ஜான் நாசு (கட்டிடக்கலைஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் நாசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1752-01-18)18 சனவரி 1752
லம்பேர்த், இலண்டன், இங்கிலாந்து
இறப்பு13 மே 1835(1835-05-13) (அகவை 83)
கிழக்கு கோவ்சு மாளிகை, வைட் தீவு, இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
பணி
கட்டிடங்கள்ரீஜன்ட் சாலை
பக்கிங்காம் அரண்மனை
கால்ட்டன் இல்ல டெரசு
ராயல் பவிலியன்

ஜான் நாசு (John Nash - (18 சனவரி 1752 – 13 மே 1835)) ஒரு பிரித்தானியக் கட்டிடக்கலைஞர். நான்காம் ஜார்ச் பதில் அரசனாக இருந்த காலத்திலும் பின்னர் அரசராக இருந்த காலத்திலும் இலண்டனில் பெரும்பாலான அரச கட்டிடங்களுக்கான திட்டங்களுக்கு இவரே பொறுப்பாக இருந்தார். ராயல் பவிலியனும், பக்கிங்காம் அரண்மனையும் பெயர் பெற்ற இவரது கட்டிடங்கள். பக்கிங்காம் அரண்மனையின் ஒரு பகுதியின் முகப்பு 20ம் நூற்றாண்டில் அசுட்டன் வெப் என்பவரால் திருத்தியமைக்கப்பட்டது. நாசின் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டிடக் கட்டுனரான யேம்சு பர்ட்டன் என்பவரால் கட்டப்பட்டவை. ரீஜன்ட் தெருத் திட்டத்தின்போது நாசு நிதி நெருக்கடியில் இருந்த காலங்களில் பர்ட்டன் நாசுக்கு உதவி செய்துள்ளார். இதற்குப் பதில் உதவியாக பர்ட்டனின் மகனான டெசிமசு பர்ட்டன் ஒரு கட்டிடக் கலைஞராக வளர்வதற்கு நாசு உதவினார்.

வரலாறு[தொகு]

இளமைக்காலம்[தொகு]

நாசு தெற்கு இலண்டனில் உள்ள லம்பேர்த் என்னுமிடத்தில் பிறதார். இவரது தந்தை ஒரு ஆலை அமைப்பாளர் ஜான் எனவும் அழைக்கப்பட்டர்.[1] 1766-67ல் ஜான் நாசு சர் ராபர்ட் டெய்லர் என்னும் கட்டிடக்கலைஞரிடம் பயிற்சிக்குச் சேர்ந்தார். 1775-76ல் இவரது பயிற்சி நிறைவுற்றது.[2] 1775 ஏப்ரல் 28ம் தேதி இலண்டனின் நெவிங்டனில் இருந்த புனித மேரி தேவாலயத்தில் ஒரு மருத்துவரின் மகளான ஜேன் எலிசபெத் கேர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.[2]

தொழில்[தொகு]

தொடக்கத்தில் நாசு நில அளவை, கட்டுமானம், தச்சுவேலை ஆகிய தொழில்களிலேயே ஈடுபட்டிருந்தார்.[3] இதன் மூலம் ஆண்டுக்கு £300 வருமானம் கிடைத்தது.[3] நாசும் மனைவியும் லம்பேர்த்தில் உள்ள ராயல் ரோவில் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டனர். 1777ல் நாசு சொந்தமாக கட்டிடக்கலைத் தொழிலைத் தொடங்கியதுடன், ரிச்சார்ட் எவிசைடு என்பவருடன் சேர்ந்து மர வணிகமும் செய்துவந்தார்.[2] ஜேன் எலிசபெத் மூலம் நாசுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆனாலும், இவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் அல்ல என்றும் ஜேன் தான் கருவுற்றதாகப் பொய் சொன்னார் என்றும் கூறப்படுகிறது. ஜேனின் பல்வேறு தவறான நடத்தைகள் காரணமாக நாசு, 1787ல் அவரை விவாகரத்துச் செய்தார்.

தொழிலிலும் இவருக்கு நட்டம் ஏற்பட்டதால், இலண்டனை விட்டு வேல்சில் இவரது தாயார் தங்கியிருந்த காமர்த்தென் என்னும் இடத்துக்குச் சென்றார். இங்கே அவர் ஒரு கட்டிடக்கலைஞனாக முதிர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. 1797ல் நாசு மீண்டும் இலண்டனுக்குத் திரும்பினார். இலண்டனில் இருந்தபோது 1798ல் மேரி ஆன் பிராட்லி என்பவரைத் திருமணம் செய்தார். அங்கே பல வாழிடக் கட்டிடங்களை அவர் வடிமைத்தார். 1806ன் பின்னர் நான்காம் ஜார்ச் என்ற பெயரில் அரசரான அப்போதைய பதில் அரசர் தனது பணியில் அமர்த்தினார். 1810க்குப் பின்னர் நாசு அரசரின் வேலை தவிர்ந்த தனியார் வேலைகளில் அதிகம் ஈடுபடவில்லை.

பதிலரசரிடம் இருந்து நாசுக்குக் கிடைத்த முதல் வேலை "ரீஜன்ட் சாலை" திட்டமும், மேரில்போன் பூங்கா என அறியப்பட்ட இடத்திற்கான வளர்ச்சித் திட்டமும் ஆகும். பதில் அரசரின் ஆதரவுடன், இப்பகுதிக்கான முழுமைத் திட்டம் ஒன்றை நாசு தயாரித்தார். இப்பகுதி, சென் ஜேம்சு பகுதியில் இருந்து வடக்காக ரீஜன்ட் சாலை, ரீஜன்ட் பூங்கா ஆகியவற்றுடன் அயலில் உள்ள பல தெருக்களையும், வீடுகளையும் உள்ளடக்கி இருந்தது. இத்திட்டத்தின் கீழான எல்லாக் கட்டிடங்களயும் நாசு வடிவமைக்கவில்லை. அவ்வாறான கட்டிடங்கள் ஜேம்சு பென்னெத்தோர்ண், டிசிமசு பர்ட்டன் போன்ற பிற கட்டிடக் கலைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 1814-1827 காலப்பகுதியில் சென் ஜேம்சு பூங்காவையும் நாசு மீள் வடிவமைப்புச் செய்தார். வாய்க்கால்களாக இருந்தவற்ரை ஏரியாக மாற்றி அதற்கு இன்றைய வடிவத்தைக் கொடுத்தது நாசின் வடிவமைப்பே.

1815ல் பதிலரசர் பிரைட்டனில், இப்போது "ராயல் பவிலியன்" எனப்படும் கடற்கரை மாளிகையை வடிவமைக்கும் பணியை நாசிடம் ஒப்படைத்தார். இது முதலில் என்றி ஓலன்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. 1822ல் இது தொடர்பான வேலைகள் முடிவடைந்தன. இதன் வெளிப்புறம் இந்திய-சரசனியக் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவியது. மேற்கு இலண்டனில் இருந்து கிழக்கே தேம்சு ஆறு வரை கால்வாய் இணைப்பு ஏற்படுத்துவதற்காக 1812ல் உருவாக்கப்பட்ட ரீஜன்ட் கால்வாய் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவராகவும் நாசு இருந்தார். இதற்கான முழுமைத் திட்டத்தைத் தயாரித்த நாசு அதை முழுமைப்படுத்தும் பணியை அவரது உதவியாளராக இருந்த ஜேம்சு மோர்கனிடம் ஒப்படைத்தார். ராபர்ட் சுமார்க்கே, சர் ஜோன் சோவான் ஆகியோருடன் நாசும் வேலைகள் அலுவலகத்தின் கட்டிடக்கலைஞராக 1813ல் நியமிக்கப்பட்டர். இது அவரது தொழில் வாழ்க்கையின் உச்சமாக அமைந்தது. இந்தப் பதவியின் ஒரு பகுதியாக 1818ல் இருந்து புதிய தேவலயங்களைக் கட்டுவதற்கான நாடாளுமன்ற ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கவும் இவர் அழைக்கப்பட்டர். இந்த ஆணைக்குழுவுக்காக நாசு இரண்டு தேவாலயங்களை வடிவமைத்தார்.

இறுதிக்காலம்[தொகு]

அரசர் நான்காம் ஜார்ச்சின் இறப்புடன் நாசின் தொழிலும் முடிந்துவிட்டது. அரசரின் ஊதாரித்தனமான செலவு குறித்துப் பெரும் எதிர்ப்பு இருந்தது. நாசு வடிவமைத்த பக்கிங்காம் அரண்மனையின் கட்டுமானச் செலவு குறித்துக் கவனப் செலுத்தப்பட்டது. தொடக்கத்தில் இதற்கான செலவு £252,690 என மதிப்பிடப்பட்டிருந்தது. 1829ல் இது £496,169 ஆக உயர்ந்திருந்தது. இறுதியாக கட்டிடம் முற்றாக நிறைவு பெறாமலேயே செலவு £613,269 ஆகக் காணப்பட்டது. இதனால் உருவான சர்ச்சைகள் காரணமாக நாசுக்கு அரசாங்க வேலைகள் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். அதுமட்டுமன்றி, இவரது சமகாலத்துக் கட்டிடக்கலைஞர் பலருக்குப் பிரபுப் பட்டம் வழங்கப்பட்டும் இவருக்கு அப்பட்டம் வழங்கப்படவில்லை. நாசு 1835 மே 13ம் தேதி அவரது வீட்டில் காலமானார்.

இறந்தபோது நாசுக்கு £15,000 அளவுக்குக் கடன் இருந்தது. நாசின் மனைவி இக்கடனை அடைப்பதற்காக அவரிடம் இருந்த பெறுமதியான ஓவியங்கள், புத்தகங்கள், பதக்கங்கள், வரைபடங்கள் போன்றவற்றையும், இறுதியாக வீட்டையும் விற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Tyack 2013, p. 2
  2. 2.0 2.1 2.2 Tyack 2013, p. 3
  3. 3.0 3.1 Suggett 1995, p. 10