உள்ளடக்கத்துக்குச் செல்

கும்மிப் பாடல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கும்மிப்பாடல் வெண்பாவின் பாவினத்தைச் சார்ந்தது. மகளிர் குழுமிக் கைகொட்டி விளையாடும் பொழுது பாடுவதே கும்மி ஆகும். கும்மிப் பாடல் வெண்பா இனத்தைச் சார்ந்தது; வெண்டளை மட்டுமே அமைந்த எழுசீர்க் கழிநெடிலடிகள் ஓர் எதுகை கொண்டு அமைவது; ஈற்றுச் சீர் பெரும்பாலும் விளங்காய்ச் சீராக வரும். இயற்கும்மி, ஒயிற் கும்மி, ஓரடிக் கும்மி என்பன கும்மியின் வகைகளாகும்.

இயற்கும்மி

[தொகு]

ஓரடியில் ஏழு சீர்கள் அமையும். அது 4 சீர், 3 சீர் என மடக்கி எழுதப்படும். இவ்வாறு 2 அடியும் 4 வரியும் கொண்டதாக அமையும். முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனை பெறும்.

ஒயிற் கும்மி

[தொகு]

மூன்று அடிகளில் அமையும். முதலடி இருவரிகளிலும், இரண்டாமடி இரு வரிகளிலும், மூன்றாமடி ஒரு வரியிலும் அமையும். இரண்டாமடி முடுகியல் அடியாக வரும்; வெண்டளை பெறவேண்டியதில்லை. ஆனால் முதலடியும் மூன்றாமடியும் வெண்டளை பெற்று வரும். அடிகள் தோறும் மோனை அமைதல் நன்று. முடுகியலடியின் 1, 3 சீர்கள் மோனை பெறும்.

ஓரடிக் கும்மி

[தொகு]

கும்மியின் இலக்கணம் அமையப் பெற்ற எழுசீர்க் கழிநெடிலடி ஒன்றே, பொருள் முற்றிவரின் அஃது ஓரடிக் கும்மி எனப்படும். முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனையோ, எதுகையோ பெற்றுச் சிறந்து வரும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்மிப்_பாடல்கள்&oldid=3486682" இலிருந்து மீள்விக்கப்பட்டது