குளிர்காலக் கதிர்த்திருப்பம்
நிகழ்வு | சமஇரவு | கதிர்த் திருப்பம் |
சமஇரவு | கதிர்த் திருப்பம் | ||||
---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | மார்ச்சு | சூன் | செப்டம்பர் | திசம்பர் | ||||
ஆண்டு | நாள் | நேரம் | நாள் | நேரம் | நாள் | நேரம் | நாள் | நேரம் |
2019 | 20 | 21:58 | 21 | 15:54 | 23 | 07:50 | 22 | 04:19 |
2020 | 20 | 03:50 | 20 | 21:43 | 22 | 13:31 | 21 | 10:03 |
2021 | 20 | 09:37 | 21 | 03:32 | 22 | 19:21 | 21 | 15:59 |
2022 | 20 | 15:33 | 21 | 09:14 | 23 | 01:04 | 21 | 21:48 |
2023 | 20 | 21:25 | 21 | 14:58 | 23 | 06:50 | 22 | 03:28 |
2024 | 20 | 03:07 | 20 | 20:51 | 22 | 12:44 | 21 | 09:20 |
2025 | 20 | 09:02 | 21 | 02:42 | 22 | 18:20 | 21 | 15:03 |
2026 | 20 | 14:46 | 21 | 08:25 | 23 | 00:06 | 21 | 20:50 |
2027 | 20 | 20:25 | 21 | 14:11 | 23 | 06:02 | 22 | 02:43 |
2028 | 20 | 02:17 | 20 | 20:02 | 22 | 11:45 | 21 | 08:20 |
2029 | 20 | 08:01 | 21 | 01:48 | 22 | 17:37 | 21 | 14:14 |
குளிர்காலக் கதிர்த்திருப்பம் | |
---|---|
கலிஃபோர்னியாவிலுள்ள லோரன்சு அறிவியல் மண்டபத்தில் குளிர்காலக் கதிர்த்திருப்பத்தின்போது சன்சுடோன்சு II ஐப் பயன்படுத்தி ஞாயிற்று மறைவை அவதானிக்கும் பார்வையாளர்கள். | |
பிற பெயர்(கள்) | நடுக் குளிர்காலம்; மிகக் குறுகிய நாள்; மிகநீண்ட இரவு |
கடைபிடிப்போர் | பல்வேறு பண்பாடுகள் |
வகை | பண்பாடு, வானியல் |
முக்கியத்துவம் | வானியல் அடிப்படையில் பகற்பொழுது நீளுதலும் இரவுப்பொழுது குறுகுதலும் துவங்கும் நாள் |
கொண்டாட்டங்கள் | திருவிழாக்கள், தமது உறவினருடன் பொழுதுபோக்கல், விருந்து, ஆடல், பாடல், தீமூட்டல் |
நாள் | திசம்பர் 21 அளவில் (வடவரைக்கோளம்) சூன் 21 அளவில் (தென்னரைக்கோளம்) |
நிகழ்வு | ஆண்டில் இருமுறை (ஆறு மாத இடைவெளியில் வட மற்றும் தென்னரைக் கோளங்களுக்கு ஒன்று வீதம்) |
தொடர்புடையன | குளிர்காலப் பண்டிகைகள் |
குளிர்காலக் கதிர்த்திருப்பம் (winter solstice), அல்லது ஓய்வுறுநிலைக் கதிர்த்திருப்பம் (hibernal solstice) என்பது புவியின் ஏதேனுமொரு துருவங்களில் ஒன்று ஞாயிற்றிலிருந்து விலகித் தனது அதியுயர் சாய்வை எட்டும் நிகழ்வாகும். இந்நிகழ்வு ஓராண்டில், புவியின் ஓர் (வட மற்றும் தென்) அரைக்கோளத்துக்கு ஒன்று வீதம் இருமுறை நிகழும். குளிர்காலக் கதிர்த்திருப்ப நாள் அக் குறித்த அரைக்கோளத்துக்கு கதிரவ ஒளி மிகக் குறுகிய காலம் கிட்டும் நாளாகவும், குறித்த ஆண்டில் மிக நீண்ட இரவைக் கொண்ட நாளாகவும் இருக்கும். மேலும், அந்நாளில் கதிரவன் வானில் ஒரு நாளில் எட்டும் உச்சப்புள்ளி மிகத் தாழ்வாகவும் இருக்கும்.[3] குளிர்காலக் கதிர்த்திருப்பத்தின்போது, துருவப் பகுதிகள் தொடர்ச்சியான இருள் அல்லது சந்தியொளி சூழ்ந்ததாக விளங்கும்.
குளிர்காலக் கதிர்த்திருப்பமானது குறித்த அரைக்கோளத்தின் குளிர்காலத்தில் நிகழும். வடவரைக்கோளத்தில் இது திசம்பர்க் கதிர்த்திருப்பமாகவும் (பொதுவாக திசம்பர் 21 அல்லது 22) தென்னரைக்கோளத்தில் சூன் கதிர்த்திருப்பமாகவும் (பொதுவாக சூன் 20 அல்லது 21) காணப்படும். குளிர்காலக் கதிர்த்திருப்பம் என்பது ஒரு குறித்த கண நேரம் மட்டுமே ஏற்படும் எனினும் இச்சொல் அந்நிகழ்வு நடைபெறும் முழு நாளையும் குறித்து நிற்கும். குளிர்காலக் கதிர்த்திருப்பத்தைக் குறிக்க "நடுக் குளிர்காலம்" எனும் சொல் பயன்படுத்தப்பட்டாலும் அச்சொல்லுக்கு வேறு பொருள்களும் உண்டு. பாரம்பரியமாக, பல மிதவெப்பக் காலநிலைப் பிராந்தியங்களில், குளிர்காலக் கதிர்த்திருப்பமானது குளிர்காலத்தின் நடுப்பகுதியாகக் காணப்படுகிறது. இருப்பினும் இன்று சில நாடுகளிலும் நாட்காட்டிகளிலும் இது குளிர்காலத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. இது "குளிர்காலத்தின் உச்சம்" (டோங்சி), அல்லது "குறுகிய நாள்" எனும் சொற்களாலும் அடையாளப்படுத்தப் படுகிறது.
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே, குளிர்காலக் கதிர்த்திருப்பமானது பல பண்பாடுகளில் ஆண்டின் முக்கியமான ஒரு நேரப்பகுதியாக விளங்கி வருகிறது. மேலும் இது தொடர்பான பல்வேறு திருவிழாக்கள் மற்றும் சடங்குகளும் நடைபெறுகின்றன.[4] இக்காலப்பகுதியில், பகற்பொழுது குறைந்துவரும் போக்கு நின்று மீண்டும் கூடும் போக்குத் தொடங்குவதால், இது அடையாள ரீதியில் கதிரவனின் இறப்பையும் மறுபிறப்பையும் குறித்து நிற்கிறது. பகல்நேரம் படிப்படியாக குறைந்து வருவது தலைகீழாக மாறி மீண்டும் வளரத் தொடங்குகிறது. நியூக்ரேஞ்ச், இசுட்டோன்எஞ்ச், மற்றும் ககோக்கியா வூட்எஞ்ச் போன்ற சில பண்டைய நினைவுச்சின்னங்கள் குளிர்காலக் கதிர்த்திருப்பத்தின்போது விடியல் அல்லது ஞாயிற்று மறைவுடன் தம்மை ஒருங்கிசைவு செய்து கொள்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Astronomical Applications Department of USNO. "Earth's Seasons - Equinoxes, Solstices, Perihelion, and Aphelion". பார்க்கப்பட்ட நாள் 2022-08-01.
- ↑ "Solstices and Equinoxes: 2001 to 2100". AstroPixels.com. 20 February 2018. பார்க்கப்பட்ட நாள் 21 December 2018.
- ↑ Shipman, James; Wilson, Jerry D.; Todd, Aaron (2007). "Section 15.5". An Introduction to Physical Science (12th ed.). Boston: Houghton Mifflin. p. 423. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-618-92696-1.
- ↑ "Winter Solstice celebrations: a.k.a. Christmas, Saturnalia, Yule, the Long Night, the start of Winter, etc". Religious Tolerance.org. August 5, 2015 [December 3, 1999].