சிட்டகோனிய மொழி
சிட்டகோனிய மொழி | |
---|---|
Default
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | cit |
ISO 639-3 | ctg |
சிட்டகோனிய மொழி வங்காளதேசத்தின் சிட்டகொங்கிலும், அந் நாட்டின் தென்கிழக்குப் பகுதிகளிலும் இம் மொழி பேசப்படுகிறது. இது வங்காள மொழிக்கு மிகவும் நெருங்கியது எனினும், மொழியியலாளர்கள் இதை வங்காளத்தின் ஒரு கிளைமொழியாக அன்றி ஒரு தனி மொழியாகவே கருதுகின்றனர். வங்காளதேசத்திலும், ஐக்கிய இராச்சியம் உட்பட்ட பல பிற நாடுகளிலும் இம் மொழி பேசுவோர் சிமார் 14 மில்லியன்கள் வரை இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
வகைப்பாடு
[தொகு]சிட்டகோனிய மொழி, பரந்த இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் துணைப் பிரிவான, இந்திய-ஆரிய மொழிகளின் கிழக்கத்திய மொழிக்குழுவுள் அடங்கிய, வங்காள-அஸ்ஸாமிய துணைப் பிரிவைச் சேர்ந்ததாகும். சில்ஹெட்டி மொழி, வங்காள மொழி, அஸ்ஸாமிய மொழி, ஒரியா, பீஹாரி மொழி போன்றவற்றுடன் சிட்டகோனிய மொழி ஒரு பொது மூலத்திலிருந்து தோன்றியதாகும்.
பரம்பல்
[தொகு]வங்காளதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் சிட்டகாங் பிரிவு முழுவதிலும் பரவலாகப் பேசப்படும் இம்மொழி, சிட்டகாங் மாவட்டத்திலும், கொக்ஸ் பசார் மாவட்டத்திலுமே செறிந்து காணப்படுகின்றது. இதற்கு எவ்வித அதிகாரநிலைத் தகுதியும் கிடையாது என்பதுடன், பாடசாலைகளிலும் கற்பிக்கப்படுவது இல்லை. பெரும்பாலான சிட்டகோனியர்கள் உட்படப் பலர் இதனை வங்காள மொழியின் ஒரு திருந்தாத வடிவமாகவே கருதி வருவதால், சிட்டகோனியர்களின் கல்வி மொழியாக வங்காள மொழியே இருந்து வருகிறது.
சிட்டகோனிய மொழிக்கு ஒரு பொது வடிவம் கிடையாது. இது, கிழக்கு-மேற்காக அமைவிடம் சார்ந்தும், முஸ்லிம், இந்து போன்ற சமயம் சார்ந்தும் உள்ள பல கிளைமொழிகளின் தொடரியமாகவே காணப்படுகிறது. முஸ்லிம், இந்து சமயங்கள் சார்ந்த கிளைமொழிகள் இடையேயான வேற்றுமை சிறப்பாக சொற்கள் தொடர்பானவை. ஆனால், புவியியல் அமைவிடம் சார்ந்த வேறுபாடுகள் சொற்கள் சாந்தவையாக மட்டுமன்றி இலக்கணம் சார்ந்தவையாகவும் உள்ளன.
எழுத்து வடிவம்
[தொகு]சிட்டகோனிய மொழிக்குத் தனியான எழுத்து வடிவம் கிடையாது. பெரும்பாலான படித்த சிட்டகோனியர்கள், இம் மொழியை வங்காள எழுத்துக்களில் எழுதி வருகிறார்கள். முற்காலத்தில் இம்மொழி அரபு எழுத்துக்களில் எழுதப்பட்டு வந்தது. சிட்டகோனிய மொழியின் ரொஹிங்யா கிளைமொழி சில சமயங்களில் ரோம எழுத்துக்களிலும் எழுதப்படுவது உண்டு.