ஜான் ஷெப்பர்ட் பேரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் ஷெப்பர்ட் பேரோன்
பிறப்புஜான் அட்ரியன் ஷெப்பர்ட் பேரோன்
(1925-06-23)23 சூன் 1925
ஷில்லாங்க், இந்தியா
இறப்பு15 மே 2010(2010-05-15) (அகவை 84)
இன்வெர்னெசு, ஸ்காட்லாந்து, பிரித்தானியா
தேசியம்பிரித்தானியர்
அறியப்படுவதுதன்னியக்க வங்கி இயந்திரம்ஏ டி எம்

ஜான் ஷெப்பர்ட் பேரோன் (John Adrian Shepherd-Barron, 23 ஜூன் 1925 – 15 மே 2010) ஏ.டி. எம் எனப் பரவலாக அறியப்படும் தன்னியக்க வங்கி இயந்திரம் அல்லது தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர். பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.

இளமை[தொகு]

ஜான் ஷெப்பர்ட் பேரோன் இந்தியாவின் அசாம் மாகாணத்தின் சில்லாங் (தற்போதைய மேகாலயாவில் உள்ளது) என்ற இடத்தில் 1925, ஜூன் 23-ஆம் நாள் இந்திய-பிரித்தானியப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை 'வில்பிரெட் பெரோன்' ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். கிழக்கு வங்காளத்தின் (தற்போதைய வங்காள தேசம்) சிட்டகொங் துறைமுகப் பகுதியில் தலைமைப் பொறியாளராக இருந்தார். பின்பு பிரித்தானிய அரசாங்கத்தின் தலைமைப் பொறியாளராக உயர் பதவியில் இருந்தார். தாய் டோரத்தி ஒலிம்பிக்கில் புகழ்பெற்ற ஓர் டென்னிசு விளையாட்டு வீராங்கனையாவார்.[1] இவர் விம்பிள்டன் பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் பட்டம் வென்றாவராவார். ஷெப்பர்டுக்கு 3 மகன்கள், 6 பேரப்பிள்ளைகள் உள்ளனர்

கல்வி[தொகு]

ஜான் ஷெப்பர்ட் பேரோன் இங்கிலாந்தின் ஸ்டோவ் பள்ளியிலும், எடின்பர்க் பல்கலைக்கழகத்திலும் பின்பு கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிடி கல்லூரியிலும் படித்தார். இரண்டாம் உலகப் போரின்போது 159 வது பாராசூட் படைப் பிரிவில் பணியாற்றினார்.[2]

தன்னியக்க காசளிப்பு இயந்திரம்[தொகு]

ஒருமுறை வங்கியில் இருந்த தனது பணத்தை எடுக்க முடியாமல் தடுமாறியபோது ஷெப்பர்டுக்கு மிகவும் வேதனை உண்டானது. வங்கியின் வேலை நேரம் முடிந்து விட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. தன்னுடைய பணத்தை தான் விரும்பிய நேரத்தில் எல்லாம் எடுப்பதற்கு ஒரு வழி இருந்தால் என்ன என்று அவர் அப்போது சிந்தித்தார். அந்தசிந்தனையின் பயனாக சாக்லேட் கட்டிகளை வழங்கும் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அதேபோல பணத்தை வழங்கும் ஏடிஎம் எனப்படும் தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தின் மாதிரியை உருவாக்கினார்.[3] 1967ம் ஆண்டு இவர் உருவாக்கிய ஏ.டி.எம். எந்திரம் இங்கிலாந்தின் வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது.[3].

பணிகள்[தொகு]

இவர் 'டெலாரூ கருவிகள்' என்ற தானியக்கப் பணமளிக்கும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகப் பணிபுரிந்தார். தற்போது 1.7 மில்லியன் இயந்திரங்கள் உலகெங்கும் பயன்பாட்டில் உள்ளன.[4]

அடையாள எண்[தொகு]

இந்த தன்னியக்க காசளிப்பு இயந்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது உள்ளதுபோல ஏடிஎம் அட்டைகள் உருவாக்கப்படவில்லை. அதற்கு பதிலாக தனிச்சிறப்பான காசோலைகள் பயன்படுத்தப்பட்டன. காசோலைகளை இயந்திரத்தில் வைப்பதற்கு முன்பாக அடையாள எண்ணை தெரிவிக்க வேண்டும். முதலில் ஷெப்பர்டு 6 இலக்கம் கொண்ட அடையாள எண்ணை உருவாக்கினார். ஆனால் அவற்றை நினைவில் கொள்ள முடியவில்லை என்று மனைவி புகார் கூறியதையடுத்து 4 இலக்கம் கொண்ட எண்ணாக மாற்றினார். இன்று வரை அதுவே தொடர்கிறது. காலப்போக்கில் ஏடிஎம் இயந்திரங்கள் மிகவும் பிரபலமாகி உலக அளவில் 17 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன. வங்கியில் இருக்கும் சொந்த பணத்தை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எடுத்துக்கொள்ளும் வசதியை அளித்துள்ள ஏடிஎம் இயந்திரங்கள் இன்று நவீன வாழ்க்கையின் அடையாளமாகத் திகழ்கின்றன.

மறைவு[தொகு]

ஜான் ஷெப்பர்ட் பேரோன் நீண்ட நாள் உடல்நலமின்றி ஸ்காட்லாந்தில் உள்ள ரெய்மோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி தனது 84ஆம் வயதில் 2010 மே 19 அன்று காலமானார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]