டேம் 999

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேம் 999
Dam 999
இயக்கம்சோகன் ராய்
தயாரிப்புபிஸ்டிவி நெட்வர்க்
கதைரொப் டோபின்
சோகன் ராய்
இசைஊசெப்பாச்சன்
நடிப்புஅஷிஷ் வித்யார்த்தி
ஜோசுவா பிரெட்ரிக் சிமித்
ரஜித் கபூர்
வினய் ராய்
விமலா ராமன்
லின்டா ஆர்செனியோ
மேகா பர்மன்
ஜால பிக்கரிங்
ஜினீத் ராத்
ஒளிப்பதிவுஅஜயன் வின்சென்ட்
படத்தொகுப்புசுரேஷ் பாய்
விநியோகம்வார்னர் பிரதர்ஸ்
வெளியீடுநவம்பர் 25, 2011 (2011-11-25)
நாடுஇந்தியா
ஐக்கிய அரபு அமீரகம்
மொழிஆங்கிலம்

டேம் 999 (Dam 999, அணை 999) என்பது 2011 இல் வெளிவந்த ஒரு ஆங்கிலத் திரைப்படம். கேரளத்தைச் சேர்ந்த கடற்படை மாலுமியாக இருந்து திரைப்பட இயக்குநராக மாறிய சோகன் ராய் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஊழல்வாதியான மேயர் அரசியல் ஆதாயத்துக்காக வலுவற்ற அணையைக் கட்டுகிறார். அதனால் ஏற்படும் அணையின் உடைப்பால் ஏராளமான பேர் உயிர் இழப்பதையும், பழைய அணைகள் குறித்து விழிப்புணர்வையும் மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2011 நவம்பர் 24 அன்று வெளியான இப்படம், இந்தியாவில் நவம்பர் 25 அன்று வெளியானது. இத்திரைப்படம் ஆங்கிலம் தவிர, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

தடை கோரிக்கை[தொகு]

 • முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான "டேம் 999' திரைப்படத்தைத் திரையிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.[1]
 • கேரள அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்ட 'டேம் 999' என்ற திரைப்படத்தை இந்தியாவில் வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்..[2]
 • டேம் 999 என்ற படம் மூலம் விஷமப் பிரச்சாரத்தை முழுவீச்சில் கட்டவிழ்த்துள்ளது கேரளா. தமிழக மக்களுக்கு இதன் மூலம் பூச்சாண்டி காட்டப் பார்க்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணை உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டது. இன்னும் 100 ஆண்டுகள் வலுவாக நிற்கும் அந்த அணைக்கு எதிரான இந்த விஷமப் படம் வெளியாக விட மாட்டோம். இதனை முழுவீச்சில் மதிமுக எதிர்க்கும்," என்றார் வைகோ.[3]

ஊடகங்களில் டேம் 999[தொகு]

டேம் 999 திரைப்படம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின் சுருக்கம்.

 • ஊழல்வாதியான மேயர் ஒருவர் அரசியல் ஆதாயத்துக்காக கட்டும் வலுவற்ற அணை உடைவதால் ஏற்படும் பாதிப்புகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள டேம் 999 படம், தன் சொத்துக்களை விற்று மக்களின் நலன் காத்த பென்னி குக்கை கேவலப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. - தினமலர் [4]

இயக்குனர் கருத்து[தொகு]

டேம் 999 படத்தின் இயக்குனர் சோகன் ராய் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக மக்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது 'டேம் 999' திரைப்படம், தமிழக மக்களின் கலாசாரத்தையோ, உணர்வுகளையோ புண்படுத்தக்கூடிய படம் அல்ல. 'டேம் 999' முழுக்க முழுக்க உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கபட்ட படம். சீனாவின் பான்கியூ அணை 1975-ல் உடைந்ததால் ஏற்பட்ட பேரழிவில் சுமார் 2,50,000 பலியான சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. மக்கள் பலரின் வாழ்க்கையை ஓர் அணை பேரழிவின் மூலம் எப்படி மூழ்கடித்தது என்பதையே இந்தப் படம் எடுத்துரைக்கிறது. மாறாக, இந்தியாவில் உள்ள அணைகளைப் பற்றியோ, குறிப்பாக தமிழகத்தில் உள்ள அணைகளைப் பற்றியோ சொல்லவில்லை. தமிழக மக்கள் மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. அவர்களது கலாசாரத்தையும், உணர்வுகளையும் பாதிக்கும் எந்த செயலலிலும் எனக்கு உடன்பாடு இல்லை. எனது 'டேம் 999' படத்தில், தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழகத்துக்கோ தவறான எண்ணம் ஏற்படும் வகையில் எந்த ஒரு வசனமும் காட்சியும் இடம்பெறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.[5]

தமிழ்நாட்டில் திரையிடத் தடை[தொகு]

முல்லைப் பெரியாறு அணை உடைவதாக பொருள் கொண்டு "டேம் 999' தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் இந்தியாவில் நவம்பர் 25 திரையிடப்படுகிறது. இதையடுத்து "டேம் 999' படத்துக்குத் தடை விதித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி வியாழக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணையை நேரடியாகக் காண்பிக்கா விட்டாலும், கேரள மாநிலம் ஆலப்புழையில் படமாக்கப்பட்ட காட்சிகள், முல்லைப் பெரியாறு அணையை நினைவுபடுத்துவதாக உள்ளது. படத்தின் தலைப்பு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைப் பற்றி மறைமுகமாக எடுத்துக் கூறி, முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயம் உள்ளதாக, மக்களிடையே பீதி ஏற்படுத்தி தமிழக-கேரள மக்களிடையே வேற்றுமையை உருவாக்கவும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. எனவே, "டேம் 999' படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[6]

இந்தியா முழுவதும் தடை செய்யக் கோரிக்கை[தொகு]

முல்லைப் பெரியாறு அணை உடைவதுபோல் காட்டும் "டேம் 999' படத்தைத் திரையிட தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இந்தப் படம் இதர மாநிலங்களில் திரையிடப்பட்டாலும், அது தமிழகத்தைப் பாதிக்கும் வகையில் இருக்கும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர். இதனால் நாடு முழுவதும் டேம் 999 படத்துக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 • அதிமுக மக்களவைக் கட்சித் தலைவர் தம்பிதுரை, திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் ஆகியோர் இந்தப்படத்திற்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.[7]
 • டேம் 999 படத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் வியாழக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.[8]

இதையும் பார்க்க[தொகு]

முல்லைப் பெரியாறு

மேற்கோள்கள்[தொகு]

 1. "டேம் 999' ஆங்கிலப் படம் - தடை விதிக்க வேண்டும்: வைகோ (தினமணி செய்தி)
 2. 'டேம் 999' படம் வெளியானால் பொது அமைதி பாதிக்கப்படும்: ராமதாஸ் - தினமணி செய்தி[தொடர்பிழந்த இணைப்பு]
 3. 'தட்ஸ்தமிழு'க்கு வைகோ சிறப்புப் பேட்டி
 4. பென்னி குக்கை கேவலப்படுத்தும் “டேம் 999” - தினமலர் செய்தி
 5. "'டேம் 999'-ஐ தமிழக தலைவர்களுக்கு திரையிட்டு காட்டத் தயார்: இயக்குனர் (விகடன் செய்தி)". 2011-11-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-11-23 அன்று பார்க்கப்பட்டது.
 6. "டேம் 999' படத்துக்கு தமிழகத்தில் தடை (தினமணி செய்தி)
 7. "டேம் 999' படத்துக்கு நாடு முழுவதும் தடை: கட்சிகள் வலியுறுத்தல் (தினமணி செய்தி)
 8. டேம் 999 தடை: அம்பிகா சோனிக்கு ஞானதேசிகன் கடிதம் (தினமணி செய்தி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேம்_999&oldid=3590151" இருந்து மீள்விக்கப்பட்டது