கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் ஒரு சேர மன்னன். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 168.
பாடல் தரும் செய்தி
[தொகு]- திணை - குறிஞ்சி
தலைவன் தலைவியைப் பெற்றுத் துய்க்க இரவில் வருகிறான். தலைவி தன்னை அவனுக்குத் தரவில்லை. அவன் வரும் வழியில் அவனுக்கு உள்ள துன்பத்தை எண்ணிக் கலங்குவதாகக் கூறுகிறாள். (திருமணம் செய்துகொண்டு அவளை அடையவேண்டும் என்பது கருத்து)
குழுமூர் உதியன் அட்டில் (அன்ன தான மடம்)
[தொகு]உதியன் என்னும் பெயர் சேர மன்னனை நினைவூட்டுகிறது. உதியன் குழுமூரில் வாழ்ந்த ஒரு வள்ளல். இவனது அட்டில்-மடத்தில் உணவு உண்ணும் மக்களின் ஒலி இரவும் பகலும் கேட்டுக்கொண்டேயிருக்குமாம். இந்த ஒலி போல ஒலித்துக்கொண்டிருக்கும் அருவி சாயும் மலைவழியில் தலைவன் இரவில் தலைவியை நாடி வருகிறானாம்.
குழுமூர்ச் சூழல்
[தொகு]குழுமூரை அடுத்திருந்த குன்றத்தில் ஆனிரை (பசுவினக் கூட்டம்) மேய்ந்துகொண்டே இருக்கும்.
வழியில் இன்னல்
[தொகு]எதிரொலி கேட்கும் அந்தச் சிலம்பில் யானை குட்டி போட்டிருக்குமாம். ஆண் யானை அந்தக் குட்டியைக் காக்குமாம். அங்குள்ள அளை என்னும் கற்குகையில் இருந்துகொண்டு வரிப்புலி உரறுமாம் (உருமுமாம்). அந்த வழியில் அங்குப் பழக்கப்பட்ட கானவர் மக்களே செல்வதில்லையாம். அந்த வழியில் தலைவன் வருதல் தலைவிக்குக் கவலை அளிக்கிறதாம்.
தலைவியின் வேண்டுதல்
[தொகு]வான் தோய் வெற்ப! ஆன்றல் வேண்டும் (பொறுத்துக்கொள்ளுதல் வேண்டும்). யாமப் பொழுதை இன்று உன்னோடு போக்கினால் நாளைய நிலையை எண்ணி என் உள்ளம் துன்புற்றுக்கொண்டே இருக்கும். எனவே இரவில் வரவேண்டாம்.