குஸ்டாவ் பெச்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஸ்டாவ் ஃபெச்னர்
பிறப்புகுஸ்டாவ் தியடோர் ஃபெச்னர்
(1801-04-19)ஏப்ரல் 19, 1801
குரோப் சார்சன் (முஸ்காவ்அருகில்), Saxony, Holy Roman Empire
இறப்புநவம்பர் 18, 1887(1887-11-18) (அகவை 86)
லிபிசிங், சேக்சோனி
தேசியம்ஜெர்மன்
துறைஉளவியல்
பின்பற்றுவோர்Gerardus Heymans
Wilhelm Wundt
William James
Alfred North Whitehead
Charles Hartshorne

குஸ்டாவ் தியடோர் ஃபெச்னர் (Gustav Theodor Fechner (/ˈfɛxnər/; ஜெர்மன்: [ˈfɛçnɐ]; ஏப்ரல் 19, 1801 – நவம்பர் 18, 1887) என்பவர் ஜெர்மனியை சேர்ந்த கவிஞர், தத்துவமேதை, என பன்முகம் கொண்டவர். இவர் உளவியற்பியலின் தந்தையாக கருத்ப்படுகிறார்.[1][2]

வாழ்கையும்,கல்வியும்[தொகு]

இவர் ஜெர்மனியின் முஸ்காவ் நகருக்கு அருகே குரோப் ஸார்சன் என்ற ஊரில் 1801இல் பிறந்தவர் இவரது தந்தை ஒரு பாதிரியார். ஆன்மிகப் பிண்ணணி கொண்ட குடும்பத்தில் வளர்ந்தபோதிலும், பிற்காலத்தில் இவர் நாத்திகவாதியாகத் திகழ்ந்தார்.[3]

பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, லெய்ப்சிக், டிரஸ்டென் பல்கலைக்கழகங்களில் 1817இல் மருத்துவம் பயில சேர்ந்து மருத்துவம் கற்றார்.

பணிகள்[தொகு]

1823ஆம் ஆண்டு லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் இயற்கை தத்துவப் பாடத்தில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அப்போது, அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகளை மொழிபெயர்த்தல்,பாடப் புத்தகங்கள் வெளியிடுதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டார்.

பிறகு,1834இல் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இயற்பியலிலும் வேதியியலிலும் ஆய்வுகளை மேற்கொண்டார். நிறம், பார்வை குறித்து 1839-ல் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது இவருக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டது.

ஆய்வுகள்[தொகு]

இவரது பார்வை குணமான பிறகு மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கினார். உடலும் மனமும் வெவ்வேறாக இருந்தாலும் ஒரே உண்மையின் இரு வேறு பக்கங்கள் என்றார். அந்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்டே தன் ஆய்வைத் தொடங்கினார்.

உண்மையில் இவை இரண்டுக்கும் இடையிலான துல்லியமான கணிதவியல் தொடர்பைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த ஆராய்ச்சியின் விளைவாக உலகப் புகழ்பெற்ற வெபர்-ஃபெச்னர் விதி (Weber-Fechner Law) பிறந்தது. “உணர்வின் தீவிரம் எண்கணிதத் தொடரில் (Arithmetical Progression) அதிகரித்தால், அதைத் தூண்டும் ஆற்றல் பெருக்குத் தொடரில் (Geometrical Progression) அதிகரிக்க வேண்டும்” என்றார்.

இந்த விதி சில குறிப்பிட்ட வரையறைக்குள் இருந்தாலும், பின்னாளில் வந்த பல ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வில்ஹெம் வூண்ட், ஹெர்மன் வான் ஹெம்ஹோல்ட்ஸ் ஆகியோருடன் சேர்ந்து நவீன சோதனை உளவியல் என்ற புதிய துறையை அறிமுகப்படுத்தினார்.

மனம் எளிதாக அளவிட முடிகிற, கணித தீர்வுக்குள் அடங்கும் ஒன்று என்பதால், உளவியல் அளவீட்டு அறிவியலுக்குள்ளும் அடங்கும் சாத்தியக்கூறு உள்ளது என்பதை எடுத்துக் கூறினார். இதுகுறித்து தான் கண்டறிந்தவற்றை பொது நிகழ்ச்சிகளில் விளக்கிப் பேசினார். தனது ஆய்வுகள் அடங்கிய பல கட்டுரைகள், புத்தகங்களை வெளியிட்டார்.

அறிவியல் ஆராய்ச்சி மட்டுமின்றி, கவிதையிலும் இவருக்குள் ஆர்வம் கிளை விரித்தது. டாக்டர் மைசெஸ் என்ற புனைப் பெயரில் பல கவிதைகள் எழுதினார். 1895-ல் அழகியல் உண்மைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

மனம், உளவியல், உடல், அழகியல் என எதுவாக இருந்தாலும் அவற்றை விஞ்ஞான மற்றும் கணித அடிப்படையில் உறுதிப்படுத்த முற்பட்டார். எனவே இவர் உளவியற்பியல் (Psychophysics) மற்றும் ஒட்டுமொத்த சோதனை உளவியலின் தோற்றுநராக கருதப்படுகிறார்.

மேற்கோள்[தொகு]

  1. Fancher, R. E. (1996). Pioneers of Psychology (3rd ). New York: W. W. Norton & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-393-96994-0. https://archive.org/details/pioneersofpsycho0000fanc. 
  2. Sheynin, Oscar (2004), "Fechner as a statistician.", The British journal of mathematical and statistical psychology (published May 2004), vol. 57, no. Pt 1, pp. 53–72, doi:10.1348/000711004849196, PMID 15171801
  3. Michael Heidelberger (2004). "1: Life and Work". Nature from within: Gustav Theodor Fechner and his Psychophysical Worldview. University of Pittsburgh Press. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780822970774. https://archive.org/details/naturefromwithin0000heid_e3o7. "The study of medicine also contributed to a loss of religious faith and to becoming atheist." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஸ்டாவ்_பெச்னர்&oldid=3583133" இலிருந்து மீள்விக்கப்பட்டது