கோகக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோகக் (ஆங்கிலம்: Gogak; கன்னடம் : ಗೋಕಾಕ) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெல்காம் மாவட்டத்தில் உள்ள தாலுகா ஒன்றின் தலைமையகம் ஆகும். இது பெல்காமில் இருந்து 70 கி.மீ தொலைவில் கட்டபிரபா மற்றும் மார்க்கண்டேயா ஆகிய இரண்டு நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கட் தொகை சுமார் 135,773 ஆகும்.[1] இப்பிராந்தியத்தில் கன்னட மொழி மற்றும் மராத்தி மொழி பேசப்படுகின்றன.

கோகக் நகரமானது ஒருபுறம் மலைகளின் வரம்பாலும், மறுபுறம் பரந்த கறுப்பு மண்ணாலும் சூழப்பட்டுள்ளது. கட்டப்பிரபா நதி கோகக் அருவியை உருவாக்குகிறது. காலனித்துவ காலத்திலிருந்து இந்தியாவில் மிகப்பெரிய நூல் ஏற்றுமதி தொழிற்சாலையான கோகக் ஆலைக்கு மின்சாரம் வழங்க நீர்வீழ்ச்சியின் கீழ் உள்ள ஒரு நீர்மின் நிலையம் பயன்படுத்தப்படுகிறது. கட்டப்பிரபாவின் துணை நதியான மார்க்கண்டேயா நதி 43 அடி படி வாரியான மலை தகடுகள் வழியாக கோடாசினமலாகி அருவியை உருவாக்குகிறது.

புவியியல்[தொகு]

பெல்காம் மாவட்டத்தில் பெல்காம் நகரிற்கு அடுத்தபடியாக கோகக் இரண்டாவது பெரிய நகரமாகும். இந்நகரம் மேற்குத் தொடர்ச்சி மலையால் சூழப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் தண்ணீரைக் கொண்ட கட்டபிரபா நதி சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் உள்ளூர் மக்களுக்கு விவசாய மற்றும் குடிநீரின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த நகரம் கர்நாடகாவின் வடமேற்கு பகுதிகளில் அமைந்துள்ள பெல்காம் மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. பெல்காம் மாவட்டத்தின் வடக்கு எல்லையில் மகாராட்டிரம் மாநிலமும், மேற்கு எல்லையில் கோவா மாநிலமும் அமைந்துள்ளன. இந்த நகரம் கர்நாடக தலைநகரான பெங்களூரிலிருந்து 540 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

காலநிலை[தொகு]

பெல்காம் மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கோகக் நகரமானது பருவமழை தவிர்த்து ஆண்டு முழுவதும் மிதமான வெப்ப காலநிலைக்கு நன்கு அறியப்பட்டதாகும். கோகாக் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைகளில் இருந்து மழையைப் பெறுகின்றது. திசம்பர், சனவரி மாதங்கள் பொதுவாக ஆண்டின் ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும்போது குளிராக இருக்கும். குளிரான மாதமான சனவரி மாதத்தில் சராசரி குறைந்த வெப்பநிலை 15.2 °C ஆகவும், வெப்பமான மாதமான ஏப்ரல் மாதத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 35.7. C ஆகவும் இருக்கும். குளிர்கால வெப்பநிலை அரிதாக 14 °C (54 °F) வெப்பநிலைக்கு கீழே குறைகிறது. மேலும் கோடை வெப்பநிலை எப்போதாவது 34-35 C ஐ விட அதிகமாக இருக்கும்.[2][3]

புள்ளிவிபரங்கள்[தொகு]

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி[4] கோககின் மக்கட் தொகை 135,166 ஆகும். மொத்த மக்கட் தொகையில் ஆண்கள் 51% வீதமும், பெண்கள் 49% வீதமும் உள்ளனர். மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 67% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்.

கன்னடம் இப்பகுதியின் பொதுவான மொழியாகும். இருப்பினும் இந்தி , மராத்தி மற்றும் உருது போன்ற பிற மொழிகளும் பேசப்படுகின்றன.

கோகாக்கில் பெரும்பான்மையான மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள். பெல்காம் மாவட்டத்தில் இந்துக்கள் 84.59% வீதமும், முஸ்லிம்கள் 10.4% வீதமும், சமணர்கள் 4.1% வீதமும், கிறிஸ்தவர்கள் 0.42% வீதமும் காணப்படுகின்றனர். மேலும் சீக்கியர்களும், பௌத்தர்களும் பிற மக்களும் வசிக்கின்றனர்.

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகக்&oldid=2868416" இருந்து மீள்விக்கப்பட்டது