சமகால ஓவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோன் மிரோ, டோனா இ ஓசெல், 1982, 22 × 3 மீ (72 × 9.8 அடி), பார்க் யோன் மிரோ, பார்சிலோனா, இசுப்பெயின்

சமகால ஓவியம் (Contemporary art) என்பது, இருபதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியிலும், இருபத்தோராம் நூற்றாண்டிலும் உருவாக்கப்பட்ட தற்கால ஓவியத்தைக் குறிக்கிறது. சமகால ஓவியர்கள், உலக மட்டத்துச் செல்வாக்குக்கு உட்பட்டதும், பண்பாட்டுப் பல்வகைமை கொண்டதும், தொழிநுட்ப அடிப்படையில் முன்னேறியதுமான ஒரு உலகில் வேலை செய்கின்றனர். இவர்களுடைய ஓவியங்கள், பொருட்கள், வழிமுறைகள், கருத்துருக்கள், எண்ணப் பொருள்கள் போன்றவற்றின் இயங்குநிலையில் உள்ள சேர்க்கையாக உள்ளது. இவற்றிடையேயான எல்லைகள் தொடர்ந்தும் மாறிக்கொண்டிருக்கும் நிலை காணப்படுகின்றது. பல்வகைப்பட்டனவும், வேறுபட்ட கோட்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியனவுமான சமகால ஓவியங்களை முழுமையாக நோக்கும்போது அவற்றில் சீர்மைத்தன்மை, ஒழுங்குபடுத்தும் கொள்கை, கருத்தியல் என்பன குறைவாகக் காணப்படுகின்றன. சமகால ஓவியம், தனிப்பட்ட மற்றும் பண்பாட்டு அடையளம், குடும்பம், சமுதாயம், தேசம் போன்ற பெரிய சூழல்சார்ந்த விடயங்களைக் கவனத்தில் எடுக்கும் பண்பாட்டு கருத்தாடல்களின் ஒரு பகுதியாக இருக்கின்றது.

ஆங்கிலம், தமிழ் மற்றும் வேறு பல மொழிகளில் "சமகாலம்" என்பதையும், "நவீனம்" என்பதையும் ஒத்த பொருள் கொண்டனவாகவே பொதுவாகப் புரிந்துகொள்கின்றனர். இதனால் சிறப்புத் துறையறிவு இல்லாதவர்கள் நவீன ஓவியம், சமகால ஓவியம் என்னும் இரண்டையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக்கொள்ளும் நிலை ஏற்படலாம்.[1]

செயற்பரப்பு[தொகு]

சிலர், சமகால ஓவியம் என்பது நம்முடைய காலத்தில் உருவாக்கப்பட்ட ஓவியம் என வரைவிலக்கணம் தருகின்றனர். இங்கே "நம்முடைய காலம்" என்பது, "நமது ஆயுட் காலம்" என்பதிலிருந்து வேறுபட்டது என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது. எனினும், இந்தப் பொதுமைப்படுத்திய வரைவிலக்கணம் சிறப்பு வரையறைகளுக்கு உட்பட்டது.[2]

ஒரு பொதுவான அடைமொழியாக அல்லாமல் "சமகால ஓவியம்" என்பதை ஒரு சிறப்பு ஓவிய வகையாகக் கொள்ளும் போக்கு, ஆங்கிலம் பேசும் நாடுகளில் நவீனவியத்தின் தொடக்ககாலம் முதலே இருந்துவந்துள்ளது. திறனாய்வாளர் ரோஜர் ஃபிரையும், வேறு சிலரும் சேர்ந்து, பொது அருங்காட்சியகங்களில் வைப்பதற்காக ஓவியங்களை வாங்குவதற்காக 1910 ஆம் ஆண்டில் சமகால ஓவியக் கழகம் என்னும் தனிப்பட்ட அமைப்பு ஒன்றைத் தொடங்கினர்.[3] இச்சொல்லைப் பயன்படுத்திய மேலும் பல அமைப்புக்கள் 1930களில் உருவாகின. எடுத்துக்காட்டாக, 1938 இல் ஒரு சமகால ஓவியக் கழகம் ஆசுத்திரேலியாவின் அடெலெயிடில் நிறுவப்பட்டது.[4] 1945க்குப் பின்னர் இவ்வாறான அமைப்புக்கள் அதிக அளவில் உருவாகின.[5] அக்காலத்தில் "சமகால ஓவிய நிறுவனம், பொசுட்டன்" போன்ற பல அமைப்புக்கள் "நவீன ஓவியம்" என்னும் பயன்பாட்டுடன் இருந்த தமது பெயர்களைச் "சமகால ஓவியம்" என்னும் தொடர் வரும்படி மாற்றின. நவீனவியம் என்பது ஒரு வரலாற்றுக் கலை இயக்கம் என வரைவிலக்களம் கொடுபட்டதாலும், பெரும்பாலான நவீன ஓவியங்கள் சமகாலத்தவையாக இல்லாதிருந்ததாலும் குறித்த மாற்றங்கள் ஏற்பட்டன. எது சமகாலம் என்பதற்கான வரைவிலக்கணம் இயல்பாகவே நிகழ்காலத்தைத் தளமாகக்கொண்டு நகர்ந்தபடி உள்ளது. "சமகாலம்" என்பதன் தொடக்க நாள் தொடர்ச்சியாக முன்னோக்கி நகர்கிறது. அத்துடன் சமகால ஓவியக் கழகம் 1910 இல் வாங்கிய ஓவியங்கள் இன்று சமகால ஓவியங்கள் எனக் கொள்ளப்படமாட்டா.

ஓவியப் பாணிகளில் மாற்றத்தைக் காட்டும் குறிப்பான காலப் பகுதிகளில் இரண்டாம் உலகப் போரின் முடிவு, 1960கள் ஆகியனவும் அடங்குகின்றன. 1960களில் இருந்து இயல்பான மாறும் கட்டம் காணப்படவில்லை. 2010 இல் சமகால ஓவியம் என்பதற்கான வரைவிலக்கணங்கள் வேறுபட்டு இருப்பதுடன், அவை பெரும்பாலும் துல்லியம் அற்றவையாகவும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. NYU Steinhardt, Department of Art and Arts Professions, New York
  2. Esaak, Shelley. "What is "Contemporary" Art?". About.com. Archived from the original on 19 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 April 2013.
  3. Fry Roger, Ed. Craufurd D. Goodwin, Art and the Market: Roger Fry on Commerce in Art, 1999, University of Michigan Press, ISBN 0472109022, 9780472109029, google books
  4. Also the Contemporary Arts Society of Montreal, 1939–1948
  5. Smith, 257–258
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமகால_ஓவியம்&oldid=3731763" இலிருந்து மீள்விக்கப்பட்டது