உள்ளடக்கத்துக்குச் செல்

குறுமொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறுமொழி (slang) என்பது ஒரு மொழியிலோ அல்லது கிளைமொழிகளிலோ பொது வழக்கில் இல்லாத சொற்களையும் வெளிப்பாடுகளையும் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட குழுவினர் தமக்குள் பேசிக்கொள்வதற்காகவே இதனைச் செயற்கையாக உருவாக்கிக் கொள்கின்றனர். சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத துறைகளில் பெரும்பாலும் குறுமொழிகள் வழங்குவதைக் காணலாம். திருடர்கள், ஏமாற்றிப் பிழைப்போர், கடத்தல்காரர் போன்றோரின் குழுக்கள் இவற்றுள் அடங்கும் ஒரு குழுவினர் தம்மைத் தனியாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் குறுமொழியைப் பயன்படுத்துகிறார்கள். கல்லூரி மாணவர்கள் போன்றோர் இவ்வாறானவர்களுள் அடங்குவர். குறும்பு மனப்பான்மையாலும், உயர்வு மனப்பான்மையாலும் கூடக் குறுமொழிகள் படைக்கப்படுகின்றன.[1]

பயனின்றித் தொணதொணவெனப் பேசிக்கொண்டிருப்பதை "அறுவை" என்ற சொல்லால் வழங்கும் வழக்கம் மாணவர்களிடையே உண்டு. இது குறுமொழி வகையைச் சார்ந்தது. இதுபோலவே "மொக்கை போடுதல்", பெண்களைக் குறிப்பதற்காக வழங்கும் "ஃபிகர்" போன்ற சொற்களும் மாணவர்களிடையே வழங்கிவரும் குறுமொழிகளே.

வரைவிலக்கணம்

[தொகு]

மிகச் சில மொழியியலாளர்களே குறுமொழி என்பது என்ன என்பதற்கான வரைவிலக்கணத்தைக் காண முற்பட்டுள்ளனர்[2] பெத்தனி கே துமாசு, ஜொனதன் லைட்டர் ஆகிய இருவரும் பின்வருவனவற்றும் ஏதாவது இரண்டை நிறைவு செய்தால் மட்டுமே ஒரு வெளிப்பாட்டைக் குறுமொழி எனலாம் என்கின்றனர்.

  1. தற்காலிகமாகவேனும் பொதுப் பேச்சு அல்லது எழுத்து வழக்கின் தரத்தைக் குறைப்பதாக இருக்கும், அதாவது, இவ்வெளிப்பாடு பொதுவழக்கின் அடிப்படையில் பிழையாகக் கருதப்படலாம்.
  2. இதைப் பயன்படுத்துபவர் இந்த வெளிப்பாடு குறிக்கும் பொருள் குறித்து அறிந்தவராக இருக்கவேண்டும். ஒரு குழுவாக இருப்பின் அவர்கள் அதுகுறித்து அறிந்தவர்களாகவும், அதனைப் பயன்படுத்துபவர்களாகவும் இருக்கவேண்டும்.
  3. உயர்ந்த சமூக நிலையில் உள்ளவர்கள் அல்லது பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் பொதுவாகப் பயன்படுத்த முடியாதவாறு சமூகத்தால் ஏற்கப்படாததாக இருக்கவேண்டும்.
  4. ஒத்த பொருள் தரும் வழமையான சொல்லுக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்துவதாக இருக்கவேண்டும். வழமையான சொல்லைப் பயன்படுத்தும்போது ஏற்படக்கூடிய இக்கட்டைத் தவிர்ப்பதற்காகவே மாற்றுச் சொல் பயன்படுகிறது.

உருவாக்கமும் பயன்பாடும்

[தொகு]

குறுமொழி ஒரு குறித்த பகுதியில் மட்டும் பேசப்படுவதனால் இது ஒரு பகுதிக்குரியதாக அமைவது உண்டு. ஆனால், குறுமொழிகள் பொதுவாக உட்பண்பாட்டுக் குழுக்களுக்கு உரியனவாகவே உள்ளன. அதே நேரம் குறுமொழிச் சொற்களின் பயன்பாடு அவை தொடக்கத்தில் பயன்பட்ட குழுக்களுக்கும் வெளியே பரவுவதும் உண்டு. இதனால் இவை பொது மொழிவழக்காக மாறிவிடுவதையும் காணலாம். இவ்வாறு குறுமொழிச் சொற்கள் அவை தொடங்கிய உட்பண்பாட்டுக் குழுவுக்கு வெளியே பரவிப் பொதுச் சொல்லாகும்போது. அதை உருவாக்கிய உட்பண்பாட்டுக் குழு அச்சொல்லுக்குப் பதிலாகப் புதிய குறுமொழிகளை உருவாக்கிக் கொள்கின்றன.

குறுமொழி உருவாக்கப்படுவதன் நோக்கம் பொதுமொழியில் உள்ள சொற்களைப் பயன்படுத்தி ஒரு பொருளை ஆற்றலுடன் வெளிப்படுத்துவதே என்றும் கூறுவர். குறுமொழிகள் பொது மொழியில் வழங்கும் சொற்களைப்போல் நீண்டகாலம் நிலைத்து இருப்பதில்லை. சொற்களின் புதுமைக் கவர்ச்சி குறையும்போது அவை வழக்கிழந்துவிடுகின்றன.

குறிப்புகள்

[தொகு]
  1. வரதராசன், மு.,2006, பக். 184
  2. Dumas, Bethany K. and Lighter, Jonathan (1978) "Is Slang a Word for Linguists?" American Speech 53 (5): 14-15.

உசாத்துணைகள்

[தொகு]
  • வரதராசன், மு., மொழிவரலாறு, பாரி நிலையம், சென்னை, 2006, (முதற்பதிப்பு 1954)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுமொழி&oldid=3651778" இலிருந்து மீள்விக்கப்பட்டது