ஜூன்கோ டபெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜப்பானில் பிறந்த ஜூன்கோ டாபி (Junko Tabei) 10வயதாக இருக்கும் போதே மலையேறும் பயிற்சியில் சேர்ந்தார். ஜப்பானில் உள்ள நாசுமலை சிகரத்தில் ஏறுவதற்கு பயிற்சி பெற்றார். டோக்கியோ அருகில் உள்ள ஷோவா பெண்கள் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பட்டம் பெற்றார். படிக்கும் போதே மலையேறும் கிளப் ஒன்றில் உறுப்பினராக சேர்ந்தார். 1969ம் ஆண்டில் பெண்கள் மலையேறும் கிளப் தொடங்கினார். இதற்கு ஜப்பான் பெண்கள் மலையேறும் கிளப் என்று பெயரிட்டார். திருமணத்துக்கு பின்னர் கணவருடன் இணைந்து பல சிகரங்களில் மலையேறும் பயிற்சிகளை மேற்கொண்டார். ஜப்பானில் உள்ள புஜி மலை உள்ளிட்ட சில உயரமான சிகரங்களில் ஏறி பயிற்சி பெற்றார். சுவிஸ் ஆல்ப் மலை சிகரங்களில் உள்ள மாட்டர்ஹார்னிலும் மலையேறும் பயிற்சி பெற்றார். பல பயிற்சிகளின் காரணமாக 1972ம் ஆண்டு ஜப்பானின் மிகச்சிறந்த மலையேறும் பெண் பயிற்சியாளர் என்ற பெயரை பெற்றார். இதையடுத்து ஜப்பானில் இருந்து வெளிவரும் யோமியுரி நாளிதழ் மற்றும் நிகான் தொலை காட்சி ஆகியவை இணைந்து ஜப்பானில் உள்ள பெண்கள் மலையேறும் குழுவை எவரஸ்ட் சிகரத்துக்கு அனுப்ப முடிவு செய்தன. ஜூன்கோ டாபி உட்பட 15 பெண்களை தேர்வு செய்தனர். இதற்காக அவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் அளிக்கப் பட்டன. 1975ம் ஆண்டின் தொடக்கத்தில் காத்மாண்டுவுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு உள்ளூரை சேர்ந்த 9 பேரை வழிகாட்டிகளாக அழைத்துக்கொண்டனர். 1953ஆம் ஆண்டு எவரஸ்ட் சிகரத்தை அடைந்த எட்மண்ட் இல்லரி, டென்சிங் நோர்கே ஆகியோர் சென்ற வழியில் பெண்கள் குழுவினர் எவரஸ்ட் சிகரத்தை நோக்கி சென்றனர். மே மாதம் எவரஸ்ட் சிகரத்தில் 6 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தை அடைந்து அந்த பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். அப்போது அந்த பகுதியில் தீடீரென பனிப்பாறைகள் சரிந்தன. எல்லா பெண்களும் பனிப்பாறைக்கு அடியில் புதைந்து போயினர். ஜூன்கோ டாபியும் சுயநினைவை இழந்து விட்டார். அந்த சமயத்தில் ஒரு வழிகாட்டி ஜூன்கோ டாபி உள்ளிட்ட பெண்களை மீட்டார். அதன் பின்னர் 12 நாள் கழித்து ஜூன்கோ டாபி மட்டும் 1975ம் ஆண்டு இதே நாளில் எவரஸட் சிகரத்தை அடைந்தார். இதைதொடர்ந்து மேலும் பல சாதனைகளை செய்தார். இப்போது 61வயதாகும் இவர் வயதுகாரணமாக மலையேறும் சாதனைகளை குறைத்துக்கொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூன்கோ_டபெய்&oldid=2805907" இலிருந்து மீள்விக்கப்பட்டது