உள்ளடக்கத்துக்குச் செல்

தகவல் அறிதிறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகவல் அறிதிறன் (Information Literacy) என்பது ஒருவர் தமக்குத் தேவையான தகவல்களைத் தேவைப்படும் வேளையில் கண்டடைந்து வினைத்திறனுடன் பயன்படுத்திக் கொள்ளும் திறமையைக் குறிக்கின்றது எனலாம்.

வரையறைகள்

[தொகு]

தகவல் அறிதிறன் எனப்படுவது பரலாலும் பல விதங்களிலும் வரையறுக்கப்படுகின்றது. தேவைப்படும் தகவல்களைத் தேடியடைந்து, அவற்றை ஆராய்ந்து, பொருத்தமான விதத்தில் பயன்படுத்துவதற்கான திறமை எனச் சுருக்கமாக வரையறுக்கலாம்.

அமெரிக்க நூலகச் சம்மேளனத்தின் அறிக்கையொன்று தகவலின் தேவையை தேவைப்படுகையில் உணர்ந்து, தேவையான தகவல்களைக் கண்டடைந்து அவற்றின் தரமறிந்து பயன்படுத்திக் கொள்பவர் தகவல் அறிதிறனுடையவர் என வரையறுக்கிறது.

தகவல் அறிதிறன் என்பதை "மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் அவர்களது தனிப்பட்ட, சமூக, தொழில்ரீதியான, கல்விசார்ந்த இலக்குகளை அடைவதற்குத் தகவல்களை வினைத்திறனாக நாடவும் சீர்தூக்கிப் பார்க்கவும் பயன்படுத்தவும் உருவாக்கவும் வாய்ப்பளிக்க உதவும் ஒரு வழிவகை" என அலெக்சாந்திரியாப் பிரகடனம் வரையறுக்கிறது.

இக்கருத்துரு அண்மைக்காலத்தில் பிரபலமாகி வருகின்றதென்றாலும் பல்லாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் ஒன்றுதான். தகவல்களைப் பெற நூலகங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தும் திறமையே ஆரம்பத்தில் அடையாளங் காணப்பட்டதெனலாம். அவ்வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நூலக வழிகாட்டற் பயிற்சிநெறிகள் தகவல் அறிதிறனையும் கற்பித்தன என்கின்றனர் ஒருசாரார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே இக்கருத்துரு உருவானதென்கின்றனர் இன்னொரு சாரார். Patricia Knapp (1956), Ernest Roe (1965) போன்ற பலரும் நூலகப் பயன்பாடு தொடர்பிலானதாக குறிப்பிடத்தக்க கருத்துக்களைத் தெரிவித்து வந்த போதிலும் 1974 இல் Paul Zurkowski என்பவரே தகவல் அறிதிறன் என்ற பதத்தை முதன்முதலில் பயன்படுத்தினார். "உருவாகிவரும் தகவற் சமுதாயத்தில் போட்டியிடவும் நிலைக்கவும் அனைவரும் தகவல் அறிதிறனுள்ளவர்களாக இருக்க வேண்டும்" என்று அவர் தனது ஆய்வுக் கட்டுரையொன்றில் குறிப்பிட்டார்.

தகவல் அறிதிறனானது மனிதர் தகவல், தொடர்பாடற் தொழினுட்பத்தை வினைத்திறனுடன் பயன்படுத்த மிகவும் அத்தியாவசியம் எனக் கருதப்படுகிறது. படங்கள், ஒலி, தகவல் ஆகியனவற்றின் உருவாக்கம், பரிமாற்றம், பயன்படுத்தல், சேமித்தல் போன்றவற்றை கணினியும் இணையமும் கையடக்கக் கம்பியில்லாச் சாதனங்களும் பெருமளவில் மாற்றியமைத்திருக்கின்றன என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதேநேரம் உலக அறிவுச் சமுதாயத்தின் முழுப்பயனை நாடுகளும், நிறுவனங்களும், மனிதர்களும் பெற கணினி, ஊடகத் தொழிநுட்பங்களை மட்டும் கற்றல் போதாது என்பதும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இந்த எண்ணிய உலகின் சவால்களை எதிர்கொள்ள தொழிநுட்பத்தை விளங்கிக் கொள்வது மட்டும் போதாது. பலதரப்பட்டதும் வினைத்திறன்மிக்கதுமான புதிய தொழிநுட்பங்களை வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தித் தகவல்களைத் தேடிப் பெற்று, ஒழுங்குபடுத்தி, பகுப்பாய்வு செய்து, சீர்தூக்கிப் பார்த்துப் பின்னர் அவற்றை குறித்த முடிவெடுத்தல்களிலும் பிரச்சினை தீர்த்தலிலும் பயன்படுத்தவும் ஒவ்வொருவரும் கற்றக் கொள்வதும் அவசியமானதாகும்.

படிநிலைகள்

[தொகு]

தகவல் அறிதிறன் என்பது பலவிதமாக வரையறுக்கப்படுவது போலவே தகவலறிதிறனின் படிநிலைகளும் விதமாக வரையறுக்கப்படுகின்றன. யுனெஸ்கோ வெளியிட்ட Understanding Information Literacy: A Primer என்ற நூல் பதினொரு படிநிலைகளைக் கொண்டதாக தகவல் அறிதிறன் வாழ்க்கை வட்டத்தினை வரையறுக்க்கிறது.

  1. எதிர்நோக்கும் சிக்கல் அல்லது தேவையை நிவர்த்தி செய்யத் தகவல் தேவை என்பதை உணர்தல்.
  2. தேவையைப் பூர்த்தி செய்ய, பிரச்சினையைத் தீர்க்க அல்லது முடிவொன்றை எடுக்கத் தேவையான தகவல்களைத் துல்லியமாக அடையாளங் காணுதலும் வரையறுத்தலும்.
  3. தேவையான தகவல்கள் ஏற்கனவே இருக்கின்றனவா இல்லையா என்பதைத் தீர்மானித்தல்
  4. தகவல்கள் இருக்கின்றனவென அடையாளங் காணப்பட்டால் அவற்றைத் தேடியடைதல்
  5. தகவல்கள் இல்லையெனின் இல்லையெனின் இல்லாத தகவல்களை உருவாக்குதல் அல்லது உருவாக்கச் செய்தல்
  6. பெற்றுக் கொண்ட தகவல்களை முழுமையாக விளங்கிக் கொள்ளுதல், விளங்காவிடின் தேவையான உதவிகளை எங்கிருந்து பெறுவதென்பதை அறிந்திருத்தல்
  7. தகவல்களை ஒழுங்குபடுத்தல், பகுப்பாய்வு செய்தல், விளக்குதல், சீர்தூக்கிப் பார்த்தல். இதனுள் தகவல் மூலத்தின் நம்பகத்தன்மையையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
  8. தகவல்களை ஏனையோருக்கு பொருத்தமானதும் பயன்படுத்தக்கூடியதுமான வடிவங்களிலும் வழிமுறைகளிலும் கொடுத்தல்
  9. தகவலை தேவையை நிறைவேற்ற, பிரச்ச்சினையைத் தீர்க்க அல்லது முடிவெடுக்கப் பயன்படுத்துதல்.
  10. எதிர்காலத் தேவைகளுக்காக தகவல்களைப் பாதுகாத்தல், களஞ்சியப்படுத்தல், மீளப்பயன்படுத்தல், பதிவுசெய்தல், ஆவணப்படுத்தல்
  11. தேவையற்ற தகவல்களை நீக்குதலும் தேவையானவற்றைப் பாதுகாத்தலும்.

விரிவான விளக்கமளித்தலை நோக்கமாகக் கொண்டே இப்படிநிலைகள் வரையறுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இவற்றைச் சுருக்கியும் விரித்துரைத்தும் மேலும் சில அம்சங்களை உள்ளடக்கியவையுமாகவும் என பலரால் பலவிதமான வரையறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

உசாத்துணை

[தொகு]
  1. Understanding Information Literacy: A Primer by Forest Woody Horton, Jr (யுனெஸ்கோ, 2007)
  2. Australian and New Zealand Information Literacy Framework (Australian and New Zealand Institute for Information Literacy, 2004)
  3. Guidelines on Information Literacy for Lifelong Learning (IFLA, 2006)
  4. The Importance of Information Literacy by Ilene F. Rockman
  5. www.ala.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகவல்_அறிதிறன்&oldid=2228067" இலிருந்து மீள்விக்கப்பட்டது