சிங்க மனிதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடது மேற்கையில் குறுக்குவாட்டில் அமைந்துள்ள புடைப்புக்களைக் காட்டும் சிற்பத்தின் பக்கவாட்டுத் தோற்றம்

லோவென்மென்சு உரு அல்லது ஓலென்சுடீன்-இசுட்டேடல்இன் சிங்க மனிதன் என்பது செருமனியின் ஓலென்சுடீன்-இசுட்டேடல் குகையில் 1939ல் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலப்பகுதிக்குரிய தந்தத்தாலான ஒரு சிற்பமாகும். செருமனியில் கண்டெடுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டமையினால், இது பெரும்பாலும் செருமானிய மொழியிலான லோவென்மென்சு எனும் பெயரிலேயே அழைக்கப்பட்டது.

சிங்கத்தலையுடனான இவ்வுருவே, உலகின் மிகவும் பழைமையான விலங்குருவும், உருவமைப்புக் கலைக்கான பழைமையான எடுத்துக்காட்டுக்களில் ஒன்றுமாகும். இவ்வுரு கண்டெடுக்கப்பட்ட மண்ணடுக்கின் காபன் திகதியிடல் மூலமான காலக்கணிப்பின் மூலம், இது 35000இலிருந்து 40000 ஆண்டுகள் பழைமையானதெனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இவ்வுரு மேல் பழங்கற்காலத்துக்குரிய ஓரிகுனேசியப் பண்பாட்டுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.[1] இது தீக்கற் கத்தியைப் பயன்படுத்தி மாமூத்து தந்தத்தைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இடது மேற்கையில், ஏழு சமாந்தர, குறுக்குவாட்டிலான குடையப்பட்ட புடைப்புகள் காணப்படுகின்றன.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துண்டுகளை இணைத்து பல்வேறு முறை மீள்கட்டமைக்கப்பட்ட பின்பு, இவ்வுருவின் உயரம் 31.1 cm (12.2 அங்) ஆகவும், அகலம் 5.6 cm (2.2 அங்) ஆகவும், தடிப்பு 5.9 cm (2.3 அங்) ஆகவும் உள்ளது. இது தற்போது செருமனியின் உல்ம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

ஓலென்சுடீன்-இசுட்டேடல் குகையில், முறையான அகழாய்வுகள் வரலாற்றுக்கு முந்தைய கால வரலாற்றாய்வாளரான ரொபேர்ட் வெட்செல் என்பவரின் வழிகாட்டுதலில் 1937ல் துவங்கியது.[2] ஆகத்து 25, 1939 அன்று, நொருங்கிய நிலையிலான மாமூத்து தந்தத்தினாலான உருவொன்று நிலவியலாளரான ஒட்டோ வோல்சிங் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[3] இதற்கு ஒரு கிழமைக்குப் பின்பு துவங்கிய இரண்டாம் உலகப்போரினால் களப்பணி நிறுத்தப்பட்டதோடு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் பகுப்பாய்வும் நடத்தப்படவில்லை. தந்தம் கண்டெடுக்கப்பட்ட அதே மண் மூலமாக அகழாய்வுக் குழிகள் மீண்டும் நிரப்பப்பட்டன.[4]

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக, இத் துண்டுகள் முற்றிலும் மறக்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள உல்ம் அருங்காட்சியகத்தில் காணப்பட்டன. இதன் பின் தொல்பொருளியலாளரான சோக்கிம் ஆன் என்பவர் 200க்கும் மேற்பட்ட இத் துண்டுகளைக் கணக்கெடுத்து ஒன்று படுத்தும் வேளையிலேயே விலங்கு மற்றும் மனித இயல்புகளுடனான உருவமொன்று வெளிப்படத் துவங்கியது.[4]

1961 வரை கோடைகாலப் பகுதிகளில் வெட்செல் அகழாய்வுகளைத் தொடர்ந்தார்.[5] 1970களில் குகைப் பகுதியில் தந்தத் துண்டுகள் மேலும் கண்டுபிடிக்கப்பட்டன. 1982ல், தொல்லுயிர் ஆய்வாளர் எலிசபெத் சிமித், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துண்டுகளை ஆன் மீளுருவாக்கிய உருவுடன் பொருத்தி சில தவறுகளையும் சரி செய்தார். மேலும், பூனையொன்றின் இயல்புகளை வெளிக்காட்டும் அவ்வுருவின் மூக்கு மற்றும் வாய்த் துண்டுகளையும் அவர் சேர்த்தார்.[4][a]

1987ல், சிமித்தின் உதவியுடன் உதே வூல்ஃபினால் வூட்டம்பேர்க் அரசு அருங்காட்சியகத்தில் நடாத்தப்பட்ட பயிலரங்குகளில் விரிவான மீளமைப்பு நடவடிக்கைகள் துவங்கின. ஆறு மாதங்களுக்கு மேல் நீண்ட இச் செயற்பாட்டின் போது இவ்வுருவின் மூன்றில் இரண்டு பகுதி மாத்திரமே காணப்பட்டமை கண்டறியப்பட்டது. இவ்வுருவின் பின்பகுதி கடுமையாகச் சேதமுற்றிருந்ததுடன் கால்களிலும் சில தந்தப் படலங்கள் தவறவிடப்பட்டிருந்தன. காதுகள், கட்குழிகள், மூக்கு மற்றும் வாயின் மூன்றிலிரு பகுதிகள் மற்றும் தலையின் பின்புறம் என்பன பாதுகாப்பாயிருந்தன. தலை மற்றும் உடலின் இடைவெளிகளை நிரப்ப தேன் மெழுகு, செயற்கை மெழுகு மற்றும் சுண்ணக் கட்டியின் கலவையினாலான மீளமைக்கத்தக்க மூலப்பொருள் பயன்படுத்தப்பட்டது.[8]

2008இலிருந்து, குகையில் மேலதிக அகழாய்வுகள் நடத்தப்பட்டன. அனைத்து மண்ணடுக்குகளிலும் அரித்தெடுப்புச் செயற்பாடு நடத்தப்பட்டு பல நுண்ணிய துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. மூல மீளமைப்பைக் குலைக்காத வகையில், முதற் புதிய சீரமைப்புகள் மெய்நிகர் நிலையில் மாதிரியுருவாக்கம் செய்யப்பட்டுச் சேர்க்கப்பட்டன.[9][b]

2012ல், எசெலிங்கனில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான அரசு அலுவலகம் நடாத்திய பயிலரங்குகளில், நிகோல் எபிங்கர்-ரிசுட் தலைமையில் இரண்டாவது மீளமைப்பு துவங்கியது. இவ்வுரு அதன் தனித்தனிப் பகுதிகளாகக் குலைக்கப்பட்டு, புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட துண்டுகள் அதன் பழைய துண்டுகளோடு இணைக்கப்பட்டன. இதன் மூலம், தலை, பின்புறம் மற்றும் உடலின் இடப்புறம் போன்றவை மேலும் முழுமை பெற்றதோடு முதலாவது மீளமைப்பின் போது சேர்க்கப்பட்ட செயற்கையான பகுதிகள் நீக்கப்பட்டன.[11] இதன் மூலம், லோவென்மென்சு உருவின் உயரம் 296 இலிருந்து 311 மில்லிமீற்றராக அதிகரித்தது.[12] 2013ன் பிற்பகுதியில் மீளமைப்புப் பணிகள் நிறைவுற்றன.[11]

பொருள் விளக்கம்[தொகு]

2013ல் மீளமைப்பின் பின்னர் லோவென்மென்சு உரு

இவ்வுருவின் பால் நிலையைத் தீர்மானிப்பது சில ஆய்வாளர்களின் நோக்கமாயிருந்தது. துவக்கத்தில், ஆன் இவ்வுரு ஒரு ஆண் என வகைப்படுத்தினார். இதன் வயிற்றின் மீதிருந்த தகடு தளர்வுற்ற நிலையிலுள்ள ஆண்குறியாய் இருக்கலாமெனவும் இவர் கருத்துத் தெரிவித்தார். பின்னர் சிமித் இதனை ஒரு பெண்குறி முக்கோணமென வகைப்படுத்தினார்.[3] எனினும், இச் சிற்பத்தின் புதிய பகுதிகளை ஆராய்ந்த பின்பு இவ்வுரு ஊலென்லோவின் (Höhlenlöwin) (பெண் ஐரோப்பியக் குகைச் சிங்கம்) தலையைக் கொண்ட பெண்ணாகுமென உறுதி செய்தார்.[13][14] ஆண் ஐரோப்பியக் குகைச் சிங்கங்களுக்குப் பெரும்பாலும் பிடரி மயிர் காணப்படுவதில்லை.எனவே, பிடரி மயிர் காணப்படாமை இவ்வுரு ஒரு பெண் சிங்கத்தினைக் குறிப்பதாக வகைப்படுத்தப் போதுமானதாக இருக்கவில்லை. எனவே ஆய்வாளர்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் இதன் பால்நிலை பற்றிய விவாதம் தொடர்ந்தது. இவ்வுரு, பெண்ணிய இயக்கங்களின் ஓர் குறியீடாக மாறியுள்ளதாக உல்ம் அருங்காட்சியகத்தின் குர்ட் வேர்பேர்கர் குறிப்பிட்டார்.[3]

2012–2013 மீளமைப்புக்குப் பின்னர், பிறப்புறுப்புப் பகுதியில் அமைந்திருந்த முக்கோணத் தகடு உருவிலிருந்து தனித்து உருவாக்கப்பட்டமையும் அது உருவிலிருந்து பிரிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அதிலிருந்த ஒரு உடைவுப் புள்ளி மூலமாக, அது உண்மையில் சதுர வடிவமாய் இருந்திருக்கக்கூடுமெனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. லோவென்மென்சு உருவின் பால்நிலையை நிர்ணயிக்கும் முயற்சி நிறைவு பெறாவிடினும் அது தொடர்பான விவாதங்கள் தொடர்கின்றன. குறித்த துண்டு தொடர்பான மிகப் பொதுவான கருத்து, அதுவோர் பகட்டான ஆண்குறி என்பதாகும்.[15]

லோவென்மென்சு உரு, இசுட்டேட்டல் குகையின் வாயிலிலிருந்து 30 மீற்றர் தூரத்திலிருந்த அறையினுள்ளே கிடந்தது. இவ்வுருவுடன் மேலும் பல முக்கியத்துவம் மிக்க பொருட்களும் காணப்பட்டன. எலும்பினாலான பொருட்களும் வேலைப்பாடுகளுடன் கூடிய மான் கொம்புகளும், பதக்கங்கள், மணிகள் அடங்கிய நகைகளும், துளையிடப்பட்ட விலங்குப் பற்களும் கண்டெடுக்கப்பட்டன. குறித்த அறை ஒரு முக்கியமான இடமாக இருக்கக்கூடும். இது பெரும்பாலும் களஞ்சிய அறையாகவோ, மறைவிடமாகவோ அல்லது சடங்கு நிகழ்வுகளுக்கான இடமாகவோ இருக்கக் கூடும்.[16]

இதே போன்ற, எனினும் உருவில் சிறிய சிங்கத் தலையுடனான மனிதச் சிற்பமொன்று இக்குகைக்கு அருகிலுள்ள வோகெல்கேர்ட் குகையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வுருவோடு சில விலங்கு உருவங்களும் புல்லாங்குழல்களும் கண்டெடுக்கப்பட்டன. எனவே, லோவென்மென்சு உருக்கள், முன் மேலைப் பழங்கற்கால மனிதர்களின் தொன்மவியலில் ஒரு முக்கிய இடம் வகித்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இவ் இரண்டாம் சிங்க உருவின் மூலம் ஒரிகுனேசியன் மக்கள் ஆவி வழிபாட்டினராயிருக்கலாமெனவும், முழுமையான குறியீட்டுத் தொடர்பாடல் மற்றும் பண்பாட்டு நவீனத்துவத்தின் வலுவான ஆதாரமாக இவ்வுரு கருதப்படவேண்டுமெனவும், தொல்பொருளியலாளர் நிக்கோலாசு கோனார்ட் தெரிவித்துள்ளார்.[17]

இவ்வுரு பிற்கால பிரெஞ்சுக் குகையோவியங்களுடன் சில ஒற்றுமைகளைக் காட்டுகின்றது. எடுத்துக்காட்டாக, பிரனீசிலுள்ள ட்ரோய் ஃபெயர் குகையின் மந்திரவாதி ஓவியம் அல்லது டோர்டோயினிலுள்ள குரோட் டெ கபில்லோ குகையின் காட்டெருமை மனிதன் ஓவியம் போன்றவற்றை குறிப்பிடலாம். இவ்வோவியங்களும் மனித உடல் போன்ற கீழ்ப்பகுதியையும் விலங்குத் தலைகளையும் கொண்ட கலப்பு உயிரினங்களைக் காட்டுகின்றன.[18][19]

உருவாக்கம்[தொகு]

வன்மையான மாமூத்து தந்தத்திலிருந்து உருவொன்றைச் செதுக்குதல் என்பது சிக்கலான மற்றும் நேரவிரயத்தை ஏற்படுத்தும் செயலாக இருக்கக்கூடும்.[c] இதே குகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரே அளவுடைய இன்னொரு தந்தத்தில், மேற் தாடையின் பற்குழியைச் சுற்றியுள்ள தோல் மற்றும் மெல்லிய எலும்பு என்பன பல்லின் மேற்பரப்பினூடாக வெட்டியெடுக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் உள்ளன. இப்பகுதி சுத்தியலால் அடிக்கப்பட்டிருக்கக் கூடும். இதன் முனை மிகவும் கடினமானதாயிருந்துள்ளது. எனவே, இது ஆப்பிறுக்கிப் பிளப்பதன் மூலம் வேறாக்கப்படவேண்டியிருந்தது.[21]

வுல்ஃப் எயின் மற்றும் குர்ட் வேர்பேர்கர் ஆகியோர், அக்காலப்பகுதியில் காணப்பட்ட கற்கருவிகளின் மூலம் சிங்க மனித உருவின் பிரதியாக்கத்தை ஆய்வு நோக்கில் உருவாக்கினர். தந்தத்தின் அடிப்பகுதியை அகற்ற பத்து மணிநேரம் பிடித்தது. கூர் நுனியுடனான சுரண்டியினால் உடல் செதுக்கப்பட்டது. இம் முயற்சியின் போது கல் உளிகள் அடிக்கடி தீட்டப்படவேண்டியிருந்தன. கையின் உட்புறத்தை உடற் பகுதியிலிருந்து வேறுபடுத்தும் செயற்பாட்டின்போது பல்வேறு கருவிகள் பயன்படுத்தப்படவேண்டியிருந்தன. தலை மற்றும் தோள்களைச் சீராக்கும் முயற்சியின் போது, தந்தத்தின் முத்துக்கள் வெட்டிச் செதுக்கப்படவேண்டியிருந்தன. பெரும்பாலும், இதற்காக இரண்டு கைகளும் பயன்படுத்தப்படவேண்டியிருந்தது. உருவுக்கான அடிப்படைச் செதுக்கல்களுக்கு 200 மணித்தியாலங்கள் பிடித்ததோடு, முழுமையான மீளுருவாக்கத்துக்கு 370 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் தேவைப்பட்டது.[d] பிரித்தானிய அருங்காட்சியகத்தின் பழங்கற்காலச் சேகரிப்புகளின் காப்பாளரான சில் கூக் குறிப்பிடுகையில், இவ்வுரு மெதுவான கதியில், பலமாதங்களாக குறிப்பிட்ட வேளைகளில் மாத்திரம் செதுக்கப்பட்டிருக்கக் கூடும். அல்லது, திறமை வாய்ந்த கலைஞர் ஒருவர், ஏனைய வாழ்க்கைச் செயற்பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு இவ்வுருவை மாத்திரம் செதுக்குவதற்காக அமர்த்தப்பட்டிருக்கவேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.[21]

அக்டோபர் 2017 பிபிசி ரேடியோ 4 இன் லிவிங் வித் த கோட்சு தொடரில், நீல் மக்கிரகர் கூக்கிடம்

"... தற்சார்பில் வாழுகின்ற, உணவு தேடல், நெருப்பை காத்துத் தக்கவைத்தல், கொடிய விலங்குகளிடமிருந்து பிள்ளைகளைப் பாதுகாத்தல், போன்ற இன்றியமையாத தேவைகளையுடைய ஒரு சமூகம் ஏன் ஒரு குறிப்பிட்ட நபரை இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து விலகி வேறோர் செயற்பாட்டில் நேரம் செலவழிக்க அனுமதிக்க வேண்டும்?"[22]

என வினவினார். அவர் அதற்கு மறுமொழியாக

"... காட்சிக்குப் புலப்படாத, இயற்கையின் இன்றியமையாத ஆற்றலுடனான ஒரு தொடர்பு பற்றியதாக இருக்ககூடும். பெரும்பாலும், நீங்கள் உங்களுடைய வாழ்வை வெற்றிகரமாக ஆக்கிக் கொள்ள அவ்வாற்றலை அமைதிப்படுத்தவோ அல்லது அதனுடன் தொடர்பு கொள்ளவோ வேண்டியிருக்கலாம்".[22]

என்று கருத்துத் தெரிவித்தார்.

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

 1. இம்மேற்கோளில் உள்ள உருப்படங்கள்:[6] கடின முயற்சியுடனான பல்லாண்டு மீளமைப்புக்குப் பின்னர் எவ்வளவு அடைவு பெறப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகின்றது.[7]
 2. இம் மேற்கோள்:[10] 1987-1988 மீளமைப்புக்குப் பின்னரான சிங்க மனித உருவையும், 2010 அகழாய்வில் கிடைத்த புதிய துண்டுகளையும் (சிவப்பு) அருங்காட்சியகத்தின் வைப்பில் உள்ள தனித் துண்டுகளையும் (பச்சை) காட்டுகின்றது.
 3. இம் மேற்கோள்:[20] மூலத் தந்தத்தின் உள்ளே உருவின் நிலையைக் காட்டுகின்றது. உருவின் கவட்டுப் பகுதி தந்தத்தின் பற்கூழ்க் குழியின் உச்சியுடன் பொருந்துகிறது. உருவின் நெடுக்கு வெட்டு அச்சு நரம்புத் தடத்தின் வழியே செல்வதோடு, தலை அதன் குறுகிய முடிவிடத்தில் காணப்படுகிறது. இவ்வாறான சிறப்பான நிலைகுறிப்பு, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒரு வேலைக்காக தந்தத்தின் ஒரு பகுதியை இதன் உருவாக்குனர் தேர்ந்தெடுத்திருக்கலாம் எனும் கருத்தைத் தருகிறது. (கூக், 2013)[21]
 4. உல்ம் அருங்காட்சியக வலைத்தளத்தில் 360 மணித்தியாலங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கூக் (2013)[21] 320 மணித்தியாலங்கள் எனக் கூறுகின்றார். எனினும், அருங்காட்சியகக் குழுவினரால் உருவாக்கப்பட்ட காணொலியில் 370+ மணித்தியாலங்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

 1. 14C dating - The age of the lion man Ulm Museum (in German)
 2. "Discovery: 1939". Löwenmenschen (in German). Ulm Museum.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 3. 3.0 3.1 3.2 Schulz, Matthias (5 December 2011). "Puzzle im Schutt". Der Spiegel. http://www.spiegel.de/spiegel/print/d-82612721.html. 
 4. 4.0 4.1 4.2 Lobell, Jarrett A. (March 2012). "New life for the Lion Man". Archaeology 65 (2). http://archive.archaeology.org/1203/features/stadelhole_hohlenstein_paleolithic_lowenmensch.html. 
 5. "Discovery: 1956". Löwenmenschen (in German). Ulm Museum.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 6. "Images of a preliminary lion-man reconstruction from 1980". Löwenmenschen.
 7. Adam, K.; Kurz, R. (1980) (in DE). Eiszeitkunst im süddeutschen Raum. 
 8. "Discovery: 1987". Löwenmenschen (in German). Ulm Museum.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 9. "Discovery: 2011" (in German). Ulm Museum.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 10. "X-ray computed tomographs". Löwenmenschen.
 11. 11.0 11.1 "Discovery: 2011". Löwenmenschen (in German). Ulm Museum.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 12. Petershagen, Henning (2 November 2013). "Löwenmensch ist gewachsen" (in DE). Südwest Presse இம் மூலத்தில் இருந்து 21 ஜூலை 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170721000033/http://www.swp.de/ulm/lokales/ulm_neu_ulm/loewenmensch-ist-gewachsen-11005726.html. 
 13. Duckeck, Jochen (10 திசம்பர் 2008). "Der Löwenmensch". Archäologie (in German). Archived from the original on 21 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 17 மே 2009. Joachim Hahn hatte die Figur als männlich betrachtet. Elisabeth Schmid kam zu dem Schluß, dass es sich um die Figur einer Frau mit dem Kopf einer Höhlenlöwin handele.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 14. Duckeck, Jochen (10 திசம்பர் 2008). "Lionheaded Figurine". Archaeology. பார்க்கப்பட்ட நாள் 17 மே 2009.
 15. "Meaning: Sex?". Löwenmensch (in German). Ulm Museum.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 16. "Meaning: Depot, hiding place, or cult place?". Löwenmensch (in German). Ulm Museum.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 17. Coolidge, Frederick L.; Wynn, Thomas (2011). The Rise of Homo sapiens: The Evolution of modern thinking. John Wiley & Sons. பக். 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4443-5653-3. https://books.google.com/books?id=pZHtlD7Ife8C&pg=PT174. 
 18. "Meaning: Animal and human being". Löwenmensch (in German). Ulm Museum.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 19. Claus-Joachim Kind, Nicole Ebinger-Rist, Sibylle Wolf, Thomas Beutelspacher, Kurt Wehrberger. "The Smile of the Lion Man. Recent Excavations in Stadel Cave (Baden-Württemberg, south-western Germany) and the Restoration of the Famous Upper Palaeolithic Figurine" (PDF). State Office for Cultural Heritage Baden-Württemberg. Archived from the original (PDF) on ஆகஸ்ட் 22, 2017. பார்க்கப்பட்ட நாள் December 22, 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: multiple names: authors list (link)
 20. "Image showing the positioning of the lion-man figurine within the original tusk".
 21. 21.0 21.1 21.2 21.3 Cook, J. (18 February 2013). Ice Age art: Arrival of the modern mind. The British Museum. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0714123332. 
 22. 22.0 22.1 "The Beginnings of Belief". Presenter: Neil MacGregor; Producer: Paul Kobrak. Living with the Gods. BBC. BBC Radio 4. 06:08 minutes in.

மேலதிக வாசிப்புக்கு[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lion-man
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:Prehistoric technology

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்க_மனிதன்&oldid=3628135" இலிருந்து மீள்விக்கப்பட்டது