சேவை வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் உற்பத்தி வரியைப் போல வழங்கப்படும் சேவைகளுக்கும் விதிக்கப்படும் வரி சேவை வரி (Service Tax) எனப்படுகிறது.

இந்தியாவில் சேவை வரி[தொகு]

நிதிச்சட்டம் 1994 இன் படி , 1994 ஆம் ஆண்டு சூலை முதல் நாள் முதல் இந்தியாவில் சேவை வரி விதிப்பு தொடங்கியது. உற்பத்தி வரி, ஏற்றுமதி-இறக்குமதி வரி போன்றவற்றிற்கு இருப்பதைப்போல சேவை வரிக்காக தனிசட்டம் எதுவும் இந்தியாவில் இயற்றப்படவில்லை. சேவை வரி (2009-10) 10 விழுக்காடு ஆகும். இதற்குமேல் கல்வி வரி 0.2 விழுக்காடும் உயர்கல்விவரி 0.1 விழுக்காடும் ஆக மொத்தத்தில் 10.3 விழுக்காடு வசூலிக்கப்பட்டது. அதன் பின்னர், நிதி அமைச்சகம் 12.36% ஆக உயர்த்தியது. அதன் பின்னர் 2015 நிதிநிலை அறிக்கையின் பொழுது 12.36% லிருந்து, 14% க்கு உயர்ந்தது. இந்த 14% ஜூன் 1, 2015 லிருந்து அமலில் உள்ளது. மேலும் நவம்பர் 15, 2015 லிருந்து ஸ்வாச் பாரத் செஸ் (Swachh Bharat Cess) 0.5%-ம் கூடுதலாக சேர்க்கப்பட்டதால், தற்போதைய நிலவரப்படி சேவை வரியானது 14.5% வசூலிக்கப்படுகிறது. இது நவம்பர் 15, 2015 லிருந்து அமலில் உள்ளது. ஆனால் அண்மைய தகவலின் படி 2016 ஆம் ஆண்டிற்கான நடுவன் நிதிநிலை அறிக்கையில், க்ரிஷி கல்யாண் செஸ் (Krishi Kalyan Cess) 0.5% எனும் புதிய வரியையும் மத்திய நிதி அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. எனவே விரைவிலேயே சேவை வரியானது 14.5% லிருந்து 15% ஆக உள்ளது.

வரலாறு[தொகு]

இந்தியாவில் ஜம்மு மற்றும் காஷ்மீர் தவிர்த்த மீதமுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த சேவை வரியானது பொருந்தும். முதன் முதலாக 1994-95 ஆம் ஆண்டில் (1) தொலைபேசி சேவை (2) பங்குச்சந்தை தரகர்கள் மற்றும் (3) பொதுக் காப்பீடு ஆகிய சேவைகளுக்குச் சேவை வரி விதிக்கப்பட்டது. இதே ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது நிதிச்சட்டம் , (1) விளம்பரச் சேவைகள் (2) அஞ்சல் (கொரியர்) சேவைகள் மற்றும் (3) ரேடியோ பேஜர் சேவைகள் ஆகியவற்றுக்கும் சேவை வரியை நீட்டித்தது.

1997 மற்றும் 98 ஆம் ஆண்டுகளில் கீழ்க்காணும் சேவைகள் வரி வலைக்குள் கொண்டுவரப்பட்டன

 1. ஆலோசனை வழங்கும் பொறியாளர்கள்
 2. கல்யாண மண்டபம்
 3. இறக்குமதி முகவர்கள்

1998-99 ஆம் ஆண்டில் மேலும் பன்னிரு சேவைகள் வரி விதிப்புக்கு உள்ளாயின

 1. ஆர்க்கிடெக்டுகள்
 2. கட்டிட அக அலங்காரம்
 3. மேலாண்மை ஆலோசனையாளர்கள்
 4. தணிக்கையாளர்கள்
 5. நிறுமச் செயலர்கள்
 6. உற்பத்திச் செலவுக் கணக்காயர்கள்
 7. ரியல் எஸ்டேட்
 8. கிரெடிட் ரேட்டிங் முகவர்கள்
 9. தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள்
 10. சந்தை ஆய்வுச் சேவை முகவாண்மைகள்
 11. பங்குச் சந்தை காப்பீட்டு சேவை வழங்குவோர்

2002-2003 மற்றும் 2005-2006ஆண்டுகளில் மேலும் பல புதிய சேவைகள் வரி வலைக்குள் கொண்டுவரப்பட்டன.

தற்போது சுமார் 99 சேவைகள் மீது வரிவிதிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படுகிற அல்லது வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ள சேவையின் மொத்த மதிப்பின்மீது வரி கணக்கிடப்படவேண்டும. முன்பணம் பெறும்போதே சேவைவரியும் செலுத்தப்படவேண்டும். எட்டு இலட்சம் ரூபாய் வரை வர்த்தகம் செய்பவர்களுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.ஏற்றுமதி செய்யப்படும் சேவைக்கு வரி இல்லை.

ஒருவர் வழங்கும் சேவைகளின் மீது வரி செலுத்துகிறார் எனில் அந்தச் சேவைகளை வழங்குவதற்காக அவர் வாங்கிய பொருள்கள் மீது செலுத்தப்பட்ட உற்பத்தி வரியைக் கழித்துக்கொள்ளலாம். அதேபோன்று இதற்காகப் பெறப்பட்ட சேவைகளின் மீது செலுத்தப்பட்ட வரியையும் கழித்துக்கொள்ளலாம். பொதுவாகச் சேவை வழங்குபவர்கள்தான் வரியைச் செலுத்தவேண்டும் என்றாலும் சில பரிவர்த்தனைகளில் சேவையைப் பெற்றுக்கொள்பவர் வரியைச் செலுத்தவேண்டி உள்ளது. இதற்கு ரிவர்ஸ் சார்ஜ் என்று பெயர். அடுத்த மாதம் ஐந்தாம் தேதிக்குள் வரி செலுத்தப்படவேண்டும். மார்ச்சு மாதத்தில் மார்ச்சு மாதம் 31 ஆம் தேதிக்குள் வரி செலுத்தப்படவேண்டும். வரிசெலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் வட்டியுடன் சேர்த்து வரி செலுத்தப்படவேண்டும்.

சேவையைப் பெற்றுக் கொள்கிறவர்கள் ,அதற்கான வரியையும் சேர்த்துதான் சேவை வழங்குகிறவர்களிடம் கொடுக்கிறார்கள்.அந்த வரியை அரசாங்கத்திற்கு செலுத்தும் பொறுப்பு சேவை வழங்குபவருக்கு உள்ளது. பொதுவாக சேவை வழங்குபவர்கள்தான் வரியைச் செலுத்தவேண்டும் என்றாலும் சில பரிவர்த்தனைகளில் சேவையைப் பெற்றுக்கொள்பவர் வரியைச் செலுத்தவேண்டி உள்ளது. இதற்கு ரிவர்ஸ் சார்ஜ் என்று பெயர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவை_வரி&oldid=2718740" இருந்து மீள்விக்கப்பட்டது