குளோரோகுயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குளோரோகுயின் மூலக்கூற்றுக் கட்டமைப்பு

குளோரோகுயின் (Chloroquine) என்பது பிரதானமாக மலேரியாக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். எனினும் இது அனைத்து வகை மலேரியாத் தொற்றுக்களுக்கும் எதிராகப் பயன்படுத்த இயலாது. ஏனெனில் சில மலேரியா ஒட்டுண்ணி வகைகள் இம்மருந்தின் தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக இம்மருந்துக்கு எதிர்ப்புத்தன்மையை அடைந்துள்ளன. இது அமீபா வயிற்றுளைவு, முடக்கு வாதம், லூபஸ் நோய் ஆகியவற்றுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது. தற்பொழுது (2020) உலகளாவிய தொற்றுநோயாகப் பரவிவரும் 2019–20 கொரோனாவைரசுத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு பயன்படுத்த முடியும் எனச் சில ஆரம்ப ஆராய்ச்சிச் செய்திகள் வெளிப்படுத்தியுள்ளன[1]. உணவில் வெறுப்பு, தோல் அரிப்பு, வயிற்றோட்டம் ஆகியன இதன் பொதுவான பக்கவிளைவுகளாகும். வலிப்பு, கண் பார்வைப்பாதிப்புப் போன்ற பாதிப்புக் கூடிய பக்கவிளைவுகளும் சிலரிடத்தில் ஏற்படக்கூடும். இது 1934ஆம் ஆண்டு ஹான்ஸ் அன்டெர்சக் என்பவரால் உருவாக்கிற்று[2].

மருத்துவப் பயன்பாடுகள்[தொகு]

மலேரியா[தொகு]

தற்போது Plasmodium vivax ஒட்டுண்ணியால் ஏற்படுத்தப்படும் மலேரியாக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றது. Plasmodium falciparum ஒட்டுண்ணி வகை இம்மருந்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவதால் அதனால் ஏற்படுத்தப்படும் மலேரியாக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதில்லை. Plasmodium vivax ஒட்டுண்ணியின் புணரிக்குழிய நிலைக்கு (Gametocyte) எதிராகச் சிறப்பாகச் செயற்படக்கூடியது. மற்றைய இலிங்கமில் நிலைகளுக்கு எதிராகவும் செயற்படக்கூடியது. Plasmodium falciparum வகை ஒட்டுண்ணியால் ஏற்படுத்தப்படும் மலேரியாக்கு தற்போது ஆர்டிமிசின் என்னும் மருந்தே பயன்படுத்தப்படுகின்றது. [3]. இம்மருந்து பரந்தளவில் மலேரியாக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதால் இம்மருந்துக்கு எதிராக ஒட்டுண்ணி எதிர்ப்புத்தன்மை பல நாடுகளில் உள்ளது.

அமீபாத் தொற்று[தொகு]

மெட்ரோனைடசோல் உடன் இணைந்தவாறு Entamoeba histolyticaவால் ஏற்படுத்தப்படும் வயிற்றுளைவுக்கெதிராகவும், ஈரல் தொற்றுக்கெதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது.

2019–20 கொரோனாவைரசுத் தொற்று[தொகு]

சீன விஞ்ஞானக் கல்வி நிறுவனத்தினாலும், சீன ராணுவ மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தாலும் நடத்தப்பட்ட ஆய்வில் குளோரோகுயின் சிறப்பான பெறுபேற்றை 100க்கும் மேற்பட்ட நோயாளிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் நியூமோனியா நிலையைக் குறைப்பதிலும், நோய்க்காலத்தைக் குறைப்பதிலும், வைரஸ் வெளியேற்றலிலும் பெரியளவில் பங்களித்துள்ளது. எனினும் இவ்வாய்வு 10 வேறுபட்ட வைத்தியசாலைகளில் நடத்தப்பட்டதால், இம்மருந்து தொடர்பில் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன [4]. நீண்ட கால பாவனையின் போது இதயப்பாதிப்புக்கான வாய்ப்பு இருந்தாலும், அதிக நோயாளிகளில் இது அப்பாதிப்பில்லாமல் வேலை செய்துள்ளது. குளோரோகுயினை ஒத்த ஐதரொக்சி-குளோரோகுயின் எனும் மருந்தும் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. அசித்ரோமைசினுடன் இணைந்தவாறும் இம்மருந்து ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது[5].

மருந்தியல்[தொகு]

குளோரோகுயின் சிறப்பாக உணவுக்கால்வாய்த் தொகுதியால் நன்றாக உறிஞ்சப்படுகின்றது. அது பல்வேறு இழையங்களிலும் செறிவாக்கப்படுகின்றது (பரவலாக்கல் கனவளவு (volume of distribution) = 200-800 L/kg). உதாரணமாக செங்குழியங்கள், ஈரல், மண்ணீரல், விழிவெண்படலம், விழித்திரை ஆகிய இழையங்களில் செறிவாகும். மருந்து விழித்திரையில் அளவுக்கதிகமாகச் செறிவதால் பார்வை மங்கல், பார்வை இழப்பு ஆகியன ஏற்பட இயலும். மருந்து உள்ளெடுப்பை நிறுத்திய பின்னரும், இவ்விழையங்களிலிருந்து சிறிது சிறிதாக வெளியிடப்படிகின்றது. இதனால் இதன் அரைவாழ்வுக் காலம் 50 மணித்தியாலங்களாகும். இம்மருந்தின் 60% குருதித் திரிவவிழைய புரதங்களில் இணைந்தவாறு கொண்டுசெல்லப்படுகின்றது. இதன் 50% ஈரலினாலும், 50% சிறுநீரகத்தாலும் வெளியேற்றப்படுகின்றது. இம்மருந்தை உணவுடன் அல்லது உணவு உட்கொண்டவுடன் எடுத்தல் சிறந்தது. குளோரோகுயின் 150mg வில்லைகளாகப் பாவனையில் உள்ளது.[6] [7].

பக்க விளைவுகள்:[8]

 • தலைவலி
 • தோலரிப்பு
 • வலிப்பு
 • வாந்தி
 • பார்வை மங்குதல்
 • இதயத்துடிப்பில் மாறுதல்கள்

உசாத்துணை[தொகு]

 1. "Information for Clinicians on Therapeutic Options for COVID-19 Patients". Centres for Disease Control and Prevention. Centres for Disease Control and Prevention. 22/03/2020 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 2. Charles Cook, Gordon; Zumla, Alimuddin (2009). Manson's Tropical Diseases (illustrated ). Elsevier Health Sciences. பக். 1240. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1416044701. https://books.google.lk/books?id=CF2INI0O6l0C&pg=PA1240&redir_esc=y#v=onepage&q&f=false. 
 3. Sri Lanka Student Formulary. Department of Pharmacology. 2018. பக். 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-955-703-001-2. https://med.pdn.ac.lk/news/morenews/2019/march/Sri%20Lanka%20Student%20Formulary%20notice.pdf. 
 4. Touret, Franck; de Lamballerie, Xavier (29/02/2020). "Of chloroquine and COVID-19". Antiviral Research 177. 
 5. "Information for Clinicians on Therapeutic Options for COVID-19 Patients". Centres for Disease Control and Prevention. Centres for Disease Control and Prevention. 22/03/2020 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 6. Sri Lanka Student Formulary. Department of Pharmacology. 2018. பக். 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-955-703-001-2. https://med.pdn.ac.lk/news/morenews/2019/march/Sri%20Lanka%20Student%20Formulary%20notice.pdf. 
 7. Ducharme, Julie; Farinotti, Robert (25/10/2012). "Clinical Pharmacokinetics and Metabolism of Chloroquine". Clinical Pharmacokinetics 59 (3). https://link.springer.com/article/10.2165/00003088-199631040-00003. 
 8. Whalen, Karen; Finkel, Richard; A. Panavelil, Thomas. Lippincott Illustrated Reviews: Pharmacology (6 ). Wolters Kluwer Health. பக். 552. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4511-9177-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரோகுயின்&oldid=2965904" இருந்து மீள்விக்கப்பட்டது