கோவேங்கைப் பெருங்கதவனார்
Appearance
கோவேங்கைப் பெருங்கதவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 134.
- புலவர் பெயர் விளக்கம் (பாடற் பொருளால் பெயர் பெற்ற புலவர்)
- இந்தப் பாடலில் தலைவி 'கோவேங்கை' மரமாக உள்ளத்தில் கொண்டு பேசப்படுகிறாள். அந்தக் கோவேங்கை தன் காதலனைப் பாம்பு என்று பெருங்கதம்(=பெருங்கோவம், பெருஞ்சினம்) கொண்டு சொல்கிறாள். இப்படிப்பட்ட கருத்துடைய பாடலைப் பாடியதால் பாடலின் உள்ளுறையைக் கருத்தில் கொண்டு இவரைக் 'கோவேங்கைப் பெருங்கதவனார்' என்று குறிப்பிட்டுள்ளனர்.
- பாயும் வேங்கையின் உருவத்தைத் தன் வீட்டுக் கதவில் கொண்டிருந்ததால் இப்பெயர் பெற்றார். (வேங்கை- சோழரின் கொடிச்சின்னம்)
- வேங்கை மரத்தால் செய்யப்பட்ட கதவைத் தனு வீட்டு வாயிலுக்கு வைத்திருந்ததால் இப் பெயர் பெற்றார்.
- திணை - குறிஞ்சி
- பாடல் சொல்லும் செய்தி
- தலைவன் பிரிந்திருந்தபோது தலைவியால் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கவலை கொள்கிறாள். தோழி அவளைத் தேற்றுகிறாள். தேற்றும் தோழிக்குத் தலைவி சொல்கிறாள்.
- அம்ம வாழி தோழி! நம்மிடமிருந்து பிரியாமல் இருந்தால் நல்லது. வேங்கைமரம் சிறிய பாறையைப் பெயர்த்துகொண்டு வளர்ந்தது. அது புலம்பும்படி அருவி பூக்கள் உதிரும்படி தாக்கிக்கொண்டு விழுந்தது. அந்த அருவி தொலைவிலிருந்து நோக்கும்போது பாம்பு போல் தோன்றுகிறது. அவன் அந்த தலைநாட்டுக்குத் தலைவன். அவன் பிரியாமல் இருந்தால் நல்லது.
- உள்ளுறை
- தலைவியை வேங்கைமரம் என்றும், தலைவனை அருவி என்றும் பொருத்திப் பார்த்தால் உள்ளுறை விளங்கும். அருவி வேங்கைப் பூக்களை உதிர்ப்பது இனிமைதான். தொலைவிலிருந்து பார்க்கும்போது அந்த அருவி பாம்பு போல் தெரிவது மாதிரி தலைவன் தொலைவில் உள்ளபோது பாம்புபோல் இருக்கிறானாம்.