செல்வ வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒருவருடைய வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி வருமான வரி. அது போல ஒருவரிடம் இருக்கும் செல்வத்தின் மதிப்பின்மீது விதிக்கப்படும் வரி செல்வ வரி (wealth tax) எனப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் மதிப்பீட்டு நாளில் ஒருவர் வைத்திருக்கும் செல்வத்தின் மதிப்பை பொருத்து இந்த வரி விதிக்கப்படுகிறது.மதிப்பீட்டு நாள் என்பது ஒவ்வோர் ஆண்டும் மார்ச்சு 31 ஆம் நாளாகும். மதிப்பீட்டு நாளில் ஒருவருடைய செல்வத்தின் நிகர மதிப்பு ரூபாய் முப்பது இலட்சத்தைத் தாண்டுமெனில் (2010 நிலவரம்) அவர் செல்வவரி செலுத்தவேண்டும். முப்பது இலட்சத்துக்கு மேல் உள்ள தொகையில் ஒரு விழுக்காடு வரியாக செலுத்தப்படவேண்டும். இதன்மீது உபரி வரிகள் எதுவும் செலுத்தப்படவேண்டியதில்லை. தனிநபர்கள், ஒன்றுபட்ட இந்து குடும்ப நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகள் இந்த வரியைச்செலுத்த வேண்டும். பிரிவு 25 இன் கீழ் பதிவு பெற்ற நிறுவனங்கள் சொத்துவரி செலுத்த வேண்டியதில்லை.

நிகர செல்வ மதிப்பு = மொத்த செல்வம் + செல்வத்துக்கு சமமாகக்கருதப்படுபவை-விலக்கு பெறும் செல்வம் -கடன்கள் நிகர செல்வத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் சொத்துக்களை வாங்குவதற்காக பெறப்பட்டுள்ள கடன்கள் மட்டுமே கழிக்கப்படும். மதிப்பீட்டு நாளன்று உள்ள கடன்களின் மதிப்பே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்தியக்குடிமக்கள் வெளிநாடுகளில் வைத்திருக்கும் செல்வத்தின் மதிப்பும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். வெளிநாட்டினரைப்பொருத்த வரையில் அவர்கள் இந்தியாவில் வைத்திருக்கும் செல்வம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

செல்வ வரியும் சொத்து வரியும் வேறுபட்டவை. வீடு ,கடை போன்ற அசையாச் சொத்துக்களின் மீது சொத்து வரி விதிக்கப்படுகிறது.நகை, வாகனம் போன்ற அசையும் சொத்துக்களின் மீது செல்வ வரி விதிக்கப்படுகிறது.செல்வ வரி , நடுவன் அரசுக்கு செலுத்தப்பட வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வ_வரி&oldid=3685355" இருந்து மீள்விக்கப்பட்டது