, மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின் முஸ்லிம்களின் உள்நாட்டுப் பிரச்சனைகளும் சிரமங்களும் முற்றிலுமாக முடிவுற்றது. அல்லாஹ்வின் மார்க்கச் சட்டங்களைக் கற்றுக் கொள்வதற்கும், கற்றுக் கொடுப்பதற்கும் இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பதற்கும் முஸ்லிம்களுக்கு முழுமையான அவகாசம் கிடைத்தது[1][2][3]

போருக்கான காரணம்

[தொகு]

எனினும், ஒரே ஒரு சக்தி மட்டும் எவ்விதக் காரணமுமின்றி முஸ்லிம்களுக்குத் தொந்தரவு கொடுத்து வந்தது. அதுதான் ரோமானியப் பேரரசு. ரோமர்கள் அக்காலத்தில் உலகத்தில் மிகப் பெரிய வல்லரசாகத் திகழ்ந்தார்கள். இதற்கு முன் ஒரு சம்பவத்தை நாம் பார்த்திருக்கிறோம். நபி (ஸல்) அவர்கள் புஸ்ரா மன்னருக்கு அனுப்பிய கடிதத்தை எடுத்துச் சென்றிருந்த ‘ஹாரிஸ் இப்னு உமைர் அஸ்தி’ என்ற தூதரைப் புஸ்ராவின் கவர்னராக இருந்த ‘ஷுரஹ்பீல் இப்னு அம்ர் கஸ்ஸானி’ என்பவன் வழிமறித்துக் கொன்று விட்டான். அதற்குப் பழிவாங்குவதற்காக நபி (ஸல்) ஜைது இப்னு ஹாஸாவின் தலைமையில் படை ஒன்றை அனுப்பினார்கள். இவர்கள் ‘முஃதா’ என்ற இடத்தில் ரோமர்களுடன் கடுமையாகச் சண்டையிட்டனர். முழுமையாக அந்த அநியாயக்காரர்களைப் பழிவாங்க முடியவில்லை. இருப்பினும் முஸ்லிம்களின் ஒரு சிறு படை ஒரு மாபெரும் வல்லரசை எதிர்த்துச் சண்டையிட்டது. அரபியர்களின் உள்ளத்தில் முஸ்லிம்களைப் பற்றிய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. முஃதாவின் அருகிலுள்ள அரபியர்களுக்கு மட்டுமல்லாமல் வெகு தொலைவில் உள்ளவர்களுக்கும் கூட முஸ்லிம்களைப் பற்றிய அதே பாதிப்பை இது ஏற்படுத்தியது.

முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நன்மையையும் இதற்குப் பின் தன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அரபுக் கோத்திரங்கள், தன் கட்டுப்பாட்டை விட்டு விலகி, முஸ்லிம்களுடன் சேர்ந்து கொள்வதையும் கைஸர் மன்னனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதைத் தனது எல்லையை நெருங்கி வரும் ஆபத்தாக உணர்ந்தான். அரபியர்களுக்கு அருகிலிருக்கும் தனது ஷாம் நாட்டுக் கோட்டைகளை ஆட்டம் காண வைக்கும் ஒரு செயலாகக் கருதினான். முஸ்லிம்களின் இந்த எழுச்சி அழிக்க முடியாத அளவுக்கு வலிமைப் பெறுவதற்கு முன்னதாகவே அடக்கி அழித்துவிட வேண்டும் ரோம் நாட்டை சுற்றியிருக்கும் அரபு பகுதிகளில் முஸ்லிம்கள் கிளர்ச்சியை உண்டாக்குவதற்கு முன்னதாகவே அவர்களை ஒன்றுமில்லாமல் செய்துவிட வேண்டும் என அவன் எண்ணினான்.

முஃதா போர் முடிந்து ஒரு வருடம் ஆவதற்குள் தனது இந்த வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக பெரும் படையொன்றைத் திரட்டி, அதில் ரோமர்களையும் ரோமர்களின் ஆதிக்கத்தில் இருந்த கஸ்ஸான் கிளையைச் சேர்ந்த அரபியர்களையும் சேர்த்துக் கொண்டு தீர்க்கமான ஒரு போருக்குத் தயாரானான்.

மற்றொருபுறம் நபி (ஸல்) படையெடுத்துப் போருக்கு ஆயத்தமாக வந்து விட்டார்கள் என்ற செய்தியை ரோமர்களும் அவர்களது நண்பர்களும் கேட்டவுடன் திடுக்கமடைந்தார்கள். அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்வதற்கும் இஸ்லாமியப் படையைச் சந்திப்பதற்கும் துணிவின்றி தங்களது நாட்டுக்குள் பல திசைகளிலும் சிதறி ஓடிவிட்டனர். இஸ்லாமியப் படைக்கு அஞ்சி ரோமர்கள் ஓடிவிட்ட செய்தி முஸ்லிம்களுக்கு மேன்மேலும் புகழ் சேர்த்தது, அரபியத் தீபகற்பத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முஸ்லிம்களின் ராணுவ வலிமையை உயர்த்தியது. இதனால் அரசியல் ரீதியாக முஸ்லிம்களுக்குப் பெரும் பயன்களும் கிடைத்தன. ஒருக்கால் ரோமர்கள் வந்து போர் நடந்திருந்தால் கூட, இந்தளவு நன்மைகள் கிடைத்திருக்குமா? என்று சொல்ல முடியாது.

தபூக்கிற்கு அருகிலிருந்த அய்லா பகுதியின் தலைவர் யுஹன்னா இப்னு ரூஃபா தானாக முன்வந்து ஒப்பந்தம் செய்து கொடுத்ததுடன் ஜிஸ்யாவையும் நிறைவேற்றினார். மேலும், ‘ஜர்பா’ பகுதியினரும் ‘அத்ருஹ்’ பகுதியினரும் ஒப்பந்தம் செய்து ஜிஸ்யாவையும் வழங்கினர். நபி (ஸல்) ஒப்பந்தப் பத்திரத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தார்கள். இவ்வாறே மீனா பகுதி மக்களும் தங்கள் பகுதியில் விளையும் கனிவர்க்கங்களில் 1/4 பங்கை வழங்கி விடுவதாக சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அய்லாவின் தலைவருக்கு நபி (ஸல்) எழுதிக் கொடுத்த ஒப்பந்தமாவது:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மதின் புறத்திலிருந்தும் யுஹன்னா இப்னு ருஃபாவுக்கும் அய்லாவாசிகளுக்கும் வழங்கும் பாதுகாப்பு ஒப்பந்தமாகும் இது. கடலில் செல்லும் இவர்களது கப்பல்களுக்கும், பூமியில் செல்லும் இவர்களது பயணக் கூட்டங்களுக்கும் அல்லாஹ்வுடைய பாதுகாப்பும் முஹம்மதுடைய பாதுகாப்பும் உண்டு. மேலும், ஷாம் நாட்டிலும் இவர்களது கடல் பகுதியை சுற்றி வாழும் மக்களுக்கும் இந்தப் பாதுகாப்பு உண்டு. ஆனால், இவர்களில் யாராவது குழப்பம், கலகம் செய்தால் அவரது உயிர், பொருள் பாதுகாக்கப்படாது. அவரை அடக்குபவருக்கு அவரது பொருள் சொந்தமாகிவிடும். இவர்கள் தண்ணீருக்காக செல்லும் போது யாரும் தடுக்கக் கூடாது கடலிலோ தரையிலோ பயணிக்கும் போது யாரும் குறுக்கிடக் கூடாது.”

அடுத்து, இருபத்து நான்கு குதிரை வீரர்களுடன் தூமதுல் ஜந்தலின் தலைவர் உகைதிர் என்பவரை பிடித்து வருவதற்காக காலித் பின் வலீதை நபி (ஸல்) அனுப்பினார்கள். மேலும், “நீ அவரை சந்திக்கும் போது அவர் ஒரு மாட்டை வேட்டையாடிக் கொண்டிருப்பார்” என்றும் நபி (ஸல்) காலிதிடம் கூறினார்கள். காலித் (ரழி) உகைதின் கோட்டைக்கு அருகில் சென்று தாமதித்தார். அப்போது ஒரு மாடு பக்கத்திலிருந்த காட்டிலிருந்து வெளியேறி உகைதின் கோட்டைக் கதவை கொம்புகளால் உராய்ந்து கொண்டிருந்தது. உகைதிர் அதை வேட்டையாடி பிடிப்பதற்காகக் கோட்டைக்கு வெளியே வந்தார். அன்று பௌர்ணமி இரவாக இருந்தது. காலித் தனது படையுடன் சென்று உகைதிரை பிடித்து வந்து நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தார். உகைதிர் தனது உயிரைப் பாதுகாப்பதற்காக இரண்டாயிரம் ஒட்டகங்கள், நானூறு கவச ஆடைகள், நானூறு ஈட்டிகள், எண்ணூறு அடிமைகள் தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டார். மேலும், ஒவ்வோர் ஆண்டும் ஜிஸ்யா தருவதாகவும் ஒப்புக் கொண்டார். முன் சென்றவர்களுடன் ஒப்பந்தம் செய்தது போன்று நபி (ஸல்) இவருடனும் செய்து கொண்டார்கள்.

ரோமர்களை நம்பி வாழ்ந்த கோத்திரங்கள் எல்லாம் “இனி நம்முடைய பழைய தலைவர்களை நம்புவதில் பலனில்லை அந்தக் காலம் மலையேறி விட்டது இனி முஸ்லிம்களுக்குத்தான் நாம் பணிய நேரிடும்” என நன்கு புரிந்திருந்தனர். இவ்வாறே இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து விரிவாகி ரோம ராஜ்ஜியத்தைத் தொட்டது. பெரும்பாலான அரபு பகுதியிலுள்ள ரோம ஆளுநர்களின் ஆட்சி அதிகாரம் முடிவுக்கு வந்தது.

முஸ்லிம்கள் இனி நயவஞ்சகர்கள் நளினமாகவும் மிருதுவாகவும் இருக்க வேண்டுமென்ற தேவை இல்லாது போனது. அல்லாஹ்வும் இந்த நயவஞ்சகர்களுடன் கடுமையாக நடந்து கொள்ள வேண்டுமென சட்டங்களை இறக்கி வைத்தான். இவர்களின் தர்மங்களை ஏற்பதோ, இவர்களுக்காக ஜனாஸா தொழுவதோ, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவதோ, இவர்களின் அடக்கத்தலங்களுக்குச் செல்வதோ கூடாது என தடை செய்து விட்டான். பள்ளி என்ற பெயரில் சூழ்ச்சிகள் செய்யவும், அதனைச் செயல்படுத்தவும் அவர்கள் பயன்படுத்திய இடங்களைத் தகர்த்தெரியுமாறு கட்டளையிட்டான். மேலும், அவர்களின் தீய பண்புகளை விவரித்து பல வசனங்களையும் இறக்கி வைத்த காரணத்தால் அவர்கள் மிகுந்த இழிவுக்குள்ளானார்கள். இந்த வசனங்கள் நயவஞ்சகர்கள் யார் எனத் தெளிவாக மதீனாவாசிகளுக்குச் சுட்டிக்காட்டுவது போல அமைந்திருந்தது. முதலாவதாக. ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் இஸ்லாமை ஏற்கவும் அறியவும் மக்கள் அலை அலையாய் மதீனா நோக்கி வந்தனர். இரண்டாம் கட்டமான மக்கா வெற்றிக்குப் பின்போ இது பன்மடங்காகப் பெருகியது. மூன்றாம் கட்டமான தபூக் போருக்குப் பின் இவற்றையெல்லாம் மிகைக்கும் வகையில் எண்ணிலடங்கா மக்கள் கூட்டங்கூட்டமாக மதீனா வந்தனர்.

குறிப்புகள்

[தொகு]
  • ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம், ஃபத்ஹுல் பாரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. George F. Nafziger; Mark W. Walton (2003), Islam at War: A History, Praeger Publishers, p. 13
  2. "Muḥammad". The Oxford Encyclopedia of the Islamic World. (2009). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-530513-5. 
  3. Muir, William (10 August 2003). Life of Mahomet. Kessinger Publishing Co. p. 454. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7661-7741-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தபூக்_போர்&oldid=4099359" இலிருந்து மீள்விக்கப்பட்டது