கொடுமணல் தங்கம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடுமணல் தங்கம்மன் கோயில் தமிழ்நாடு, ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல் பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோயில் ஆகும்.

வரலாறு[தொகு]

கொங்கு நாடு என்பது தற்போதைய நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், திருச்சி, கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தின் தெற்குப் பகுதியையும் உள்ளிட்ட நிலப்பரப்பாக இருந்தது.

கொங்கு நாடு மலைப் பகுதிகளைக் கொண்டதாகவும் நிலப்பரப்புகளில் காடுகள் நிறைந்த வனப்பகுதியாகவே இருந்திருகிறது. இப்பகுதியில் ஓர் சில முக்கிய ஊர்கள் மட்டுமே இருந்து அதில் மக்கள் வாழ்ந்து வந்தனர். காட்டுப்பகுதியில் வேடர், வேடுவர் போன்ற இனத்தார்கள் வாழ்ந்தனர். இவர்கள் மிருகங்களை வேட்டையாடியும் பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றையும் உணவுக்காக பயன்படுத்தி வாழ்ந்து வந்தனர். இந்த கொங்கு நாட்டுப் பகுதியை அவ்வப்போது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள் ஆளுகையின் கீழ் வைத்திருந்தனர் என்பது வரலாறு கூறும் செய்தியாகும்.

சோழ, நாட்டுப்பகுதியில் இருந்து கொங்கு நாட்டுப் பகுதியில் குடியேறிய மக்கள் அதுசமயம் கொங்குநாட்டுப் பகுதியை தாரபுரத்திலிருந்து ஆட்சி செய்து வந்த சேர மன்னர்களின் அனுமதி பெற்று பல்வேறு இடங்களில் குடியமர்ந்தார்கள். இவ்வகையில் சேலம் பகுதி சிந்தாளந்தூரில் இருந்து சேரன் குலத்தவரும், பழனி பகுதி மானூரில் இருந்து பாண்டியன் குலத்தவரும், ஈரோடு பகுதி எலுமாத்தூரில் இருந்து பனங்காடை குலத்தவரும் காஞ்சிமாநதி என்கிற நொய்யல் கரையில் கொடுமணல் கிராமத்தில் குடியேறினார்கள் என்றும் அப்போது இங்கு வாழ்ந்து வந்த கொங்கச் செட்டியார்களிடமிருந்து பொருள் கொடுத்து நில உரிமை பெற்றனர் என்றும் கொடுமணல் வரலாற்றுச் சுவடிகள், பட்டயங்கள் மூலம் தெரியவருதிறது.

குலதெய்வம்[தொகு]

இவ்வண்ணம் குடியேறிய மக்கள் கொடுமணல் பகுதியில் நொய்யல் ஆற்றில் சோழமன்னரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் அணையின் கரையில் தாங்கள் முன்னாளில் குடி இருந்த ஊர்களில் இருந்து கொண்டு வந்த தெய்வத் திருவுருவங்களை வைத்து கோயில் கட்டி குல தெய்வமாக வழிபட்டு வந்தார்கள்.

முற்காலத்தில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் அவர்களின் தென்னாட்டு ஆட்சிப் பிரதிநிதியாக இருந்த நஞ்சராய உடையார் என்பவர் காலத்தில் பழையகோட்டை மன்றாடியார் மரபினரான பயிரன் கூட்டத்தார்களும் கொடுமணல் நில உரிமை பெற்றனர் என்று பழைய கோட்டை வரலாறு கூறுகிறது.

தென்காசிப்பகுதி வாதவனல்லுரில் இருந்து காங்கயம் பகுதியில் குடியேறிய அகமுடைய இன கணக்கன் கூட்டாத்தார் சுமார் 380 ஆண்டுகளுக்கு முன் பழையகோட்டை மன்றாடியார் வழிவந்த விசுவனாதச்சர்கரை மன்றாடியார் அவர்களிடமிருந்து கொடுமணலில் நில உரிமை பெற்றதாக கணக்கன் கூட்டத்தார் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் நொய்யல் அணை ஓரத்தில் நாச்சிமார் என்ற பெயரில் கன்னிமார் வைத்து வழிபாடு செய்து வந்தாதாகவும் மேற்படி பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்படியாக கொடுமணல் கிராமத்தில் காணி பெற்ற கொங்கு வேளாளர்களில் சேரன், பாண்டியன், பனங்காடை குலத்தவர்களும் அகமுடைய இனத்தவரில் கணக்கன் கூட்டத்தாரும் சப்தமாதக்களை குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு வந்தனர் என்பது பழங்காலப் பாடல்களிலும் பட்டயங்களிலும் காணப்படுகிறது. அத்தெய்வம் தங்கைமார், கன்னிமார், தங்கமார், தங்கமாரம்மன் என்று பல பெயர்களில் வரலாற்றுச் சான்றுகளிலும் பழம்பாடல்களிலும் கூறப்பட்டுள்ளது. பிற்காலத்தில் தங்கம்மன் என்கிற பெயர் வழக்கில் வந்து அப்பெயரே சப்தமாதக்களுக்கும் (ஏழு அம்மன்) பொதுப்பெயராக நிலைத்து விட்டது.

தேக்கநிலை[தொகு]

பிற்காலத்தில் நொய்யல் ஆற்று அணை உடைந்து கொடுமணல் பகுதியில் விவசாயம் செழிப்பின்றி வறட்சி ஏற்பட்டதின் காரணமாக இங்கு வாழ்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு முக்கியமாக மேற்குப் பகுதிகளில் சென்று குடியேறி வாழ்ந்து வரலாயினர். மேலும் இவர்கள் குடியேற்றம் பல்வேறு பகுதிகளுக்கு விரிந்து சென்றது.

நாளாவட்டத்தில் கொடுமணல் கிராமப் பகுதி நொய்யல் ஆற்றை எல்லையாகக் கொண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு தம்மரெட்டிபாளையம் கிராமப் பகுதியில் தங்கம்மன் ஆலயம் சேர்ந்ததாலும், போக்குவரத்து வசதி இல்லாததாலும் உள்ளூரில் இருக்கும் குல மக்கள் ஆலயத்தை சரியாக பராமரிப்பு செய்யாததாலும் தங்கம்மன் ஆலயம் பின்னப்பட்டுப் போய் சிதைந்த நிலை ஏற்பட்டது.

ஆயினும் ஆங்காங்கு வாழ்கின்ற மேற்படி குலங்களைச் சேர்ந்த மக்கள் அவ்வப்போது தங்கம்மன் ஆலயத்துக்கு வந்து வழிபாடு செய்து கொண்டு இருந்தனர்.

புதிய திருப்பணி[தொகு]

இந்நிலையில் சி.வெங்கிட்டாபுரம் செ. ரங்கசாமி என்பவரின் முயற்சியால் நான்கு குலத்தவர்களின் ஒத்துழைப்புடன் 1975 நவம்பர் 3 இல் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பொறுப்பில் நான்கு குல மக்களின் பெரும் பொருள் உதவி பெற்று தங்கம்மனுக்கு புதிய திருக்கோயில் அமைக்கப்பட்டது. மேலும் திருமதில் தீர்த்தக்கிணறு தங்கும் இடங்கள் ஏற்படுத்தப்பட்டது. ஆலயத்துக்காக நிலம் வாங்கி கிணறு வெட்டி தென்னந்தோப்பு வைக்கபட்டது. புதிய திருக்கோயில் திருக்குட நீராட்டு விழா 1979 பெப்ரவரி 2 அன்று நடைபெற்றது.

தொடர்ந்து திருப்பணிகள்[தொகு]

நான்கு குலத்தவர்களும் சேர்ந்து கொடுமணல் அருள்மிகு தங்கம்மன் ஆலய நற்பணிச் சங்கம் என்கிற பெயரில் சங்கம் பதிவு செய்யப்பட்டு தங்கம்மன் சிறப்பு பூஜைகளும், திருவிழாக்களும் இதர திருப்பணிகளையும் செய்து வருகிறது.

கோயிலைச் சுற்றிலும் உள் பிரகாரம் கல்தளம் அமைக்கப்பட்டது. மேலும் திருக்கோயிலின் மூன்று வாயில்களும் புதிய முன் மண்டபங்களும் பிரகாரத்தில் புதிய குதிரை வாகனங்களும் அமைக்கப்பட்டது. மேலும் திருக்குட நீராட்டு செய்யப்பட்டு பனிரெண்டு ஆண்டுகளுக்குள் மறுமுறையும் திருக்குட நீராட்டு செய்ய வேண்டும் என்கிற நியதியின் படி 21-2-1991-ல் இரண்டாம் முறையாக அருள்மிகு தங்கம்மன் திருக்கோயில் திருக்குட நீராட்டுப் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தங்கம்மன் கோயிலுக்கு வரும் வழியில் அலங்கார வளைவும், தங்கம்மன் கோயில் அருகே மணி மண்டபமும் கட்டப்பட்டது. 1997-ல் முன்னாள் திருப்பணிக்குழுத் தலைவர் நினைவாக அன்னதான மண்டபம் கட்டப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கான விடுதியும், பூஜை செய்யும் அர்ச்சகருக்கு கோயில் அருகே வீடும் கட்டப்பட்டது. ஆற்றுக் கன்னிமார், புற்றுநாகர், செல்வ விநாயகர் திருக்கோயில்கள் புதியதாக கட்டி தங்கம்மன் ஆலயத்தை மேலும் அழுகுற திருப்பணி செய்து 6-2-2003-ல் மூன்றாவதாக திருக்குட நீராட்டுப் பெருவிழா வெகுசிறப்பாக செய்யப்பட்டது.

அருள்மிகு தங்கம்மன் திருக்கோயில் உடன் இணைந்த அருள்மிகு அக்னீஸ்வரர் – திரிபுரசுந்தரியம்மன் கோயில்கள் நொய்யல் ஆற்று ஒரத்துப்பாளையம் அணையில் மூழ்கி விட்ட படியால் தங்கம்மன் கோயில் அருகே மேற்படி சுவாமிகளுக்கும், அதற்குரிய பரிவார தெய்வங்களுக்கும் புதிய கோயில்கள் கட்டி 24-6-2005-ல் திருக்குட நீராட்டு விழா சிறப்பாக செய்யப்பட்டது.

தங்கம்மன் கோயிலுக்கு வரும் வழியில் அலங்கார வளைவும், தங்கம்மன் கோயில் அருகே மணி மண்டபமும் கட்டப்பட்டது. பக்தர்கள் பொங்கல் வைப்பதற்கு வசதியாக மண்டபம் கட்டப்பட்டது.

போக்குவரத்து[தொகு]

தினசரி திருப்பூரிலிருந்து அரசு நகரப் பேருந்துகள் தங்கம்மன் கோயிலுக்கு வந்து போகின்றன.

திருவிழாக்கள்[தொகு]

ஆண்டு தோறும் ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப் பண்டிகை விழாவும், அதற்கு அடுத்துவரும் புதன்கிழமை பொங்கல் திருவிழாவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அன்னதானம்[தொகு]

தங்கம்மன் ஆலயத்தில் நடைபெறுகின்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கும், திருவிழக்களுக்கும் வருகின்ற பக்தர்களுக்கு தொடர்ந்து கடந்த 20 வருடங்களாக அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது.

அருள்மிகு தங்கம்மன் திருவருட்பாடல்கள்[தொகு]

காப்பு[தொகு]

அகர முதலைங்கரன் ஆறுமுகன் பொன்னம்பலவன்
அம்பிகை திருச்சிற்றம்பலவன் திரு அரங்கன்
தங்கம்மன் தாயவர்களின் அடித்தாமரைகள் சிரமேற் காப்பு
-ஸ்ரீ வித்யா அம்மா

தங்கம்மன் துதி[தொகு]

ஓம் பிராமணி போற்றி
ஓம் நாராயணி போற்றி
ஓம் மகேசுவரி போற்றி
ஓம் கெளமாரி போற்றி
ஓம் வராகி போற்றி
ஓம் இந்திராணி போற்றி
ஓம் ருத்திராணி போற்றி
ஓம் சப்தமாதா தேவி போற்றி
ஓம் தங்கம்மன் தாயே போற்றி

பழங்கால எட்டுச்சுவடிப் பாடல்[தொகு]

காஞ்சிமாநதி தன்னிலே வளர் கண்ணிமாமயி லன்னமே
கருதலாடரும் இனிய வேடரும் பணிபதாம்புய பூரணி
வாஞ்சயாகவே மலர் பதந்தனை மனதில் வைத்திடும் அன்னையே
வளமையாகவே பவிசு பாக்கியம் அருளுகாரணிவல்லியே
பூஞ்சோலை நீள் வாவி தாமரைப் பொய்கை நீறு நீராடியே
புண்ணியரூபி புரந்தரி சத்தி பூரணி கவுமாறியே
ஆய்ந்தமிழ் அறுபத்து நாலுகலைக் கானவள் நீருபியே
ஆதி கொடுமணல் தன்னிலே வளர் ஆயி தங்கமரம்மனே


மேற்கோள்கள்[தொகு]