உள்ளடக்கத்துக்குச் செல்

சொலமன் ஆர். குகென்கெயிம் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொலமன் ஆர். குகென்கெயிம் அருங்காட்சியகம் (Solomon R. Guggenheim Museum) என்பது நியூயார்க் நகரத்தில் மான்கட்டனின் மேல் கிழக்குப் பக்கப் பகுதியில் உள்ள 1071 ஐந்தாம் அவெனியூவை கிழக்கு 89 ஆவது தெரு சந்திக்கும் மூலையில் அமைந்துள்ள ஒரு ஓவிய அருங்காட்சியகம் ஆகும். இது தொடர்ச்சியாக வளர்ந்து வருகின்ற உணர்வுப்பதிவுவாத, பின்-உணர்வுப்பதிவுவாத, தொடக்க நவீனத்துவ, சமகால ஓவியச் சேகரிப்புகளின் நிரந்தர இல்லமாகும். அத்துடன்,ஆண்டு முழுவதும் சிறப்புக் கண்காட்சிகளும் இடம்பெறுகின்றன. இது 1939 ஆம் ஆண்டில் சொலமன் ஆர். குகென்கெயிம் அறக்கொடை நிறுவனத்தால் பொருள்சாரா (non-objective) ஓவியங்களுக்கான அருங்காட்சியகமாகத் தொடங்கப்பட்டது. இல்லா வொன் ரிபே என்பவர் இதன் முதல் பணிப்பாளராகப் பொறுப்பேற்றார். நிறுவனர் சொலமன் ஆர். குகென்கெயிம் 1952 ஆம் ஆண்டில் இறந்தபின்னரே இதன் தற்போதைய பெயர் இடப்பட்டது.

1959 ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் வாடகைக் கட்டிடத்தில் இருந்து தற்போதைய கட்டிடத்துக்கு இடம் மாறியது. 20 ஆம் நூற்றாண்டுக் கட்டிடக்கலையின் பெயர் பெற்ற ஆக்கமான இது கட்டிடக்கலைஞர் பிராங்க் லாயிட் ரைட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. மேல் பகுதி அகலமாகவும் கீழே ஒடுக்கமாகவும் உள்ள உருளை வடிவம் கொண்ட இக்கட்டிடம் "ஆற்றலின் கோயில்" என்னும் கருத்துருவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. கட்டிடத்தின் வெளிச் சுவரை அண்டி நீளமானதும், தொடர்ச்சியானதுமான சாய்தளமாகச் சுருள் வடிவில் அமைந்த தனித்துவமான காட்சிக்கூடம் நில மட்டத்தில் இருந்து கூரை வரை செல்கின்றது. 1992 இல் அருகில் ஒரு உயரமான கட்டிடம் அமைக்கப்பட்டு இது விரிவாக்கப்பட்டது. 2005 தொடக்கம் 2008 வரையான காலப் பகுதியிலும் விரிவாக்கம் இடம்பெற்றது.

சொலமன் ஆர். குகென்கெயிமின் சேகரிப்புக்களுடன் தொடங்கி மேமும் பல முக்கிய தனிப்பட்ட சேகரிப்புக்களை அடிப்படையாகக்கொண்டு எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதன் சேகரிப்புக்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. இதன் சேகரிப்புக்களை இந்த அருங்காட்சியகம் இசுப்பெயினின் பில்பாவோ அருங்கட்சியகத்துடனும் பிற இணை அருங்காட்சியகங்களுடனும் பகிர்ந்துகொள்கிறது. 2013 இல் ஏறத்தாழ 1.2 மில்லியன் மக்கள் இந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தந்துள்ளனர். நியூயார்க் நகரத்தின் மிகவும் பெயர் பெற்ற கண்காட்சிகள் இங்கே இடம்பெற்றுள்ளன.[1]

வரலாறு

[தொகு]

சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்த செல்வந்தக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த சொலமன் ஆர். குகென்கெயிம், 1890களில் இருந்து புகழ் பெற்ற ஓவியர்களின் ஆக்கங்களைச் சேகரித்து வந்தார். 1926 ஆம் ஆண்டு இவர் ஓவியரான இல்லா வொன் ரிபே என்பவரைச் சந்தித்தார்.[2] இல்லா, ஐரோப்பிய அவந்த்-கார்டே ஓவியங்களை, குறிப்பாக ஆன்மீக அம்சங்களும், இலட்சிய அம்சங்களும் அடங்கியவை அனத் தான் கருதிய பண்பிய (abstract) ஓவியங்களை (பொருள்சாரா ஓவியங்கள்) குகென்கெயிமுக்கு அறிமுகப்படுத்தினார்.[2] இதைத் தொடர்ந்து குகென்கெயிம் தனது சேகரிப்பு உத்தியை மாற்றிக்கொண்டு, வாசிலி கன்டின்சுக்கி போன்ற ஓவியர்களின் ஆக்கங்களைச் சேகரிக்கத் தொடங்கினார். நியூயார்க்கில் பிளாசா விடுதியில் இருந்த தனது வசிப்பிடத்தில் தனது சேகரிப்புக்களைப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கத் தொடங்கினார்.[2][3] அவரது சேகரிப்புக்கள் மேலும் வளர்ந்தபோது, நவீன ஓவியங்கள் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் பொருட்டு 1937 இல் சொலமன் ஆர். குகென்கெயிம் அறக்கொடை நிறுவனத்தை உருவாக்கினார்.[3]

1939 ஆம் ஆண்டில் ஓவியர் ரிபேயின் வழிகாட்டலில், அறக்கொடை நிறுவனம் மான்கட்டன் நடுப் பகுதியில் அமைத்த "பொருள்சாரா ஓவிய அருங்காட்சியகத்தில்" ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஓவியர் ரிபேயின் வழிகாட்டலில், தொடக்ககால நவீனவிய ஓவியர்களான ருடோல்ஃப் பௌவர், பிபே, கன்டின்சுக்கி, பியெட் மொன்ட்ரியன், மார்க் சகால், ராபர்ட் தெலூனே, ஃபேர்னன்ட் லெசி, அமிடெயோ மொடிலியானி, பாப்லோ பிக்காசோ போன்றோர் வரைந்த பொருள்சாரா ஓவியங்களுக்கான முக்கியமான எடுத்துக்காட்டுகளை உள்ளடக்குவதற்கு குகென்கெயிம் முயற்சி செய்தார்.[2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Top 100 Art Museum Attendance", The Art Newspaper, 2014, pp. 11 and 15, accessed July 8, 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 "Exhibition of Works Reflecting the Evolution of the Guggenheim's Collection Opens in Bilbao", artdaily.org, 2009. Retrieved April 18, 2012.
  3. 3.0 3.1 3.2 "Biography: Solomon R. Guggenheim", Art of Tomorrow: Hilla Rebay and Solomon R. Guggenheim, Solomon R. Guggenheim Foundation. Retrieved March 8, 2012.
  4. Calnek, Anthony, et al. The Guggenheim Collection, pp. 39–40, New York: The Solomon R. Guggenheim Foundation, 2006