உள்ளடக்கத்துக்குச் செல்

டோட்டோசான்: ஜன்னலின் அருகே குழந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோட்டோ-சான்: ஜன்னலின் அருகே குழந்தை
நூலாசிரியர்டெட்சுகோ குரோயாநாகி
உண்மையான தலைப்புடோட்டோ-சான்
மொழிபெயர்ப்பாளர்டொரோத்தி பிரிட்டன்
நாடுஜப்பான்
வகைசுயசரிதை
வெளியீட்டாளர்கொடான்ஷா
வெளியிடப்பட்ட நாள்
1981
ஆங்கில வெளியீடு
1984
ஊடக வகைஅச்சு
பக்கங்கள்232
ISBN978-4-7700-2067-3

டோட்டோ-சான்: ஜன்னலில் ஒரு் சிறுமி (Totto-Chan: The Little Girl at the Window) என்ற புத்தகம் உலகப்புகழ்பெற்ற ஒன்றாகும். இப்புத்தகம் சுமார் 45 இலட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை புரிந்தது. இப்புத்தகத்தை டெட்சுகோ குரோயாநாகி என்பவர் எழுதியிருந்தார். இவரின் டோமோயி பள்ளி அனுபவம்தான் இந்த புத்தகம். இவர் சப்பான் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக வளர்ந்து புகழ்பெற்றவர். தன்னுடைய இத்தகைய வளர்ச்சிக்கு முழுகாரணமாய் தனது டோமோயி பள்ளியை குறிப்பிடுகிறார்.[1] பழமொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்ட இந்நூலானது தமிழில் சு. வள்ளிநாயகம், சொ. பிரபாகரன் ஆகியோரால் மொழி பெயர்க்கப்பட்டது. தேசிய புத்தக தொண்டு நிறுவனம் சார்பாக முதன்முதலாக வெளிவந்தது.

டோமோயி பள்ளி

[தொகு]

சந்தோசக் கூச்சலிட்டபடி அம்மா! நான் ஸ்கூலுக்குப் போறேன் என்று தினமும் பள்ளியை நோக்கி ஓடும் குழந்தை இங்கு அரிதுதான். அப்படியொரு நிகழ்வு நமக்கு ஆச்சர்யம்தான். பள்ளிக்கு போகமாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளை இழுத்து வந்து பள்ளியில்விடும் காட்சி நமக்கு என்றுமே புதிதல்ல.ஏனென்றால் பள்ளிக்கூடங்கள் குழந்தைகளின் எல்லாவித உணர்வுகளையும் புரிந்து கொண்டு செயல்படும் இடமல்ல.குழந்தைகளின் மகிழ்ச்சியை மட்டும் விரும்பும் இடமல்ல.மாறாக பள்ளிக்கூடங்கள் என்பது எதிர்கால சந்தைக்கு ஏற்றாற்போல் உருவாக்கித் தள்ளும் தொழிற்சாலை அது.இந்நிலையிலே இப்படி நமக்கான பள்ளி சார்ந்த அனைத்து கணிப்புகளையும்,கற்பனைகளையும் அடித்து நொறுக்கியதாய் இருந்தது ஜப்பானில் இருந்த டோமோயி ஹாகுன் பள்ளி வெறும் ஐம்பது குழந்தைகளோடு இயங்கிய இந்த டோமோயி பள்ளியானது சுதந்திரம்,மகிழ்ச்சி,வாழ்வோடு இணைந்தக் கற்றல் என்பதை தாண்டி கற்பவர்,கற்பிப்பவரின் சுயமரியாதைக்கும்,விருப்பத்திற்கும் முக்கியத்துவம் தந்த இடமாய் நின்றது . பழைய இரயில் பெட்டிகள்தான் பள்ளியின் வகுப்பறை என்று சொல்லும்போது ஆச்சர்யமும் ஆர்வமும் நம்மைத் தொற்றிக்கொள்ளதான் செய்யும். அங்குதான் டோட்டோசான் என்கிற சிறுமி படிக்கச் சென்றாள்.

டோட்டோ-சான்

[தொகு]

டோட்டோ-சான் எப்பொழுதுமே துறுதுறுவென இருப்பவள். தன் வீட்டின் பெரியவர்களையும் ஆசிரியர்களையும் எந்நேரமும் கேள்விகளால் துளைப்பவள். நம்மிடம் பேசுவதற்கும், கேட்பதற்கும் ஆயிரம் காரணங்கள் அவளிடம் இருந்தது. எல்லோரிடமும் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டே அணுகுவாள். இப்படிப்பட்டவளைத்தான் பழைய பள்ளியொன்று தகுதியிழப்பு செய்து அவளை வெளியேற்றியது. காரணம், எப்பொழும் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறாள். வகுப்பறையில் அவளுக்கான சிறிய மேசை ட்ராயரை சர்சர் என்று சத்தமிடும்படி இழுத்து தொந்தரவு செய்கிறாள். வீதி இசைக்கலைஞர்களைக் கண்டால் வகுப்பின் ஜன்னலோரம் அழைத்து அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறாள். வகுப்பறையில் இப்படி பல இடையூறுகளை அளித்தபடி இருக்கிறாள் என்று அடுக்கடுக்காய் பல குற்றச்சாட்டுகள்.ஆயினும் அந்த சிறுமி இவை தவறு என்பதையே அறியாதவள். இதனாலே பலநேரங்களில் வகுப்பறையின் ஏதோ ஒரு தவறுக்காக வெளியே நிறுத்தப்பட்டிருந்தவள்.

இந்த நிலையில் அவள் டோமோயி என்கிற தனது புதிய பள்ளிக்கு செல்கிறாள். பள்ளிக்குள் நுழைகையிலே அவளுக்கு அங்கு எல்லாமும் புதியதாய் படுகிறது. அதிகமான மரங்கள், பூக்கள் என அது சிறிய தோட்டமாய் காட்சியளித்தது. அதைவிட பெரிய ஆச்சர்யம் அவளுக்கு அங்கு காத்திருந்தது. பழைய இரயில் பெட்டிகள் அங்கு சம்பந்தமில்லாமல் நிற்பதாய் அவளுக்குத் தோன்றியது. அந்த பழைய இரயில் பெட்டிகள்தான் வகுப்பறை என்பதை அவளால் நம்பத்தான் முடியவில்லை. இன்னும் எத்தனையோ ஆச்சர்யங்கள் அவளுக்காய் அங்கு காத்திருந்தன.

டோமோயி பள்ளியின் ஒரு சிறு அறையில் தலைமையாசிரியர் கோபாயாஷியை டோட்டோசான் தன்தாயோடு சேர்ந்து சந்தித்தாள். அவள் வாழ்வில் என்றும் மறக்கமுடியாத அனுபவத்தை அது கொண்டிருந்தது. டோட்டோசானிடம் அன்பாய் பேசிய தலைமையாசிரியர் அதன்பிறகு டோட்டோசான் என்கிற அந்த சிறுமி பேசியதை ஆர்வம் குறையாமல் கேட்டுக்கொண்டே இருந்தார். டோட்டோசான் தனது பழைய பள்ளி அனுபவம், வீட்டின் அனுபவம், இன்னும் சில கேள்விகள் என தனக்கு தோன்றியதையெல்லாம் அந்த முதல் சந்திப்பில் மரியாதைக்குரிய கோபாயாஷிடம் பேசி இருந்தாள். அந்த பேச்சு காலை பள்ளி துவக்கத்திலிருந்து மதிய உணவு நேரம்வரை நீடித்தது. இவ்வளவு பொறுமையாய் தன்பேச்சை யாரும் கேட்டதில்லை என்பதை அவள் அறிவாள்.அன்றிலிருந்தே தலைமையாசிரியர் கோபாயாஷிடம் மிகுந்த மரியாதையையும், அன்பையும் கொண்டிருந்தாள்.

கோபாயாஷி என்கிற தலைமையாசிரியர்

[தொகு]

கோபாயாஷி குழந்தைகளின் உள்ளம் அறிந்தவராக, பொறுமையும், அன்பும் கொண்டவராக இருந்தார். குழந்தைகள் அனைவரும் உள்ளார்ந்த நல்ல இயல்புகளுடன்தான் பிறக்கிறார்கள். அவர்கள் வளரும் சூழலும் பெரியவர்களின் தாக்கமும் குழந்தைகளின் உள்ளார்ந்த நல்லியல்புகளை சிதைத்துவிடுகின்றன எனத் திடமாய் நம்பியவர் அவர். குழந்தைகள் தங்களது தனித்தன்மையுடன் வளர அனுமதிக்க வேண்டும் எனக்கருதினார்.

டோமோயி பள்ளியை கோபாயாஷி அவர்கள் குழந்தைகளின் கனவு இல்லம் போலவே அமைத்திருந்தார்.அங்கு படிக்கும் குழந்தைகள் தாங்கள் படிக்கும் நேரத்தையும்,பாடத்தையும் தேர்வு செய்தனர்.அவர்களுக்கு அங்கு எப்படி இருக்க விருப்பமாய் இருக்கிறதோ அப்படியே அங்கு இருக்கலாம்.எந்தவித கடுமையான விதிமுறைகளையும் அங்கு அவர்கள் பின்பற்ற வேண்டியதில்லை.அதனால் அச்சுறுத்தல்களின்றி, அடக்குமுறைகளின்றி அங்குள்ள குழந்தைகள்,குழந்தைகளாகவே வாழ அனுமதிக்கப்பட்டிருந்தது. எல்லாவற்றிலுமே அங்கு சுதந்திரம்தான்.எனவே அங்குள்ள குழந்தைகள் பள்ளியின் நடைமுறைகளில் தங்களை முழுவதுமாய் அற்பணித்துக்கொண்டனர்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களுக்கு புதுப்புது அனுபவங்கள் கிடைத்துக்கொண்டேயிருந்தன.தங்களது வீடுகளில் தாங்கள் பெற்றுவந்த அனுபவங்களை நெடுநேரம் கூறுமளவிற்கு டோமோயி குழந்தைகளோடு ஒன்றியிருந்தது. கற்றலானது தங்களுக்கு சம்பந்தமில்லாத ஒன்றை திணித்துவிட்டதாய் அவர்கள் அங்கு எதையும் உணரவில்லை. ஒருநாள் அங்கு தோட்டத்தில் வேளை பார்த்த விவசாயி ஒருவர் விவசாயம் பற்றி பாடம் நடத்த குழந்தைகள் முன் நிற்கின்றார்.இவ்வளவு காலம் அலட்சியமாய் கடந்துவந்த விவசாயி ஒருவர் வகுப்பிற்குள் நுழைந்து விவசாயம் குறித்து அனைத்தும் அறிந்தவராய் பாடம் நடத்துகாறார்.அங்குள்ள குழந்தைகள் மனதில் உயர்வாய் பதிகிறார்.இத்தகைய நெகிழ்வுத்தன்மை கொண்டு டோமோயி விளங்கியது. சுதந்திரமான பாடத்திட்டத்தையும் கற்பித்தலையும் கொண்டிருந்தது.

கடலிலிருந்து கொஞ்சம் மலையிலிருந்து கொஞ்சம்

[தொகு]

அப்பள்ளி குழந்தைகளின் மதிய உணவில்கூட கவனம் கொண்டிருந்தது டோமோயி.தங்களது உணவில் குறைவில்லாத சத்துகளை கொண்டிருக்க பெற்றோர்களிடம் கடலிலிருந்து கொஞ்சம், மலைகளிலிருந்து கொஞ்சம் என்று அறிவுறுத்தப்பட்டது.இதில் ஒன்று குறைவாய் குழந்தைகள் உணவை எடுத்து வந்தாலும் பள்ளியே அத்தகைய உணவுகளை வழங்கி சரிசெய்துகொண்டது.உணவில்கூட ஏற்றத்தாழ்வை கோபாயாஷி விரும்பவில்லை.

மாலைவேளையில் காலார நடக்கும் வாய்ப்பை பெற்றிருந்தனர்.இந்த குட்டி களப்பயணத்தில் அவர்கள் கற்றுக்கொண்ட அனுபவம் அதிகம்.ஒருநாள் அக்குழந்தைகளுக்கு தைரியப் பரிட்சை ஒன்று வைக்கப்பட்டது.அருகில் இருந்த மண்டபத்திற்குள் இருவர் இருவராக தனியே சென்று வரவேண்டும்.மண்டபத்துக்குள் பேய் வேடமிட்ட சிலகுழந்தைகள் இருப்பார்கள். மண்டபத்திற்குள் முழுவதுமாய் சென்று அழாமல் திரும்பவர்களுக்கு பரிசு.போட்டியில் விருப்பமில்லாதவர்கள்,பயப்படுபவர்கள் மட்டும் விலகிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த துணிச்சலான போட்டியில் பங்குபெற்றவர்களில் சிலர் பாதிவழியிலிருந்து பயந்துகொண்டு திரும்பினர்.சிலர் முழுவதுமாய் சென்று பேயை பார்க்காமலே தனிமை பயத்தில் அலரியடித்துக்கொண்டு ஓடிவந்தனர். இங்கு சில பேய்களும்கூட பயந்து நின்று அழுத கதை எல்லோரையும் சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்தது.இந்த தைரியப்பரிட்சை நிகழ்வானது எல்லோரின் மனதிலும் ஆழமாய் என்றுமே பதிந்து நின்றது.

மேலும் பள்ளியிலே கூடாரம் அமைத்து தங்கியது,பல்வேறு இடங்களுக்கு கூட்டாக சேர்ந்து களப்பயணம் மேற்கொண்டது,விரும்பிய கதைகள் பேசியது, விரும்பியதை பாடி மகிழ்ந்தது,இசையுடன் கூடிய உடற்பயிற்சி,புதுமையான விளயாட்டுகள் என எல்லாமுமே அங்கு படித்தவர்களுக்கு உற்சாகம் குறையாத அனுபவத்தை தந்துவிட்டு நின்றது டோமோயி பள்ளி. இப்படி எத்தனையோ நல்ல முயற்சிகளைக் கொண்டு குழந்தைகளின் உள்ளங்களை கவரந்துநின்ற இப்பள்ளியானது அங்கு படித்த குழந்தைகளின் மனதில் ஆழபாய் பதிந்து தங்கள் வாழ்நாட்களில் நினைத்து நினைத்து பெருமைப்பட்டுக்கொள்ளும் வகையில் இருந்தது என்றால் அது மிகையல்ல. இத்தகைய குழந்தைகளின் கனவு பள்ளியனது ஒரு கொடூரமான குண்டுவெடிப்பு ஒன்றில் 1945 இல் தகர்க்கப்பட்டது. இச்செய்தி அறிந்ததும் அங்கு படித்த குழந்தைகள் மட்டுமல்லாமல் அப்பள்ளியின்பால் அக்கறைகொண்ட அனைவரையும் கலங்க வைத்தது.மீளாத் துயரத்திற்கு இட்டுச்சென்றது. மீண்டும் அதுபோன்ற பள்ளியை தலைமையாசிரியர் கோபாயாஷி துவங்க ஆசைப்பட்டும் அது நிறைவேறாமல்போனது பெரும் வருத்தமளிக்கக்கூடிய ஒன்று.

நிறைவு

[தொகு]

இத்தகைய பெருமைமிகு டோட்டோசான் என்கிற இப்புத்தகத்தை டோமோயி பள்ளியின் குழந்தையும் பின்னாளில் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான டெட்சுகோ குரோயாநாகி நமக்காக எழுதி வழங்கினார். இந்நூல் பலநாடுகளின் கல்விமுறைகளில் கற்பித்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சான்றுகள்

[தொகு]
  1. Otake, Tomoko (September 16, 2000). "UNICEF ambassa dor blames politics for plight of children". www.japantimes.co.jp. பார்க்கப்பட்ட நாள் 2008-11-06.