உள்ளடக்கத்துக்குச் செல்

கோலப் மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலப் மா
தாய்மொழியில் பெயர்கோலப் சுந்தரி தேவி
பிறப்புகோலப் சுந்தரி
பாக்பசார், கொல்கத்தா
இறப்பு(1924-12-19)19 திசம்பர் 1924
கொல்கத்தா
தேசியம் இந்தியா
மற்ற பெயர்கள்அன்னபூர்ணாதேவி, கோலப் மா
பணிஇல்லத்தரசி
அறியப்படுவதுஆன்மீகப் பணி
பிள்ளைகள்ஒரு மகன், ஒரு மகள்

கோலப் மா (Golap Ma) (தமிழில்: அன்னை கோலப்) இராமகிருஷ்ணரின் இல்லறச் சீடராகவும், அவரது ஆன்மீகத் துணைவியாரும் இராமகிருஷ்ண கட்டளைக்கான புனித அன்னையுமான சாரதா தேவியின் முக்கியமானத் தோழியாகவும் இருந்தார். யோகின் மா இவரது மற்ற நிலையான தோழியாவார். இவருடைய உண்மையான பெயர் அன்னபூர்ணா தேவி அல்லது கோலப் சுந்தரி தேவி என்பதாகும்.[1] இராமகிருஷ்ணரின் நற்செய்தியில் இவர் "துயரமடைந்த பிராமணப் பெண்மணி" என்றும் குறிப்பிடப்பட்டார். இராமகிருஷ்ண இயக்கத்தின் ஆரம்ப வளர்ச்சியில் இவர் மிக முக்கிய பங்கு வகித்தார். மேலும், கொல்கத்தாவில் சாரதா தேவி தங்கியிருந்த உத்போதனில் அவர் இறக்கும் வரை தங்கியிருந்தார். இராமகிருஷ்ண ஆணையை பின்பற்றும் பக்தர்களிடையே இவர் 'கோலப் மா' என்று பிரபலமாக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

இவரது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றிய தகவல்கள் மிகக் குறைவாகவே கிடைக்கப்படுகிறது. தவிர இவர் வடக்கு கொகத்தாவின் பாக்பசார் பகுதியில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். அநேகமாக 1840களில் பிறந்திருக்கலாம். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். கொல்கத்தா, பதுரியாகாட்டாவில் உள்ள இரவீந்திரநாத் தாகூரின் குடும்பத்தைச் சேர்ந்த சௌரிந்திர மோகன் தாகூரை சந்தித்து மணந்தார். இருப்பினும், இவர் தனது கணவர், ஒரே மகன், ஒரே மகள் சண்டி ஆகியோரை விரைவாக இழந்தார். மேலும், இந்த இழப்பின் காரணமாக மிகவும் வருத்தப்பட்டார். இவருடைய அண்டை வீட்டாரான யோகின்மா, இவரை இராமகிருஷ்ணரிடம் அழைத்து வந்தார்.[2]

இராமகிருஷ்ணரின் தாக்கம்

[தொகு]

துயரத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இவர் 1885ஆம் ஆண்டு இராமகிருஷ்ணரைச் சந்தித்தார். அவர் இவரது துயரைத் தணித்து சாரதா தேவிக்கு அறிமுகப்படுத்தினார். விரைவில் சாரததேவியின் நெருங்கிய தோழியாக மாறினார்.[3] இராமகிருஷ்ணரின் நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, 28 சூலை 1885 அன்று கோலாப் மா வீட்டிற்கு இராமகிருஷ்ணர் ஒரு முறை சென்றுள்ளார்.[4] இராமகிருஷ்ணரின் முக்கிய பெண் சீடர்களில் ஒருவரான கோலப் மா, அவருக்கான உணவை எடுத்துச் செல்வது, அவரது அறையை சுத்தம் செய்வது போன்ற தனிப்பட்ட சேவையை செது வந்தார்.[2] இராமகிருஷ்ணரின் உடல்நலக் குறைவின் போது, சாரதா தேவியின் தொடர்ச்சியான தோழியாக முதலில் சியம்புகூரிலும் பின்னர் காசிபூரிலும் அவருக்கு முதலில் அர்ப்பணிப்புடன் சேவை வழங்கினார், .

சாரதா தேவியின் தோழியாக

[தொகு]

இராமகிருஷ்ணர் மறைந்த பிறகு இவர், சாரதா தேவியுடன் வாரணாசி, பிருந்தாவனம் போன்ற புனித இடங்களுக்குச் சென்றார். அதன்பிறகு கமர்புகூரில் சாரதா தேவியின் மோசமான வறுமையைப் பற்றி முதன்முதலில் அறிவித்தவர்களில் ஒருவரான இவர் 1888இல் அவரை கொல்கத்தாவுக்கு அழைத்து வருவதில் முக்கிய பங்கு வகித்தார். சாரதா தேவி இவரை "விஜயா" என்றும், யோகின் மா இவரை "ஜெயா" என்றும் அன்போடு அழைத்தனர்.[5] கொல்கத்தாவில் தங்கியிருந்த சாரதா தேவியுடன் இவரும் தங்கியிருந்தார். அவருடன் புரிக்குச் சென்றார். பின்னர், இராமேசுவரம், சென்னை, தென்னிந்தியாவின் பிற இடங்களுக்கும் உடன் சென்றார். அதைத் தொடர்ந்து, சாரதா தேவிக்கு 'உத்போதன்' என்ற வீடு கட்டப்பட்டபோது, சுவாமி சாரதானந்தரால், கோலப் மா நிரந்தரமாக அங்கு தங்கினார். இவர் சாரதா தேவியின் கிராமமான ஜெயராம்பதிக்கும் பயணம் செய்தார். சாரதா தேவியின் தொடர்ச்சியான தோழியாக, இவர் பல வீட்டு வேலைகளைச் செய்வார். மேலும் அவரது பக்தர்களுடனான தொடர்புகளின் முக்கிய புள்ளியாகவும் பணியாற்றினார். சுவாமி விவேகானந்தர் உட்பட சில ஆண் பக்தர்களிடம் சாரதா தேவி இவர் மூலம் பேசுவார்.

கடைசி காலங்கள்

[தொகு]

இவர் கனிவானவராகவும் தொண்டு புரிபவரகவும் இருந்தார். தனது கடைசி வருடங்களில் ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தார். தன்னுடைய வருமானத்தில் பாதி ஏழைகளுக்கும் அவர்களின் தொண்டுக்காகவும் செலவிடப்பட்டது.[3] இவருடைய வாழ்க்கை எளிமையானது ஆனால் கடினமானது. மகாபாரதம், பகவத் கீதை போன்ற நூல்களைப் படிக்கக் கூடிய அளவு கல்வியறிவு பெற்றிருந்தர்.[6]

21 சூலை 1920 இல் சாரதா தேவி இறந்த பிறகு, யோகின் மா, சுவாமி சாரதானந்தா ஆகியோருடன் சேர்ந்து இவரும் சாரதா தேவியின் பக்தர்களுக்கு முக்கிய ஆன்மீக நபரானார். இவர் 19 திசம்பர் 1924 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. People in Gospel of Sri Ramakrishna
  2. 2.0 2.1 Women disciples
  3. 3.0 3.1 Women Saints of East and West, by swami Ghanananda, published by Vedanta Press, Hollywood, 1955
  4. The Gospel of Sri Ramakrishna, by M, translated by Swami Nikhilananda, published by Ramakrishna-Vivekananda Center, New York, 1942
  5. Holy Mother Sri Sarada Devi, by Swami Gambhirananda, published by Sri இராமகிருட்டிண மடம், Mylapore, Madras, 1977
  6. "Extract from They Lived with God". Archived from the original on 6 January 2014. பார்க்கப்பட்ட நாள் 6 January 2014.

வெளிப்புற ஆதாரங்கள்

[தொகு]
  • They Lived with God, by Swami Chetanananda, published by Vedanta Society of St. Louis
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலப்_மா&oldid=3636852" இலிருந்து மீள்விக்கப்பட்டது