சென்னை நகராண்மைக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சென்னை நகராண்மைக் கழகம் (Madras Municipal Corporation)[1] கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் சென்னை நகரத்தை நிருவாகம் செய்ய உருவாக்கப்பட்ட அமைப்பு. சென்னையின் ஆட்சித் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட ஹேல் என்பவர், சென்னை நகரத்திற்கு நகராண்மைக் கழகமும், நகரத் தந்தை பதவியும், டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வந்த நகராட்சி முறையை ஒட்டி ஏற்படுத்த தீர்மானங்களை நிறைவேற்றினார். முதலில் மூன்று ஆங்கிலேயர்களும், மூன்று பிரஞ்சுக்காரர்களும், இந்துக்கள், இசுலாமியர் ஆகியோர் சேர்ந்த 13 பேர்கள் கொண்ட மூப்பரவை (Aldermen Court) ஒன்று அமைக்கப்பட்டு, ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 29ம் தேதி நகரத் தந்தை தேர்தல் நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

தோற்றம்[தொகு]

ஹேல் தீர்மானத்தின் படி, முதன் முதலாக சென்னை நகராண்மைக் கழகம், 1687 டிசம்பர் 30 அன்று இரண்டாம் ஜேம்ஸ் அரசனின் அனுமதியுடன் தொடங்கப்பட்டது. முதல் நகரத் தந்தையாக நத்தானியேல் இக்கின்ஸன் என்பவர் நியமிக்கப்பட்டார்.[2] நகராண்மைக் கழகத்தில், யூத, போர்ச்சுகீசிய, இந்து வர்த்தகர்கள் தலா மூன்று பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களில், கிழக்கிந்திய ஆங்கிலக் கழகத்துடன் வாணிகம் செய்துவந்த பேரி திம்மனின் சகோதரர் சின்ன வேங்கடாத்திரி, மூத வீரண்ணா, அலங்காத்தாப் பிள்ளை ஆகியோர் இந்துக்களின் சார்பில் உறுப்பினர்களாக இருந்தனர். பீரங்கிகள் முழங்க, வாத்தியங்கள் ஒலிக்க நகராண்மைக் கழகத் தொடக்கவிழா புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது.

1727 ஜூலை மாதம் நகராண்மை கழகம் திருத்தியமைக்கப்பட்டது. நகரத் தந்தையோடு 7 ஆங்கிலேயர்களும், 2 இந்தியர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். இந்திய சுதந்திரத்திற்கு பின் சென்னை நகராண்மைக் கழகம் என்பது சென்னை மாநகராட்சி என மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. சென்னை மறுகண்டுபிடிப்பு, எஸ். முத்தையா, தமிழில்: சி.பி. கார்த்திக் நாரயணன், கிழக்கு பதிப்பகம், வெளியீடு: 2009
  2. http://www.chennaicorporation.gov.in/about-chennai-corporation/inauguration.htm