தக்குவாறிம்போ
தக்குவாறிம்போ (Spanish: Tacuarembó) என்பது உருகுவை நாட்டில் அமைந்திருக்கும் தக்குவாறிம்போ ஒன்றியத்தின் தலைநகரமாகும்.
புவியியல்
[தொகு]றிவேரா ஒன்றியத்தின் தலைநகரமான றிவேராவிலிருந்து தென் மேற்கு திசையில் 113 கி.மீ தொலைவில் நெடுஞ்சாலை 390-க்கும் வழித்தடம் 5-க்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கின்றது தக்குவாறிம்போ. அறோயோ தக்குவாறிம்போ சிக்கோ என்ற கிளையாறு இந்நகரத்தின் வடதிசையில் ஓடிக் கொண்டிருக்கின்றது. கடந்த 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கீட்டின் படி, நாட்டின் எட்டாவது பெரிய நகரமாக இது விளங்குகின்றது.
வரலாறு
[தொகு]1831-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள், உருகுவையின் அதிபராகவிருந்த புருக்தூசோ றிவேரா என்பவரது ஆணைக்கிணங்க இந்நகரம் தோற்றுவிக்கப்பட்டது. இந்நகரத்தை நிர்மாணிக்கும் பணியை அதிபரின் தம்பியாரான கேணல் பெர்நபே றிவேரா என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
மாண்டேவிடியோ நகரத்திலிருந்து புறப்பட்ட கேணல் பெர்நபே றிவேரா தனது பணியாட்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரோடு மூன்று மாதப் பயணத்தின் பின் தக்குவாறிம்போதி ஆற்றங்கரையை அடைந்தார். குவாரணி மொழியில் தக்குவாறிம்போதி என்றால் நாணல் புற்களின் ஆறு என்று பொருள்படும். இந்த பகுதியை தேர்ந்தெடுத்த கேணல் றிவேரா, அதை பிரித்து பல குடியிருப்பு பகுதிகளை உருவாக்கினார். 1832, ஜனவரி 21-ஆம் நாள் கேணல் றிவேரா இந்த நகரத்துக்கு அடிக்கல் நாட்டியதோடு சான் புருக்தூசோ எனப் பெயரிட்டார் [1]